26 Sept 2023

நல்ல மனதையும் கெட்ட மனதையும் உருவாக்கிக் கொள்ளுதல்

நல்ல மனதையும் கெட்ட மனதையும் உருவாக்கிக் கொள்ளுதல்

சமாதான மனதைத் தண்டிப்பது எவ்வளவு குரூரமானது?

இந்த உலகில் நல்ல மனது தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தண்டனையை அன்பாக ஏற்றுக் கொள்ளும் தன்மை அதற்கே இருக்கிறது. அதைத் தண்டித்து விடுவதில் கெட்ட மனதுக்கு ஒரு சந்தோசமும் இருக்கிறது.

தண்டனையை ஏற்காத தன்மையை நீங்கள் எப்படித் தண்டிக்க முடியும்? உங்கள் தண்டனையே அங்கு அர்த்தமற்றதாகி விடும். ஆகவே தண்டனையைச் சாத்வீதமாக ஏற்றுக் கொள்ளும் மனதைத் தண்டிக்கும் போதுதான் நீங்கள் எதிர்ப்பின்றித் தண்டனையைச் செயல்படுத்த முடியும்.

ஓர் எதிர்ப்பு வந்தால் நீங்கள் பின்னோக்கி ஓடி விடுவீர்கள். உங்களது தண்டனையைச் செயல்படுத்தும் முன்னேற்ற வாய்ப்பை உங்களுக்கு ஒரு நல்ல மனதுதான் கொடுக்க முடியும். அப்போது உங்கள் மனது ஒரு கெட்ட மனதாக இருந்தால்தான் தண்டனையைத் துணிந்து செயல்படுத்த முடியும்.

எதிர்ப்பானது இரு பக்கங்களின் பயங்கர மோதலாகவோ அல்லது சமரசமாகவோ முடியும். பயங்கர மோதல் என்பது இரு தரப்பும் மற்றொரு தரப்பை ஏற்க தயாரில்லை என்பதன் விளைவு. சமரசம் என்பது ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ள விரும்பாத விளைவு. இந்த இரண்டு இடங்களிலும் தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இருக்கப் போவதில்லை.

கெட்ட மனது ஒரு நல்ல மனதைத் தண்டிக்கும் போது அந்தத் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மனவலிமை இருந்து விட்டால் முடிவில் கெட்ட மனதுதான் தோற்றுப் போகும். தண்டிப்பது ஒரு பலகீனத்தின் விளைவு. சமாதானம் அடையாத ஒரு மனதைச் சமாதானம் செய்விக்க முயலும் பலாத்காரத்தின் செயல்பாடு அது.

ஒரு கெட்ட மனது தொடர்ச்சியாகத் தண்டித்துக் கொண்டே செல்ல முடியாது என்பது அதன் பின்னுள்ள மறுக்க முடியாத உண்மை. ஏதோ ஓர் இடத்தில் அது ஒரு நல்ல மனதாக மாறுவதற்கான மனச்சான்று விழித்துக் கொள்ளும். அப்போது அது மிக அதிக தண்டனையைத் தனக்குத் தானே அனுபவித்துக் கொள்ளும். அந்த இடத்தில் ஒரு கெட்ட மனது வழங்கிய தண்டனைகள் அதற்கே மீள்கின்றன.

வலிமையில்லாத ஒரு மனம் தண்டனைகளை விலக்க நினைக்கலாம். விலக்க நினைக்க நினைக்க மனமானது மேலும் மேலும் பலவீனமாகிறது. எதிர்கொள்ளல் ஒன்றே மனதை பலமாக்குகிறது. நிகழ்வை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளல் என்பது பலவீனமான மனதையும் பலமாக்கும். ஆரம்பத்தில் வெளிப்படும் பலவீனத்தைக் கண்டு ஒரு பலவீனமான மனம் பின்னடைய வேண்டியதில்லை. தொடர்ந்து எதிர்கொள்ள எதிர்கொள்ள பலவீனம் தானாகவே பலமாகும்.

