தீராத பிரமிப்பும் பெருமிதமும்!
பாலாஜி ஐயாவைச் சந்திக்க
வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. நீண்ட நாள் நிறைவேறாமல் நீண்டு கொண்டிருந்ததால் அதைக்
கனவு என்றும் சொல்லலாம். இப்போதுதான் அந்த ஆசை நிறைவேறியது. கனவு நினைவானது.
அன்று பாலாஜி ஐயாவைப் பார்த்ததற்கும்
இன்று பார்ப்பதற்கும் கொஞ்சம் கூட வேறுபாடில்லை. நான் சற்று பூசினாற்போல் சதை போட்டிருப்பார்
என்ற முன் அனுமானத்தில் இருந்தேன். என் அனுமானத்தை ஆரம்பத் தோற்றம் தந்ததில் தவிடு
பொடியாக்கி விட்டார்.
தோற்றத்தில் மட்டுமா? பேசுவதில்,
பழகுவதில், வாஞ்சையோடு விசாரிப்பதில் என்று எதிலும் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம்
ஒன்றே மாறாத தத்துவம் என்பது அவரிடம் பொய்த்துப் போய் விட்டதோ என்று ஒரு நிமிடம் அதிர்ந்து
போனேன்.
மிகுந்த நேர்மையும் கொள்கைப்
பிடிப்பும் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக்கியிருக்கும் என்ற என்னுடைய ஒரு கணிப்பு மட்டும்
உண்மையாகியிருந்ததை அவருடைய நூலக அறையில் இருந்த மாத்திரைகள் கட்டியங் கூறிக் கொண்டிருந்தன.
எப்படி ஒரு மனிதரால் மாற்றம்
இல்லாமல் அப்படியே வாழ முடியும்? தவறான பாதையில் செல்லும் போதுதானே சரியான பாதையை நோக்கிய
மாற்றம் தேவைப்படும். சரியான பாதையில் சென்று கொண்டிருப்பவருக்கு அதில் என்ன மாற்றம்
வேண்டிக் கிடக்கிறது என்பதை எடுத்துச் சொல்வதைப் போலத்தான் அவருடைய வெள்ளந்தியான பேச்சும்
சிரிப்பும் எனக்கு மீண்டும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தன.
ஓர் ஆசிரியரின் திருமணத்தைப்
பார்ப்பதற்கு எத்தனை மாணவர்களுக்குக் கொடுப்பினை இருக்கும்? எனக்கு அந்தக் கொடுப்பினை
இருந்தது. பாலாஜி ஐயா அவருடைய திருமணத்திற்கு என்னை அழைத்து இருந்தார். அப்போது பனிரெண்டாம்
வகுப்பு முடித்திருந்தேன் என்று நினைக்கிறேன். அதுதான் நான் அவரை இதற்கு முன்பு கடைசியாகச்
சந்தித்தது.
வாசிப்பில் பாலாஜி ஐயாவை
மிஞ்ச முடியாது. ஐம்பதைக் கடந்த இந்த வயதிலும் ஓர் இளைஞருக்கான தோற்றத்திலே இருக்கிறார்.
அவரையும் என்னையும் அருகருகே நிற்க வைத்தால் என்னை வயதானவர் என்றும் அவரை என்னை விட
இளையவர் என்று சொல்லி விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. இளைஞருக்கான துடிப்புடனேயே
இப்போதும் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கும் என் ஆசிரியருக்கும்
வாசிப்பில் ஒரு போட்டி வைத்தால் அவர் முயல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார், நான்
ஆமை வேகத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
இவ்வளவு ஆண்டுகள் வாசித்தும்
வாசிப்பில் ஒரு சலிப்பு வர வேண்டுமே. இன்னும் திகட்ட திகட்டத்தான் வாசிப்பதைப் பற்றிப்
பேசுகிறார், பகிர்கிறார். இதென்ன தித்திப்பா தின்ன தின்ன திகட்ட, வாசிப்பு என்பதே அவரது பதிலாக இருக்கிறது.
வாசிப்பு அவரது சுவாசிப்பாகி விட்டது. சுவாசிப்பதை எப்படி நிறுத்த முடியும் என்பதைப்
போல வாசிப்பை நேசித்து வாசித்துக் கொண்டிருக்கிறார்.
முகநூலில் ‘கருப்பம்புலம்
பாலாஜி’ என்று தேடினால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எவ்வளவு
களப்பணிகள், கல்விப் பணிகள், சமூகப் பணிகள். ஒவ்வொரு நாளையும் அப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தால்
மட்டுமே அவ்வளவும் சாத்தியம்.
வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள
அத்தனை இலக்கிய அமைப்புகளுடனும் தொடர்பில் இருக்கிறார். இலக்கிய ஆளுமைகள் அனைவரோடும்
தோழமையோடு இருக்கிறார். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். தனது இல்லத்திலும்
இலக்கியக் கூடல்களை ஒருங்கிணைக்கிறார்.
