29 Sept 2023

தி.ஜானகிராமனின் ‘மலர் மஞ்சம்’ – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘மலர் மஞ்சம்’ – ஓர் எளிய அறிமுகம்

மலர் மஞ்சம் தி.ஜானகிராமனின் இரண்டாவது அல்லது மூன்றாவது நாவல். அல்லது வரிசைமுறைப்படி ஐந்து நாவல்களுக்குள் ஒன்றாகவும் இருக்கலாம். அது இரண்டாவது நாவல் என்பது காலச்சுவடு வெளியீட்டின் பின்னட்டையில் உள்ள தகவல். மூன்றாவது நாவல் என்பது காலச்சுவடு வெளியிட்டுள்ள ‘ஜானகிராமம்’ என்ற தொகுப்புநூலில் உள்ள கட்டுரை ஒன்றில் உள்ள தகவல். இந்த இரு முரண்பட்ட தகவல்களால்தான் இப்படி ஒரு குழப்பமும் அதன் நீட்சியாக அதைத் தொடர்ந்து ஐந்து நாவல்களுள் ஒன்றாக இருக்கலாம் என்ற கணிப்பும் எனக்கு எழுகிறது.

‘மலர் மஞ்சம்’ 1960களில் சுதேசமித்ரனில் தொடராக வெளிவந்திருக்கிறது. 1961 இல் நாவலாக முதல் பதிப்பையும் கண்டிருக்கிறது. இதுவும் காலச்சுவடு வெளியீடு தரும் தகவல்தான். தி.ஜா.வின் படைப்புகளைத் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டு வருகிறவர்களுக்கு இது போன்ற வரிசைக்கிரமம் குறித்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தன்னையறியாமல் எழக் கூடும். அதே நேரத்தில் இந்த வரிசைமுறை ஆய்வுகள் எதற்கு, அவர் எழுத்துதான் முக்கியம் என்ற எண்ணமும் அடுத்து உடனே எழும்.

இணையத்தில் தி.ஜா.வின் நாவல்கள் குறித்துத் தேடும் போது இப்படி ஒரு வரிசைக்கிரமத்தையும் நீங்கள் பார்க்கலாம். கீழே காணும் இந்த வரிசைமுறைப்படி பார்த்தால் இந்த நாவல் தி.ஜா.வின் இரண்டாவது நாவல். மேலும் இந்த வரிசைக்கிரமத்தில் காலக்குறிப்பும் இணைந்தே இருக்கிறது. இதன் நம்பகத் தன்மை எத்தனை சதவீதம் சரியானது என்பதை ஆய்வாளர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

1)      அமிர்தம் (1945)

2)      மலர்மஞ்சம் (1961)

3)      அன்பே ஆரமுதே (1963)

4)      மோகமுள் (1964)

5)      அம்மா வந்தாள் (1966)

6)      உயிர்த்தேன் (1967)

7)      செம்பருத்தி (1968)

8)      மரப்பசு (1975)

9)      நளபாகம் (1983)

தி. ஜானகிராமனின் நாவல்களின் முதல் பதிப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு பதிப்பு கண்ட நாவல்களில் காணப்படுகின்றன. இந்த விவரங்களும் நாவலை வரிசைப்படுத்த முயல்வோருக்கு உதவுவதாக அமையும் என நினைக்கிறேன்.

வ.எண்

நாவல்

முதல் பதிப்பு

1.

அமிர்தம்

1948

2.

மோகமுள்

1956

3.

மலர் மஞ்சம்

1961

4.

அன்பே ஆரமுதே

1965

5.

அம்மா வந்தாள்

1966

6.

உயிர்த்தேன்

1967

7.

செம்பருத்தி

1968

8.

மரப்பசு

1975

9.

நளபாகம்

1983

இவற்றைக் கொண்டு வாசகர்கள் தாங்களே ஒரு முடிவுக்கு வருவதும் மேற்கொண்டு ஆய்வாளர்கள் கூறும் முடிவுகளை ஏற்பதும் தி.ஜானகிராமனின் நாவல்களின் வரிசைக்கிரமம் குறித்த முடிவுகளுக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நாவல் வரிசைப் பற்றி அண்ணன் வில்சனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு வரிசைமுறையச் சொன்னார். அவர் தி.ஜா.வைத் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளராகக் கொள்பவர். அவர் தன் மனதில் இருக்கும் ஞாபகத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த வரிசை முறையைக் கூறினார். அதனால் அவர் சொன்ன அந்த வரிசை முறையையும் கூறி விடுகிறேன்.

