27 Sept 2023

கொண்டாடாமல் இருப்பதில் இருக்கும் கொண்டாட்டம்

கொண்டாடாமல் இருப்பதில் இருக்கும் கொண்டாட்டம்

நீங்கள் உங்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதே இல்லையா? என்று ஆச்சரியமாக என்னைப் பார்த்துக் கேட்பவர்களைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

என்னவோ எனக்குக் கொண்டாடத் தோன்றியதில்லை.

என்னுடைய பெற்றோர்கள் அதை ஒரு பழக்கமாக்காமல் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

என்னுடைய சமூகச் சூழ்நிலையில், நான் வளர்ந்து வந்த கால கட்டங்களில் பிறந்த நாள் கொண்டாடுவது முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததும் இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எங்கள் குழந்தைப் பிராயங்களில் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல நாங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தோம். குழந்தைப் பருவத்தில் எங்களுக்கு இதைச் சாதிக்க வேண்டும், அதைச் சாதிக்க வேண்டும் என்ற எந்த இலக்குகளும் இல்லாமல் இருந்தன. நாங்கள் குழந்தைகளாகவே இருந்தோம். அதனால் கூட அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்குத் தேவைப்படாமல் இருந்திருக்கலாம்.

என்னுடைய பிறந்த நாளைக் கேட்டால் நான் அதை அடையாள அட்டையில் பார்த்துச் சொல்லக் கூடிய நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். அதனால் என்னுடைய பிறந்த நாள் வரும் போதும் எனக்கு அது ஞாபகத்தில் இருப்பதில்லை.

பிறந்த நாளைக் கொண்டாடுவதால் அப்படியென்ன பெரிய மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது? கொண்டாடாமல் விட்டு விடுவதால் அப்படியென்ன இழப்பு நேர்ந்து விடப் போகிறது? எனக்குள் அடிக்கடி எழும் இந்த இரண்டு கேள்விகளும் கூட என்னைப் பிறந்த நாளைக் கொண்டாட விடாமல் செய்திருக்கலாம்.

உங்களுக்கு ஓர் அடையாளம் தேவை என்றால் நீங்கள் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடத்தான் வேண்டும். அந்த நாளில் எல்லாரும் உங்களையே கவனிப்பார்கள். நீங்கள் இனிப்பு தரப் போவதை அல்லது விருந்து தரப் போவதை அல்லது ஒரு கொண்டாட்டம் தரப் போவதை ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். ஏதோ ஒன்றைத் தரப் போவதற்கான எதிர்பார்ப்பு அது. பதிலுக்கு நீங்கள் உங்களுக்கான அடையாளத்தையும் உங்களுக்கான மகிழ்ச்சியையும் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பீர்கள். அல்லது அது ஓர் அங்கீகாரமாகவும் உங்களுக்கு இருக்கலாம்.

காரணமே இல்லாமல் கொண்டாட முடியாது என்பதால் ஏதோ ஒரு காரணம் வைத்து ஒரு கொண்டாட்டத்தை நிகழ்த்தவும் இந்தப் பிறந்தநாள்கள் பலருக்கு உதவுகின்றன.

அந்த ஒரு நாள் உங்களுடைய பிறந்த நாள் என்றால், மற்ற நாள்கள் எல்லாம் என்ன? அதற்கு எதிரான நாட்களா? இப்படி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால் பிறந்த நாளைப் போல ஒவ்வொரு நாளும் முக்கியமானவைதானே, கொண்டாட்டத்திற்கு உரியவைதானே?

முகநூலிலும் புலனத்திலும் இருந்த ஆரம்ப நாட்களில் என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி பலர் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு நன்றி சொல்லியும் பலருக்கு எதுவும் சொல்லாமலும் இருந்திருக்கிறேன். பதிலுக்கு அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறாமையைப் பார்த்து விட்டு அடுத்தடுத்த பிறந்த நாட்களில் எனக்கு வாழ்த்துச் சொல்வதை நிறுத்தி விட்டார்கள். எனக்கும் ஒவ்வொன்றுக்கும் பார்த்துப் பார்த்து நன்றி சொல்கின்ற வேலை மிச்சமாகி விட்டது.

முகநூலுக்கு உங்களுடைய பிறந்த நாள் தெரியும் என்பதால் நீங்கள் மறந்தாலும் அது உங்களுடைய பிறந்த நாளை உங்கள் தொடர்பில் இருப்போருக்கு எல்லாம் செய்தியாக அனுப்பிக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து விடுகிறது. இப்படி கொண்டாடுவதற்கான வாய்ப்பை அது காட்டும் போது அது அதிகமான செய்திப் பகிர்வுகளை உண்டாக்குகிறது. முகநூலுக்கு தேவை அதுதானே. அது தன்னுடைய தேவையை நம்முடைய எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் வைத்து நிறைவேற்றிக் கொள்கிறது.