எதிர்கொள்ளலும் ஏற்றுக் கொள்ளலும் வலிமையை உண்டாக்குகின்றன. எதிர்கொண்டு எதிர்கொண்டு நீங்கள் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி விட முடியும். மனதளவில் ஏற்றுக் கொண்டு எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டால் அது புதிய புதிய வழிகளைக் காட்டும். உங்களைப் பலமாக நிலைநிறுத்திக் கொள்ளவும் அது வழிவகுக்கும்.

ஒரு குரூர மனம் என்பது எதையும் எதிர்கொள்ள பயந்து கொண்டிருக்கிற பலவீனத்தின் வெளிப்பாடுதான். அது மறைமுகமாக எதிர்த்துக் காய் நகர்த்தப் பார்க்கிறது. தன்னுடைய பயத்தை தன்னுடைய எதிராளிக்குக் கடத்தி விட நினைப்பதன் மூலம் சந்தோஷம் அடைய நினைக்கிறது.

இதற்கு மாறாக எதையும் எதிர்கொண்டு வலிமையாகும் மனதானது தன்னுடைய வலிமையையும் சந்தோசத்தையும் எதிரில் இருப்போருக்குக் கடத்த நினைக்கிறது. அதனால்தான் அது வசீகரமாகவும் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.

வன்மத்தைத் தேர்ந்து கொள்ளும் கெட்ட மனது அச்சுறுத்தும் உடனடி விளைவுகளை மட்டும் பார்க்கிறது. அதன் பார்வை தொலைதூரத்துக்கு நீள்வதில்லை. சிறிது தள்ளி நிற்கும் தூரத்தில் இருப்பது கூட அதன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதன் பார்வை அத்தனையும் அருகாமைதான்.

அருகில் தோற்றம் தரும் ஒவ்வொரு அச்சுறுத்தலும் பாறாங்கல்லைப் போல பெரிய தோற்றத்தைத் தரக் கூடியவை. ஒரு பெரிய பாறாங்கல்லைத் தொலைதூரத்துக்கு நகர்த்திக் கொண்டு போனால் அது சிறிய புள்ளியாகி விடக் கூடும். தொலைதூரத்துக்கு நகர்த்திக் கொண்டு போய் பார்க்கும் வல்லமை உங்களுக்கு வேண்டும்.

ஒரு பிரச்சனை பாறையைப் போலாகி நிற்கும் போது, அது நகர்ந்து புள்ளியாகும் வரை நகர்த்தும் பொறுமையும், அப்படி நகரும் காலத்தை அணுகும் பொறுமையும் வேண்டும். மனதோ படபடக்கக் கூடியது. உடனடி விளைவுகளைப் பார்த்து ஆனந்திக்க நினைக்கக் கூடியது.

நிலையாகப் பறக்கத் தொடங்கும் போது சிறகுகள் அதிகம் அசைவது கூட இல்லை. பதற்றமும் பயமும் என்ன நடக்குமோ என்ற அச்சமும் சிறகுகளை அதிகம் படபடக்கச் செய்கின்றன. படபடப்புகள் உங்களைச் சிறிது தூரம் கூட நகர்த்தப் போவதில்லை.

நகர்த்த முடியாத படபடப்பே உங்களை எங்கோ நகர்த்திக் கொண்டு ஆறுதல் பண்ணுவதாக அல்லது பிரச்சனையைத் தீர்த்து விடுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

உங்கள் படபடப்பையும் பரபரப்பையும் நீங்கள் அந்த நிலையில் உற்றுப் பார்க்க வேண்டும். அத்துடன் உங்களிடமிருந்து விலகிப் போய் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். எவ்வளவு விலக முடியுமோ அவ்வளவு விலகிப் போய் பாருங்கள். உங்களுக்கு நகைப்பாகக் கூட இருக்கலாம்.