1)      அமிர்தம்

2)      மோகமுள்

3)      மலர் மஞ்சம்

4)      அன்பே ஆரமுதே

5)      செம்பருத்தி

6)      உயிர்த்தேன்

7)      அம்மா வந்தாள்

8)      நளபாகம்

மரப்பசு எனும் நாவல் அப்போது அவர் ஞாபகத்தில் வரவில்லையோ என்னவோ? எனக்கும் அந்த விடுபடல் அப்போது ஞாபகத்தில் வரவில்லை. இந்த நாவலைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இப்படி சில சுவாரசிய அனுபவங்கள் அதன் வரிசைக்கிரமம் பற்றி எழுந்ததால் அதைப் பதிவு செய்கிறேன். அதைத் தவிர வேறெந்த நோக்கமும் இந்தப் பதிவுகளுக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாவல் எழுதப்பட்ட வரிசைப்படி இந்த நாவல் மூன்றாவதாகவும் நூல் வடிவம் கண்ட வகையில் இரண்டாவதாகவும் இருக்கக் கூடும். இதெல்லாம் ஆய்ந்து உறுதிபடுத்த வேண்டிய விவரங்கள். இந்த விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாவலைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அதுவே ஒரு தடங்கலாகி விடவும் கூடும்.

‘மலர் மஞ்சம்’ நாவலைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் இராமையா என்ற பாத்திரத்தின் சங்கல்பத்தைச் சுற்றிச் சுழலும் ஒரு நாவல். மனைவி பாக்கியம் இல்லாதவர் இராமையா என்றுதான் அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதல் மனைவி காமாட்சி இறந்துப் போக இரண்டாவதாகக் கங்காவைக் கட்டுகிறார். கங்காவும் இறக்க பங்கஜத்தைக் கட்டுகிறார். பங்கஜம் இறந்த பிறகு நான்காவதாக அகிலாண்டத்தைக் கட்டுகிறார்.

அகிலாண்டமும் நிலைக்காமல் ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து விட்டு இறந்து போகிறார். பெண் குழந்தையா என்று அங்கலாய்க்கும் இராமையாவுக்கு அதனாலென்ன சொர்ணா அக்கா மகனுக்குக் கட்டிக் கொடுத்தால் போயிற்று என்று ஆற்றுப்படுத்தி விட்டு இறந்து போகிறார். இராமையா மனைவியின் வாக்கைச் சங்கல்பமாக எடுத்துக் கொள்கிறார். அந்தச் சங்கல்பத்தை அவர் நிகழ்த்திக் காட்டுவதற்குள் நிகழும் போராட்டங்களும் சம்பவங்களுமே ‘மலர் மஞ்சம்’ என்ற இந்த நாவல்.

வையன்னா ஒருவரைத் தவிர நாவலில் கெட்டவர்கள் யாருமில்லை எனும்படி நல்லவர்களால் நிறைந்திருக்கும் நாவல் இது. கெட்டவராக இருப்பினும் நாவலின் திருப்பங்களுக்கு வழிவகுப்பவர் வையன்னாதான்.

வையன்னாவால்தான் இராமையா தன்னுடைய பெண் குழந்தையான பாலாம்பாள் எனும் பாலியை அழைத்துக் கொண்டு கொரடாச்சேரிக்கு அருகே உள்ள இராஜாங்காடு எனும் கிராமத்தை விட்டு தஞ்சாவூருக்கு இடம் பெயருகிறார். அவர் தஞ்சாவூருக்கு இடம் பெயர்வதால் பாலிக்கு நல்ல கல்வி கிடைக்கிறது, ஆட்டக்கலைக்கு பெரியசாமி எனும் அற்புதமான குருநாதர் கிடைக்கிறார்.

தஞ்சாவூரில் இராமையா பிள்ளைக்கு ஆதுரமாக இருப்பவர் இருவர். ஒருவர் வக்கீல் நாகேச்வர அய்யர். இவர்தான் தஞ்சாவூரில் மையம் கொள்ளும் நாவலைப் பாலியின் படிப்பிற்காகப் பட்டணம் எனப்படும் சென்னைக்கு நாவலை இடம் மாற்றுபவர்.

மற்றொருவர் கோணவாய் நாயக்கர். இவர்தான் நாவலைக் காசியில் கொண்டு போய் முடித்து வைப்பவர்.

நாவல் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இடம் மாறும் இடம் அற்புதமானது. பாலியின் மனப்போராட்டம் வெளிப்படும் இடமும் சென்னைதான். பாலிக்குச் செல்லம் எனும் தோழி கிடைக்கும் இடமும் சென்னைதான். பாலிக்கும் செல்லத்திற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் தி.ஜா.வுக்கே உரிய அம்சங்களோடு இழையோடுபவை. பாலிக்குப் பாலியின் மனதைத் திறந்து காட்டுபவள் இந்தச் செல்லம்தான்.

