ஆபர்களுக்கு நாட்கள் போதவில்லை!
முன்பெல்லாம் ஆடி ஆபர் ஒன்றுதான்
இருந்தது.
படிப்படியாக தீபாவளி ஆபர்
வந்தது. பொங்கலை விட்டு விட முடியுமா என்று பொங்கல் ஆபரும் வந்தது. நியூ இயர் கோபித்துக்
கொள்ளக் கூடாதே என்று நியூ இயர் ஆபரும் வந்தது.
சம்மர், வின்டர் எல்லாம்
என்ன பாவம் செய்தன என்று சம்மர் ஆபர், வின்டர் ஆபர் எல்லாம் வந்து இப்போது வருடத்தின்
முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் ஆபர்தான்.
வருடத்திற்கு முன்னூற்று
அறுபத்தைந்தே கால் நாட்கள். இந்த கால் நாள் மட்டும் எப்படியோ தப்பி விட்டது. அல்லது வருடம் முழுவதும்
ஆபர் கொடுக்கும் ஆட்கள் அந்த கால் நாளை அந்த வருடத்திற்கான ஆபராகக் கொடுத்து விட்டார்கள்
போல.
என்னடா வருடம் 365 நாட்களோடு
நின்று விட்டதே என்ற வருத்தம் ஆபர் ஆசாமிகளுக்கு. இன்னும் சில ஆபர் நாட்களை உருவாக்கலாம்
என்று பார்த்தால் வருடாந்திர நாட்கணக்கு செய்தது அநியாயம்தானே.
*****
உங்களை வாங்கும் பொருட்கள்!
பொருட்கள் தேவைதான். நாம்
தேவையான பொருட்களைத்தான் வாங்குகிறோமா?
பொருட்களை நாம் வாங்குகிறோமா?
நம்மைப் பொருட்கள் வாங்குகின்றனவா?
எந்த வீட்டுக்குப் போனாலும்
பொருட்கள், பொருட்கள்தான். அங்கு இங்கு என்று கால் வைக்க இடமில்லை. வருஷம் முழுவதும்
ஆபர் சேல், டிஸ்கௌண்ட் சேல் போன்று போட்டுத் தள்ளிக் கொண்டு இருந்தால் மக்கள்தான் என்ன
செய்வார்கள் என்று சில நேரம் அவர்களைப் பற்றிப் பரிதாபப்படவும் தோன்றுகிறது. சில நேரங்களில்,
இப்படி வாங்கிக் குவிக்கிறார்களே இந்தச் சாம்பிராணிகள் என்று கோபப்படவும் தோன்றுகிறது.
பரிதாபப்படுவதா, கோபப்படுவதா என்று குழப்பமாகத்தான் இருக்கிறது.
தெரிந்த வங்கி, தெரியாத வங்கி,
தெரிந்த நிதி நிறுவனம், தெரியாத நிதி நிறுவனம் என்று யார் கிரெடிட் கார்டு கொடுத்தாலும்
வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஏன் இப்படி என்றால் ஒவ்வொன்றிலும் பொருட்கள் வாங்கும்
போது ஒவ்வொரு சலுகை இருப்பதாகச் சொல்கிறார்கள். அட்டையைக் கொடுத்து ஆட்டையைப் போடுகிறார்கள்
என்பது புரியாமல் மக்களும் பொக்கிஷத்தை வாங்கி வைப்பது போல வாங்கி வைத்துக் கொண்டு
கடனை மடியில் கட்டிக் கொள்கிறார்கள்.
இது போதாது என்று இரண்டு
சிம் போட்ட செல்போனைத்தான் வைத்துள்ளார்கள். இரண்டு சிம்முக்கும் எஸ்.எம்.எஸ்களும்
வாட்ஸ் ஆப் செய்திகளும், டெலிகிராம் செய்திகளும் வந்த வண்ணமாக இருக்கின்றன. வருவதெல்லாம்
இந்தப் பொருளை இந்த ஆபரில் வாங்கு, அந்தப் பொருளை அந்த ஆபரில் வாங்கு என்பதாகத்தான்
இருக்கின்றன.
இமெயில்களையும் ஒன்றுக்குப்
பத்தாக வைத்துள்ளார்கள். அவற்றிலும் அப்படித்தான் இதை வாங்கு, அதை வாங்கு என்று ஏகப்பட்ட
இமெயில்கள். ஒவ்வொன்றுக்கும் எந்த அட்டையைப் பயன்படுத்தினால் எவ்வளவு சலுகைகள் என்ற
விஸ்தீரன விளக்கங்கள் வேறு.
பேஸ்புக்கைத் திறந்தால் சொல்ல
வேண்டுமா? அதிலும் அப்படி ஏகப்பட்ட லிங்குகள், பொருட்களை வாங்குவதற்கான அழைப்புகள்.
தொலைக்காட்சியைப் பார்த்தால்,
யூடியூப்பைப் பார்த்தால் இதை வாங்கு, அதை வாங்கு என்று ஏகப்பட்ட விளம்பரங்கள்.
இவற்றையெல்லாம் பார்த்து
வாங்கித் தள்ளா விட்டால் இந்தப் பூமியில் ஒரு மனிதனா என்றுதான் தோன்றுகிறது.
