16 Nov 2023

போலிப் பிரசவங்கள்

போலிப் பிரசவங்கள்

கதை என்ற பெயரில் ஏதோ ஒன்றைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கான தர்க்க ஒழுங்கும் நியாயமும் எப்போதும் இருக்க வேண்டும். கதையிலேயே கப்சா அடிப்பது யோக்கியாம்சம் ஆகாது. அதற்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அந்தத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டுச் செய்ய வேண்டும்.

வாயால் சொல்வது, எழுத்தால் எழுதுவது எல்லாம் கதைதான். கேட்பவருக்குச் சொல்ல சொல்ல கதையில் ஒரு நியாய அம்சம் தென்பட வேண்டும். இல்லையென்றால் இதெல்லாம் சும்மா அவிழ்த்து விடுவது என்று கேட்பவரோ / வாசிப்பவரோ சொல்லி விடுவார். கதையே அவிழ்த்து விடுவதுதான். அதைத் தாண்டியும் ஏதோ அவிழ்த்து விடுகிற சங்கதி என்று கதையை நுகர்பவருக்குத் தோன்றி விட்டால் அது கதைக்கான தாத்பர்யத்தை அடையாமல் போய் விடுகிறது.

கதையைச் சொல்வதற்கு முன் அல்லது எழுதுவதற்கு முன் ஓர் உணர்வுப்பூர்வமான அனுபவம் இருக்க வேண்டும். அதிலிருந்து புனைந்து கொண்டு போகலாம். அதை விடுத்து இவரிடமிருந்து கொஞ்சம் அவரிடமிருந்து கொஞ்சம் என்று ஒவ்வொருவரிடம் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருந்தால் அது போலித்தனமான ஒன்றாகி விடும்.

சாதாரண சம்பவத்தைச் சொல்வதும் ஒரு கதைதான். கதைகளுக்கு என்று பிரமாதமான சம்பவங்கள் வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதில் நிஜம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதல்லவா அதுதான் அதற்கான தர்மம். அப்படித்தான் புனைவு கலந்திருந்தாலும் அதில் எழுதுபவரின் சுய அனுபவம் ஏதோ ஒன்று கடுகளவேனும் இருக்க வேண்டும். அது வரித்துக் கொண்டதாகவோ தழுவிக் கொண்டதாகவோ இருக்கக் கூடாது.

நல்லதோர் வீணை செய்து நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்று பாரதி சொல்வதற்கும், அதை அப்படியே பாரதியின் தாக்கத்தில் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாரதியின் வாழ்க்கையே அப்படி. அவர் சொல்லும் போது அது அடர்த்தியாக வெளிப்படும். அதை யார் படித்தாலும் அந்தச் சுரீர் தன்மை இருக்கும். அந்த வகையில் அது ஒரு வாசக அனுபவம்.

அந்த வாசக அனுபவத்தை எடுத்துக் கொண்டு நான்தான் பாரதி என்று மார் தட்டிக் கொள்ள முடியாது. அது போலியானது. பாரதிக்குப் பொருந்துகிற இந்த அனுபவம் வாசக அனுபவத்தில் எல்லா வாசகருக்கும் பொருந்தும். ஒரு படைப்பாளராகச் சொல்ல நினைத்தால் பாரதியைக் காப்பியடிப்பதாகவோ, போலச் செய்வதாகவோ ஆகி அது உங்கள் போலித்தனத்தைப் போட்டு உடைத்து விடும்.

ஒரு படைப்பின் தரம் படைப்பாளரின் அனுபவத்திலிருந்து வருகிறதா, அவரிடமிருந்து சுயம்புவாகக் கிளம்புகிறதா என்பது முக்கியம். வாசித்து வாசித்து ஒரு புலியைப் பார்த்து பூனையைப் போலச் சூட்டைப் போட்டுக் கொண்டும் ஒரு படைப்பைப் படைத்து விடலாம். அது ஏற்கப்படாமல் போனால் அதன் போலித் தன்மைக்காகத்தான் அப்படி நடக்கிறது என்பதை அந்தப் படைப்பாளர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து தமது மேதைமைக்கான வாசகர்கள் இங்கில்லை என்று பிலாக்கணம் பாடிக் கொண்டு இருக்கக் கூடாது.

நல்ல படைப்புகள் வாசிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பதும், அவற்றை வாசிக்கும் வாசகர்கள் தோன்றித்தான் ஆக வேண்டும் என்பதும் இயற்கையின் விதிகளைப் போன்றவை. அவை விவாதத்தைக் கிளர்ச்சியை உண்டு பண்ணி விட்டுதான் ஓயும். இதை ஒரு சூத்திரம் போல அளவெடுத்துக் கொண்டு செய்து விட முடியாது. பாரதிக்குப் பிறகு ஒரு பாரதியை ஒரு சூத்திரத்தால் உருவாக்கி விட முடியாது.

படைப்பு என்பது ஒரு பெருவெளிக்குள் ஓர் உண்மையைக் கனன்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதை பிரசவிப்பது. அப்படிக் கனன்று கொண்டிருப்பதை முதலில் படைப்பாளர் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. தான் கண்டு கொண்டதைத்தான் படைப்பாளர் வாசகர்களுக்கு அறிவிக்கிறார். காணாத ஒன்றைக் கண்டு கொண்டது போல அறிவிக்க முடியாது. அப்படி அறிவிப்பதுதான் போலித்தனமாகிறது.

ஒரு திருக்குறள் உண்டு.

“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தாம்கண்ட வாறு.”              (குறள், 849)

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...