தஞ்சையைப் போலச் சென்னையையும் அதன் கடற்கரையையும் அவ்வளவு ஈர்ப்போடு தி.ஜா. நாவலில் சித்திரிக்கும் இடங்கள் புல்லரிக்க வைப்பவை. நாவல் நிகழும் காலத்தை ஓரளவுக்கு அனுமானிக்க உதவும் இடமும் சென்னைதான். சென்னையில் டிராம் போக்குவரத்து நிகழும் காலக்கட்டம்தான் நாவலின் காலக்கட்டம்.

அதே போல நாவலின் காலக்கட்டத்தை அனுமானிக்க தஞ்சாவூரும் ஓரிடத்தில் உதவுகிறது. தஞ்சாவூரில் புது ஆறு தோண்டப்பட்ட காலத்தை ஒட்டிய காலத்தில்தான் நாவலின் கால கட்டம் நகர்கிறது. இதை இரண்டையும் ஒருங்கே இணைத்து தஞ்சாவூரில் புது ஆறு தோண்டப்பட்ட காலமும், சென்னையில் டிராம் போக்குவரத்து நிலவிய காலமும் நாவலின் காலகட்டம் எனலாம்.

1931லிருந்து 1953வரை சென்னையில் டிராம் போக்குவரத்துச் செயல்பட்டிருக்கிறது. 1934 இல் புதுஆறு திறக்கப்பட்டிருக்கிறது. 1920 லிருந்து 1940வரையிலான காலகட்டம் நாவலின் கால கட்டம் என யூகிக்க இடம் இருக்கிறது. அதற்கு முன்னே பின்னே பத்தாண்டுகள் வித்தியாசமும் இருக்கலாம்.

நாவலின் காலகட்டத்தைக் கடந்து நாவலின் கதையோட்டத்திற்குள் நுழைந்தால், இராமையா சங்கல்பம் செய்து கொண்டிருக்கும் தங்கராஜனைக் கட்டிக் கொள்வதா, மனம் நாடும் நாகேச்வர அய்யரின் பேரன் ராஜாவைக் கட்டிக் கொள்வதா என்று மனம் தடுமாறும் பாலியை ராஜாவை நோக்கி ஆற்றுப்படுத்துகிறது சென்னை.

நாவல் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது இரண்டு விதமான முடிச்சுகள் விழுகின்றன. ஒன்று இராஜாங்காட்டில் நிகழும் வையன்னாவின் கொலை. மற்றொன்று கோணவாய் நாயக்கரின் மகன் பதினாயிரம் ரூபாய் கடன் படுவது. இந்த இரண்டு முடிச்சுகளும் நாவலின் முடிவை வேறு விதமாக திசை மாற்றுகின்றன.

இந்த நாவலை தி.ஜா. இரண்டு விதமாக முடித்திருக்கலாம். பாலி ராஜாவைத் திருமணம் செய்து கொள்வதாக அல்லது தங்கராஜனைத் திருமணம் செய்து கொள்வதாக.

பாலி ராஜாவைத் திருமணம் செய்து கொள்வதற்கான நியாயங்களைத் தி.ஜா. வலுவாகப் புனைந்து கொண்டு வரும் போது வாசிப்போருக்குப் பாலிக்கும் ராஜாவுக்கும் திருமணம் நடத்து விடும் என்ற நம்பிக்கையை விதைத்து விடுகிறார். ஆனால் நாவல் இராமையாவின் விருப்பப்படி பாலிக்கும் தங்கராஜனுக்கும் திருமணம் நடைபெறுவதாக முடிகிறது.

இந்த மாறுபட்ட முடிச்சு உருவாவதற்குக் காரணமாக அமைவது வையன்னா. இராஜாங்காட்டிலிருந்து தஞ்சாவூருக்கு இராமையா போகக் காரணமாக இருக்கும் வையன்னாதான் கொலையுண்டு பாலியையும் தங்கராஜனையும் சேர்த்து வைத்து விடுகிறார்.

முதல் முடிச்சைத் தி.ஜா. அவிழ்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயிலின் கருவூரார் சந்நிதி. வையன்னா கொலையுண்ட மர்மத்தையும் தி.ஜா. அந்த இடத்தில் விடுவிக்கிறார். வையன்னா பாலியைத் ‘தேவடியாள்’ என்று சொன்ன ஒரு வார்த்தை தங்கராஜனைக் கொலைகாரனாக மாற்றி விடுகிறது. உண்மையானது தங்கராஜன் மூலமாக வெளிப்படும் இடத்தில் பாலி தங்கராஜனை மணக்க சம்மதிக்கும் முடிவை எடுத்து விடுகிறாள். 

நாவலின் இரண்டாவது முடிச்சைத் தி.ஜா. காசியில் வைத்து விடுவிக்கிறார். நாவலை இப்படி தெற்கு – வடக்கு என்று இந்தியாவின் இரு எல்லைகளில் வைத்து இந்தியர்களின் வழமையான ஆன்மிக தேடலுக்கு ஒரு நிறைவு தரும் வகையில் முடிக்கிறார்.

