28 Sept 2023

உறைகளுக்குக் கணக்கு இருக்கிறதா?

உறைகளுக்குக் கணக்கு இருக்கிறதா?

தினம்தோறும் நாம் பயன்படுத்தும் உறைகளுக்குக் கணக்கு இருக்கிறதா?

தினந்தோறும் ஒவ்வொரு குடும்பமும் காலை, மாலை என்று இரு வேளைகளில் இரு பால் பொட்டல உறைகளைப் பயன்படுத்துகின்றன. இது குறைந்தபட்ச எண்ணிக்கை அல்லது சராசரி எண்ணிக்கை. அதிகபட்சமாகச் சராசரியைத் தாண்டி சில நேரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட பால் பொட்டலங்களைப் பயன்படுத்தும் போது இந்த உறைகளின் எண்ணிக்கைக் கூடவும் செய்யும்.

பால் பொட்டல உறைகளுக்கு அப்பால் தயிர் பொட்டல உறைகள் இருக்கின்றன. ஒரு தனிநபருக்கு ஒரு நாளுக்கு ஒன்றிலிருந்து இந்த எண்ணிக்கை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

மாவு பொட்டலங்களின் உறைகளும் அன்றாடப் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. ஒரு தோசை மாவு பொட்டலமாவது வாங்காத குடும்பங்கள் இப்போது கிராமங்களிலும் இல்லை. அவற்றின் உறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கணக்கின் மீதே ஒரு வெறுப்பு வந்தாலும் வந்து விடலாம். உறைகளுக்காக எவ்வளவுதான் கணக்குப் போடுவது சொல்லுங்கள்.

மளிகைப் பொருட்களுக்கான உறைகள் கணக்கில் அடங்காதவை.

கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு, மல்லி, மிளகாய், சீனி, வெல்லம், தேநீர்த் தூள், சலவைத்தூள், சோப்பு, சவுக்காரம் என்று கணக்கெடுத்துக் கொண்டு போனால் உறைகளின் எண்ணிக்கை நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போலாகி விடும். இந்த உறைகள் நாள்தோறுமோ, வாரா வாரமோ, மாதா மாதமோ சுழற்சியாகப் பெருகிக் கொண்டிருப்பவை.

தின்பண்டங்களுக்கான உறைகள் கணக்கில் அடங்குமோ? நொறுக்குத்தீனிகள், மாச்சில்கள் (பிஸ்கட்டுகள்) மற்றும் பலகாரங்களுக்கான உறைகள் முடிவிலியாய் நீளக் கூடியவை.

காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ அதை உணவகத்திலிருந்து கட்டி வாங்கி வரும் போது அதற்குள் எவ்வளவு உறைகள் இருக்கின்றன. சட்டினிக்கு ஒரு உறை, சாம்பாருக்கு ஒரு உறை, துவையலுக்கு ஒரு உறை, தொடுகறிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு உறை என்று உறைக்குள் உறையாக தொடர்பவை நமக்கான உணவுப் பொட்டலங்கள்.

அடுத்ததாகத் தூக்குப் பைகள் (கேரி பேக்) என்று அடுத்தக்கட்ட கணக்கீட்டைத் தொடங்கினால் உறைகள் முடிவில்லாமல் இனிமேல் கட்ட வேண்டிய உலகப் பெருஞ்சுவரைப் போல நீளக் கூடியவை. நான்கு கடைகள் ஏறி இறங்கி பத்துப் பொருட்கள் வாங்கினால் பத்துப் பொருட்களையும் பத்துத் தூக்குப் பைகளில் போட்டுக் கொடுத்து விடுவார்கள். நமக்கும் ஒரு பொருளைத் தூக்குப் பையில் வாங்கி வராவிட்டால் எதையோ இழந்து விட்டாற் போல ஒரு நினைப்பு வந்து விடுகிறது.

துணிக்கடைகள் துணிப்பைகள் கொடுப்பதாகச் சொன்னாலும் துணிப்பைக்குள் இருக்கும் ஒவ்வொரு துணியும் உறைகளால் சூழப்பட்டதாக இருக்கும். ஒரு புடவையோ வேட்டியோ நெகிழி உறையால் சூழப்பட்டு அதை ஒரு துணிப்பைக்குள் போட்டு வாங்கி வருவதில் என்ன இருக்கிறது?

இப்படியே உறைகள் பற்றி கணக்கு பண்ணிக் கொண்டே போனால் இன்னும் கூட உறைகள் இருக்கலாம். உறைகளுக்கு உறை போட முடியுமோ?

இந்த உறைகளில் அநேக உறைகள் நெகிழி உறைகள். அவ்வளவு நெகிழி உறைகளை இந்த மண் தாங்குமா? ஆறுகள்,கால்வாய்கள், கடல்கள் தாங்குமா?

மண் நெகிழியைச் சிதைக்க முடியாமல் தடுமாறுகிறது. ஆறுகளும் கால்வாய்களும் நெகிழி அடைப்புகளால் ஓட முடியாமல் தடுமாறுகின்றன. கடல்கள் நெகிழிக் கழிவுகளால் நிரம்புகின்றன.

இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வருங்காலத்து மண் என்பது மண்ணும் கல்லும் கலந்த கலவையாக மட்டுமல்லாமல் கட்டடக் கழிவுகளும் (காங்கிரீட்) நெகிழியும் கலந்த கலவையாக இருக்கப் போகின்றது.

எதிர்காலத்து ஆறுகள், கால்வாய்கள் மற்றும் கடல்களில் நெகிழிகள் நீந்திக் கொண்டும் அடியில் படுத்து உறங்கிக் கொண்டும் இருக்கலாம்.

இதெல்லாம் தெரிந்தவைதானே என்கிறீர்களா? நிச்சயமாக. தெரிந்தும் நம்மால் தடுக்க முடிகிறதா? கொஞ்சமேனும் குறைக்க முடிகிறதா?

புகையும் மதுவும் கேடு செய்யும் என்று தெரிந்து புழங்குபவர்களைப் போலத்தான் நெகிழி மண்ணுக்கும் நீர் நிலைகளுக்கும் ஆகாது என்று தெரிந்தே நாம் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.

நெகிழிக்கு எதிராகத் துணிப்பை இயக்கத்தை நாம் கையில் எடுத்தாலும் அந்தத் துணிப்பைக்குள் நிரம்புபவை நெகிழிப்பையிலான பொட்டலங்களாகத்தானே இருக்கின்றன.

ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் கலாச்சாரம் நம்மை நெகிழி வடிவில் சூழ்ந்திருக்கிறது. இந்தக் கலாச்சாரம் நம்மைத் துரத்தித் துரத்திப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாமும் அதைத் துரத்தி விட மனமில்லாமல் பின்தொடர அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு முறைப் பயன்படுத்தித் தூக்கி எறிந்து விட்டால் அத்தோடு கடமை விட்டது. அதைத் தூய்மை செய்ய வேண்டியதில்லை, மறுபயன்பாட்டுக்குப் பராமரிக்க வேண்டியதில்லை. இது எவ்வளவோ வேலைகளைக் குறைக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆசுவாசமாக இருப்பதற்கு வசதி செய்வதாக நினைக்கிறோம்.

நம் அலுப்புக்கும் சோம்பலுக்கும் ஓர் அளவில்லை. அவற்றை வளர்க்கும் கலாச்சாரமே நம்மிடம் நிலைபெறவும் செய்கிறது. அப்படி ஒரு கலாச்சாரத்தை வளர்க்கவே அலுப்பும் சோம்பலும் இல்லாமல் பொருளாதாரத்தைப் பெருக்க நினைக்கும் பெரு நிறுவனங்களும் நவீன உலகின் வியாபார தந்திரங்களும் அயர்வில்லாமல் பாடுபடுகின்றன.

இப்படியே போனால் ஒரு முறைப் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் ஆடைகள்தான் அதன் அடுத்தக் கட்டம். இப்போதைய இந்த ஆடைகள்தான் நமக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன? துவைக்கவும் காய வைக்கவும் மடித்து இஸ்திரி செய்யவும் என்று அவை எத்தனையெத்தனை வேலைகளில் இழுத்து விட்டுக் கொண்டிருக்கின்றன?

நம் நினைப்புகளும் எண்ணங்களும் இப்படி இருக்கையில் நம்மை யார்தான் என்ன செய்ய முடியும்? நாம் இப்படியே இருக்கும் வகையில் நம்மை இப்படியே இறுத்தி வைக்கவும் இந்த நிலையிலே நிறுத்தி வைத்து நம்மை உறிஞ்சி எடுத்துக் கொள்ளவும் நமக்கென பிரத்யேகமான நுகர்வு உலகம் தயாரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கை கழுவி விட்டால் இன்னொரு கை முளைத்து விடும் எனும் போது இருக்கின்ற கையைக் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பு தேவை இல்லாமல் போய் விடுகிறது. இந்தப் பொறுப்பற்ற தன்மைதான் ஒருமுறைப் பயன்படுத்தும் பொருட்களை ஊக்குவிக்கிறது.

ஒருமுறைப் பயன்பாடு மனிதர்களின் சோம்பேறித்தனத்திற்கும் உல்லாசத்திற்கும் வசதியானது. உற்சாகமாகப் பொறுப்பற்ற தன்மையில் உழல்வதற்கும் உகந்தது.

எத்தனை நாட்கள் பொறுப்பில்லாமல் இருக்க முடியும்? பொறுப்பற்ற தனத்தால் ஒட்டுமொத்த மனித குலமும் பாதிக்கப்படாத வரையில் பொறுப்பில்லாமல் இருக்கலாம். பாதிப்பு வெளிப்படும் போது பொறுப்பானவர்களாக மனிதர்கள் மாறியாக வேண்டும். அந்த மாற்றத்தை இயற்கை அதிரடியாகத்தான் செய்கிறது. அப்போது நாம் இயற்கையைக் குறை சொல்ல முடியாது. நம்முடைய பொறுப்பற்றத் தனத்தைத்தான் குறை சொல்லிக் கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...