முதற்பதிப்பு கண்ட பல தமிழ்
நூல்கள் அவரின் நூலகச் சேகரிப்பில் இருக்கின்றன. தொன்மையான பல ஆய்வு நூல்கள் அவர் கைவசம்
இருக்கின்றன. தனது இல்லத்தின் மேல் மாடி முழுவதையும் அரிய நூல்கள் அடங்கிய ஆவணக் காப்பகமாய்
வைத்திருக்கிறார்.
தன்னுடைய வகுப்பறையிலும்
வகுப்பறை நூலகங்களை அமைத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆய்வு மாணவர்களுக்கும்
வழிகாட்டியாக நூல்களை ஆற்றுப்படுத்துகிறார்.
மாணவர்களிடம் மரக்கன்றுகளை
வளர்க்கும் ஆர்வத்தைத் தூண்டி இயற்கை நேயம் பேணுகிறார். மாணவர்களின் கையில் புகைப்படக்
கருவிகளைக் கொடுத்து அரிய உயிரினங்களைப் படமாக்கச் செய்து உயிர் நேயம் கொள்ள கற்றுத்
தருகிறார்.
மாணவப் பருவத்தில் ஆசிரியர்களிடம்
இருக்கும் பிரமிப்பானது அந்தப் பருவத்தைக் கடந்த பிறகு போய் விடுவதுண்டு. எனக்கென்னவோ
பாலாஜி ஐயா மீதான பிரமிப்பு இப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறையாத வாசிப்பும்
குன்றாத ஆசிரியப் பணியின் மீதான காதலும்தான் அவர் மீதான பிரமிப்பை அதிகப்படுத்திக்
கொண்டே போகின்றன என்று நினைக்கிறேன்.
ஆசிரியர் பட்டயப் பயிற்சியை
முடித்து விட்டு தமிழக அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வெழுதி புள்ளம்பாடி
ஊராட்சி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக 1994இல் பணியேற்றவர் அடுத்த ஆண்டே இடைநிலை
ஆசிரியராக 1995 இல் புள்ளமங்கலத்தில் பணியேற்றார். பதினோரு ஆண்டுகள் புள்ளமங்கலத்தில்
பணியாற்றியவர் அதன் பிறகு திருமருகல், தகட்டூர் பள்ளிகளில் பணியாற்றி 2008இல் தமிழாசிரியராகக்
கரியாபட்டினத்தில் பணியேற்றார். 2017லிருந்து தாம் பிறந்து வளர்ந்து கல்வி பயின்ற கருப்பம்புலம்
பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஒரு மாணவராகப் பார்த்த என்னை
ஓர் ஆசிரியராகப் பார்ப்பதில் அவருக்கு நிச்சயம் மனதுக்குள் ஒரு பெருமிதம் இருக்கும்.
அன்று பார்த்த ஆசிரியரைத் தோற்றத்திலும் பேச்சிலும் பழக்கத்திலும் பணியாற்றுவதிலும்
அப்படியே இன்றும் பார்ப்பதில் அதை விட எனக்குப் பெருமிதமாக இருக்கிறது.
பாரதி மற்றும் ஜெயகாந்தனின்
சமூகக் கோபம் பாலாஜி ஐயாவுக்கும் உண்டு. வள்ளுவரிலும் கம்பரிலும் தோய்ந்து தோய்ந்து
ஆழம் காண முடியாத மலைப்பும் திகைப்பும் இப்போதும் அவர் கண்களில் தெரிகிறது.
அப்போது பாலாஜி ஐயாவைப் பார்த்த
போது தனிப்பாடல் திரட்டைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவரைப்
போல வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டது பசுமையாக அப்படியே நினைவில் இருக்கிறது.
இப்போது பாலாஜி ஐயாவைப் பார்க்கும் போதும் அதே நினைவு அப்படியே மீள வருகிறது. இந்த
நினைவை எந்த ஜென்மத்திலும் மாற்ற முடியாது போலிருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி
பதினாறு அடி பாய வேண்டும் என்பார்கள். ஆனால் நான் இன்னும் நான்கடி பாயும் குட்டியாகவே
இருப்பதால் பாலாஜி ஐயாவின் மீதான பெருமிதமும் பிரமிப்பும் அப்படியேத்தான் இருக்கும்.
காலம் ஒரு நாள் பதினாறு அடி பாயும் வல்லமையைத் தந்தாலும் எனக்கு அந்தப் பெருமிதமும்
பிரமிப்பும் குறைய வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது அவர் முப்பத்திரண்டு அடி பாய்பவராக
இருப்பார்.
*****
No comments:
Post a Comment