மகன் வாங்கிய பதினாயிரம் கடனுக்காக நண்பனான ராமையா பாரம்பரிய சொத்தை விற்கக் கூடாது என்பதற்காகவும் இராமையாவின் மகளான பாலி தனது மகனின் கடனைத் தீர்ப்பதற்காகப் பொதுவில் ஆடுவது கூடாது என்பதற்காகவும் மகனோடு அதற்கு மேல் இணக்கமாக வாழ முடியாது என்ற முடிவாலும் கோணவாய் நாயக்கர் கடனையெல்லாம் அடைத்து விட்டு சந்நியாசியாகிக் காசிக்குப் போய் விடுகிறார் என்று மட்டும் தி.ஜா.வின் காசியை நோக்கிய நாவலின் நகர்த்தலைச் சொல்லி விட முடியாது.

ஒரு தர்க்கரீதியான காரணத்தைக் கொண்டே தி.ஜா. நாவலைக் காசியில் வைத்துநிறைவு செய்கிறார். தானிருக்கும் வரை பாலியின் மனதுக்கு மாறாகத் திருமணம் நடக்காது என்ற சங்கல்பத்தைக் கோணவாய் நாயக்கர் உறுதியாகத் தருகிறார்.

இராமையாவின் சங்கல்பம், கோணவாய் நாயக்கரின் சங்கல்பம் இரண்டில் ஒன்றே நிறைவேற சாத்தியக்கூறு உள்ள நிலையில் இராமையாவின் சங்கல்பமே நிறைவேறுகிறது.

தனது சங்கல்பத்துக்கு மாறாகப் பாலியின் திருமணம் நிகழ்ந்து விட்ட பிறகு கொடுத்த உறுதிமொழிக்குக் கட்டுபட்டு, அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் அவர் சந்நியாசியாகிக் கடைசியாகக் காசிக்குச் சென்று விடுவதாகக் கருத இடம் தருகிறார் தி.ஜா.

கோணவாய் நாயக்கருக்கு அவரின் அந்திம காலம் தெரிய வரும் போது இராமையாவுக்குத் தந்தி கொடுத்து வரவழைக்கிறார். இராமையா கோணவாய் நாயக்கரைக் கங்கையில் ஜல சமாதி செய்வதோடு நாவல் முடிகிறது. 

நாவலில் இராமையாவின் சங்கல்பம் நிறைவேறி விடுகிறது. ஆனால் கோணவாய் நாயக்கர் மூலமாக பாலியின் மனநிலையின் பக்கம் நின்று பேசுகிறார் தி.ஜா. தன்னுடைய முதல் நாவலான அமிர்தத்தில் அமிர்தத்தையும் முதலியார் மகனையும் சேர்த்து வைக்காமல் தந்தையான முதலியாரின் விருப்பத்திற்கேற்ப ஓர் உயர்ந்த முடிவை அடைவது போல அனைவரையும் உன்னத மாந்தர்களாகக் காட்டும் வகையில் நாவலை முடித்திருப்பார்.

இந்த நாவலிலும் உன்னத மாந்தர்களைத்தான் தி.ஜா. காட்ட முயல்கிறார். மனிதருக்குரிய மனதின் பக்கம் சாய்ந்து பேச கோணவாய் நாயக்கரைச் சன்னியாசியாக்கி ஒரு ஸ்படிகமான மனநிலையில் பாலியின் விருப்பத்தை நிறைவேற்றாமல் போனது மலர் மஞ்சத்தை எப்படி உறுத்தும் என்பதைக் காட்டுகிறார்.

தி.ஜா. மனிதர்களின் ஆசா பாசங்கள் கொண்ட மனநிலை பக்கம் நோக்கி திரும்பும் திருப்பத்தை இந்த இரண்டாவது நாவல் காட்டுகிறது. சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் போட்டு உருட்டி மனதின் உணர்வுகளை மரக்கடிப்பதைத் தி.ஜா. விரும்பவில்லை. மனதின் உணர்வுகளை அழகியலோடு உரையாடல்கள் கலந்து காட்சிப்படுத்துவதன் மூலமாக ஒரு மாற்றத்தை முன்னகர்த்த விழைகிறார்.

இரண்டு ஆண்களை நேசிக்கும் ஒரு பெண் என்ற மரபை மாற்றி யோசித்து மரபை உடைத்தாற் போல ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் மரபைக் காப்பாற்றும் ஒரு முடிவை நோக்கி நாவலைத் தி.ஜா. நகர்த்தினாலும் அப்படிக் காப்பாற்றிய முடிவைத் தவறென்று முடிக்கும் மனோதர்மத்தைத்தான் பிற்பாடு அவர் எழுதிய நாவல்களில் காட்டுகிறாரோ என்னவோ.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...