இந்தப் பொருளை வாங்கினால்
அதை வைப்பதற்கு இடம் இருக்கிறதா என்று கூட யோசிக்க முடிவதில்லை. இருந்தால் இருக்கிறது,
இல்லாவிட்டால் போகிறது, அக்கம் பக்கத்து வீடுகளிலாவது வைத்துக் கொள்வோம் அல்லது வாடகைக்காவது
ஒரு வீட்டைப் பித்துக் கொள்வோம் என்றுதானே பொருட்களை வாங்குகிறோம், வாங்கித் தள்ளுகிறோம்.
ஒரு கட்டத்தில் என்னவாகிறது
என்றால் வீட்டுக்குள் நுழைய முடியாத அளவுக்குப் பொருட்களாக நிறைந்திருக்கின்றன. காலை
எங்கே வைத்து எங்கே நுழைவது என்பது புதிர்பாதையைக் கண்டுபிடித்து போவது போல இருக்கிறது.
ஆபரில் கிடைக்கிறது என்றால் ஒரு டிரெய்ன், ஏரோபிளேன் கிடைத்தாலும் வாங்கி தெருவில்
நிறுத்தி விடுவார்கள் போலிருக்கிறது.
வாங்கிய பொருட்களில் எத்தனைப்
பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்று கேள்வி எழுப்பினால் பெண்களுக்குக் கோபம் வந்து
விடுகிறது. பயன்படுத்தத்தான் பொருட்களை வாங்க வேண்டுமா? பயன்படுத்தாமல் இருக்க பொருட்களை
வாங்கக் கூடாதா? அக்கம் பக்கத்தில் காட்டி அவர்களை வெறுப்பேற்ற பொருட்களை வாங்கக் கூடாதா?
என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பயன்படுத்தாத பொருள் என்றாலும் அதை
எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவை அடுத்தவர்களை
வாயைப் பிளக்க வைக்க, நம்முடைய பணத்தை நாமே கொள்ளை அடித்து பெருநிறுவனங்களின் பையில்
போட்டு வைக்க.
எதிர்வீட்டில் ஒரு பெண்மணி
இருக்கிறார். வீட்டுக்கொரு பெண்மணி போல அந்த வீட்டில் அவர் ஒருவர் மட்டும்தான் காலத்தை
ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை ஷேவிங் ரேசர் ஒன்று ஆபரில் வந்ததாக வாங்கி வைத்திருக்கிறார்.
இதை ஏன் வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் இவ்வளவு குறைந்த விலையில் இன்னொரு முறை
கிடைக்காது, அந்த விலைக்கு வாங்கவும் முடியாது என்கிறார். இதை நீங்கள் பயன்படுத்துவதற்கு
வாய்ப்பே இல்லை என்றால் அது முக்கியமில்லை, சீப் ரேட்டில் வாங்குவது மட்டும்தான் முக்கியம்
என்கிறார்.
பிள்ளைகள் அதற்கு மேல். வீட்டிற்கு
வந்ததும் வராதுமாகச் செல்லை நோண்டத் தொடங்குகின்றன. சரி எதையாவது நோண்டிக் கொண்டு கிடக்கட்டும்
என்று பார்த்தால் மறுநாள் பொட்டலம் (பார்சல்) ஒன்று வீடு தேடி வருகிறது. நான் வேண்டுமென்று
கேட்கவில்லையே (ஆர்டர் பண்ணவில்லையே) என்று எவ்வளவு அடம் பண்ணினாலும் கேட்காமல் கையில்
திணித்து விட்டுப் போய் விடுகிறார்கள். யாரது நமக்குத் தெரியாமல் வேண்டுமென்று கேட்டிருப்பார்கள்
(ஆர்டர் பண்ணியிருப்பார்கள்) என்று பார்த்தால் சாட்சாத் பிள்ளைகளின் கேட்போலைகள்தான்
(ஆர்டர்கள்தான்) அவை. நமக்குத்தான் எப்படி வாங்குவது என்று (ஆர்டர் பண்ணவும்) தெரிய
மாட்டேன்கிறதே. அது ஒன்றுதான் பிரபஞ்சத்தில் நடக்கும் நல்லவற்றில் ஒன்று. நாமும் இணைய
வழியில் வாங்கத் தெரிந்து வாங்க ஆரம்பித்தால் (ஆர்டர் போடத் தெரிந்து ஆர்டர் போட்டால்)
வீட்டில் வந்துக் குவியும் பொருட்கள் இன்னும் சில நூறையோ, ஆயிரங்களையோ தாண்டி விடும்.
இப்படியே போனால் மனிதர்கள்
வாங்கும் பொருட்களுக்கு ஓர் அளவு இருக்காது போலிருக்கிறது. ஓர் அந்நிய விலங்கு (ஓர்
ஏலியன்), சந்திரனில் ஓரிடம் (ஒரு பிளாட்), சனிக் கோளின் ஒரு வளையம் என்றாலும் வாங்கித்தான்
தள்ளுவோம் போலிருக்கிறது.
*****
No comments:
Post a Comment