எதிர்கொள்வதற்குப் பலவீனமாகிப் படபடப்பாதல் ஒரு வழிமுறையே இல்லை என்பது அதிலிருந்து தள்ளிப் போகப் போகத்தான் உங்களுக்குப் புரியும். நீங்கள் அமைதியாக இருந்திருக்கலாம் என்பதும் அப்போது புரியும். அந்த அமைதி உங்களுக்கு வேறொரு தீர்வைத் தந்திருக்கும் என்பதும் புரியும்.

நீங்கள் சிறிய வயதில் எது எதற்கோ பயந்திருக்கலாம், படபடப்பை அனுபவித்திருக்கலாம். இப்போது நினைத்துப் பார்க்கும் போது அப்படி எதுவும் அடைந்திருக்கத் தேவையில்லை என்பதை எளிதாகக் கண்டுணர முடிகிறதா? இது எப்படி நிகழ்கிறது என்றால் நீங்கள் தள்ளி வந்து விடுகிறீர்கள். தொலைவில் அதாவது பால்யத்தில் நிகழ்ந்ததைத் தள்ளி வந்து பார்க்கிறீர்கள். சற்றுத் தள்ளிப் போய் ஒரு பார்வை பார்க்கும் போது உங்களுக்குச் சரியான ஒரு தோற்றம் கிடைக்கிறது. அது அருகிலிருந்து பார்த்ததிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.

கால இடைவெளியும் ஒரு தொலைவுதான். உங்களிலிருந்து வெளிப்பட்டு இன்னொரு பார்வையில் பார்ப்பதும் ஒரு தொலைவுதான். அருகிலிருந்து பார்ப்பதற்கும் தொலைவிலிருந்து பார்ப்பதற்கும் ஒரு வேறுபாடு உண்டாகிறது. இரண்டும் நீங்கள் பார்த்த பார்வைதான். அந்தப் பார்வைகளில் உங்கள் மனமானது இரு வேறாக இரு விதமான நோக்குகளை உணர்கிறது.

மனதின் விசித்திரம் இதுதான். ஒரே விசயத்திற்கு இப்படி இரண்டு, மூன்று என்று பலவிதமான நோக்குகளைக் காட்டும் அதன் தன்மையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் ஏதோ அதன் ஒரு நோக்கிற்குக் கட்டுபட்டு அதன் பயத்தையும் பரபரப்பையும் படபடப்பையும் எடுத்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் பயம், பரபரப்பு, படபடப்பு இவற்றிலிருந்து தள்ளிப் போனால் உங்கள் துணிவு, வலிமை, உறுதி எல்லாம் உங்களிடம் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. எல்லாமே உங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீங்கள் தேர்ந்து கொள்கிறீர்கள்.

உங்கள் அச்சத்தையும் பலவீனத்தையும் நீங்கள் தேர்ந்து கொண்டால் நீங்கள் ஒரு கெட்ட மனதுடனே வாழப் பழக்கப்பட்டு விடுகிறீர்கள். அப்போது தண்டிப்பதையே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களால் தண்டிக்க முடியாமல் போனாலும் யாராவது தண்டிக்க மாட்டார்களா என்று ஏங்குகிறீர்கள்.

துணிவையும் வலிமையையும் தேர்ந்து கொண்டால் நல்ல மனதோடு துணிந்து முன்னோக்கிப் போகிறீர்கள். உங்களுக்குப் பல வழிகள் இப்போது கிடைக்கின்றன. தண்டிப்பது என்ற முட்டுச்சந்தில் முட்டிக் கொள்வது உங்களுக்குப் பிடிக்காமல் போய் விடும். மன்னிப்பதும் தண்டிப்பதை மறந்து வேறு வழியில் பயணிப்பதன் ஆனந்தமும் உங்களை இப்போது பீடித்துக் கொள்ளும்.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...