பிறந்த நாள் என்பது காலச் சுழற்சியின் ஒரு கணக்கு. ஒரு வருட சுழற்சி என்று இருப்பதால் பூமியில் இப்படிக் கொண்டாட முடிகிறது. ஆனால் ஒவ்வொரு வருடமும் வேறுதான். பிறந்த வருடமும் இப்போதுள்ள வருடமும் ஒன்றல்ல. மாதமும் நாளும் நேரமும் ஒத்துப் போகின்றன அவ்வளவுதான். லீப் ஆண்டின் பிப்ரவரி 29 இல் பிறந்தவர்களை நினைத்துப் பாருங்கள். நான்காண்டுகளுக்கு ஒரு முறைதான் அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட முடியும்.

பொதுவாகப் பிறந்த நாள் ஆங்கில ஆண்டிற்கு ஒரு நாளாகவும் தமிழ் ஆண்டிற்கு வேறொரு நாளாகவும் வரும். அவரவர் கணக்கு அவரவர்களுக்கு என்பது போல.

பூமியில் பிறந்ததால் இப்படி ஒரு சூழற்சிக் கணக்கு. செவ்வாயிலோ வியாழனிலோ பிறக்கும் கிரகக் சூழ்நிலைகள் வாய்த்திருந்தால் கணக்கு வேறாகியிருக்கும்.

பெரிய பெரிய தலைவர்களுக்கு, சிறிய சிறிய என்றிருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு, தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக நிறுவிக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் பிறந்த நாள் ரொம்பவே முக்கியமானது. வருடத்திற்கு ஒரு பிறந்த நாளாவது இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. வருடத்திற்கு நான்கு ஐந்து பிறந்த நாள்கள் இருந்திருந்தால் மகிழக் கூடியவர்கள் அவர்கள்.

அவ்வபோது மறந்து விட்டாலும் மகான்களை, தியாகிகளை இந்தப் பிறந்த நாளை வைத்து ஞாபகம் செய்து கொள்ள முடிகிறது. அந்த நாளில் அந்த நேரத்தில் பிறந்த அவர்கள் மகான்களாகி விட்டார்கள், தியாகிகளாகி விட்டார்கள். அப்படி ஆக முடியாத நாம் அதைக் கொண்டாடுவதன் மூலமாக அப்படி ஆக முடியும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து கொண்டிருக்கிறோம்.

எவ்வளவோ மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள், பிறந்து கொண்டு இருக்கிறார்கள், பிறக்கப் போகிறார்கள். ஒவ்வொரு நாளும் வேவ்வேறு மனிதர்கள் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பிறந்த நாள்கள் கொண்டாடப்படாத தினம் என்று இந்தப் பூமியில் எந்த நாளும் இருக்க வாய்ப்பில்லை.

பிறந்த நாள் ஓர் எடை பார்க்கும் இயந்திரத்தைப் போல ஒவ்வொராண்டும் வயதின் எடையைப் பார்த்துச் சொல்கிறது. ஒவ்வோராண்டும் கூடிக் கொண்டு போகும் எடையை நினைவுபடுத்திக் காட்டுகிறது. முடிவில் எடை கூட முடியாத ஓர் ஆண்டில் ஒரு முற்றுப்புள்ளியை இறந்த நாள் என்ற பெயரில் வைத்து விடுகிறது.

இறந்த நாள் வரும் வரை பிறந்த நாளைக் கொண்டாட முடிகிறது. இறந்த பின்பு அந்த ஒரு நாளை மட்டும் கொண்டாட முடிவதில்லை. ஒவ்வோராண்டும் பிறந்த நாளைத் தரிசித்த மனிதன் இறந்த நாளுக்கு அடுத்த ஆண்டு அதை தரிசிக்க முடியாத இன்மையில் தொலைந்து போய் விடுகிறான். அப்படி அல்லாமல் அதைக் கொண்டாடவும் ஒரு பாக்கியம் இருந்தால் மனிதர்கள் விட மாட்டார்கள்தானே!

ஒரு சராசரி மனிதனாகிய எனக்கு இந்தப் பிறந்த நாள் தேவையில்லாத ஒன்றாகவே எப்போதும் தோன்றுகிறது. இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருப்பதே ஒரு கொண்டாட்டமாகவும் இருக்கிறது.

இந்த ஆண்டிற்கான என்னுடைய பிறந்த நாளுக்கான பிரார்த்தனை எல்லாம் இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடிய அளவுக்கு வருங்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நபராக ஒரு போதும் ஆகி விடக் கூடாது என்பதுதான்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...