5 Sept 2023

கைகளைக் கட்டிக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது

கைகளைக் கட்டிக் கொள்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது

மூன்று நான்கு கிரெடிட் கார்டுகள் வைத்திருந்த ஒருவர், “என்ன சார் பண்றது? எப்படியோ தலையில கட்டிடுறாங்க. வேண்டாம்ன்னு சொன்னாலும் திணிச்சிடுறாங்க. இதெல்லாம் தவிர்க்கவே முடியாது.” என்றார்.

உங்களுக்கும் உள்ளூர ஆசையில்லாமல் அப்படியெல்லாம் செய்து விட முடியுமா என்ன? உங்களது உள்ளூர ஆசையைப் புரிந்து கொண்டுதான் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அணுகி கார்டுகளை உங்கள் தலையில்கட்டுகின்றன.

நீங்கள் ஆரம்பத்தில் வேண்டாம் என்று சொல்வது உள்ளூர சொல்வது இல்லை என்பது கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். எப்படியும் உங்களைச் சம்மதிக்க வைக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். வாங்கித்தான் பார்ப்போமே, சமாளிக்க முடியாமலா போய் விடும் என்ற அசட்டுத் தைரியமும் உங்களுக்குள்ளும் உங்கள் உள்ளுக்குள்ளும் இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். பிறகெப்படி நீங்கள் கிரெட்டி கார்டு சூனியத்திலிருந்து தப்பிக்க முடியும்.

நீங்கள் வாங்கியே தீருவீர்கள். எந்த முள்ளும் தானாக வந்து குத்தாது. முள் இருக்கும் இடத்தில் கால் வைத்தால் குத்தவே செய்யும். அதே போலத்தான் நீங்கள் வாங்கிக் கொள்ளாமல் கிரெடிட் கார்டு உங்கள் கைகளுக்கு வராது. அதுவாக உங்கள் கைகளுக்குள் வந்து திணித்துக் கொண்டதைப் போலத்தான் பேசுவீர்கள்.

பணமாகக் கையில் வைத்திருந்து செலவு செய்யும் போது இருக்கும் யோசனையும் கவனமும் அட்டையாக வைத்துக் கொண்டு செலவு செய்யும் போது பல பேருக்கு இருக்காது.

அட்டை உங்களுக்குக் கேட்கும் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கும். வருகின்ற வழி தெரிந்தால் போகின்ற வழி தெரியும். சம்பாதித்து அதில் செலவு செய்யும் போதுதான் இந்த வழி தெரியும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் சம்பாதித்தாலும் சம்பாதிக்கா விட்டாலும் கார்டு உங்களுக்கு பணத்தைத் தந்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு வருகின்ற வழி எப்படித் தெரியும்?

ஒரு நாள் நீங்கள் கட்ட வேண்டிய பணத்திற்கான அறிவிப்பு வரும் போதுதான் நீங்கள் திடுக்கிடுவீர்கள். இவ்வளவா செலவு செய்திருக்கிறோம் என்று உங்களுக்கே சந்தேகமாகவும் இருக்கும். அப்போதாவது நீங்கள் முழுத்தொகையையும் கட்டி அதை தலைமுழுகியிருக்கலாம். என்றாலும் நீங்கள் குறைந்தபட்ச காப்புத்தொகையை மட்டும் கட்டி விட்டு மீண்டும் கிரெடிட் கார்டிலேயே பணப்பரிவர்த்தனைகளைத் தொடர்வீர்கள்.

நீங்கள் இன்னொரு உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும். கிரெட்டி கார்டு நிறுவனங்களும் நீங்கள் ஒழுங்காகப் பணம் செலுத்தாமல் இருப்பதைத்தான் விரும்புகின்றன. நீங்கள் ஒழுங்காகக் செலுத்தாமல் இருந்தால்தான் வட்டிக்கு மேல் வட்டி போட்டு உங்களிடம் அதிக பணத்தைக் கறக்க முடியும். நீங்கள் சரியாகக் கட்டி விட்டால் கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு உங்களால் எந்த லாபமும் இல்லை. நீங்கள் மென்மேலும் கடன்காரர்களாக ஆனால்தான் அவர்கள் அதிகம் சம்பாதிக்க முடியும்.

கடனுக்கான வட்டி உறங்குவதில்லை என்பார்கள். உறங்காமல் உங்களிடமிருந்து வட்டி அவர்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத நிலை வரும் போது இன்னும் பலவிதமான கடன்களை வாங்கித் தள்ளுவதற்கு அதுவே அச்சாரமாக அமையும்.

நீங்கள் சொல்லலாம் உங்களைக் கடன் வாங்க வைத்து விட்டார்கள் என்று. முள்ளை நீங்கள் குத்திக் கொள்வதைப் போலத்தான் இது. இந்த நுகர்வு கலாச்சாரம் நிறைந்து விட்ட உலகில் உங்களை வாங்க வைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கும். வாங்க மாட்டேன் என்று கையைக் கட்டிக் கொண்டு இருப்பதும், எதை வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும், ஏன் வாங்க வேண்டும் என்றும் புத்திசாலித்தனமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

நீங்கள் உங்கள் கைகளைக் கட்டிக் கொண்டு விட்டால் யாரும் உங்கள் கைகளில் பலவந்தமாக எதையும் திணிக்க முடியாது. பலரும் கைகட்டிக் கொள்வதை கேவலமாக நினைக்கிறார்கள். கை நீட்டுவதை வசதியாகவும் வாய்ப்பாகவும் பார்க்கிறார்கள். எதார்த்தம் இதற்கு நேர் மாறானது. உங்கள் கைகள் எப்போது நீள வேண்டும், எப்போது கட்டிக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதைக் கிரெட்டிட் கார்டு நிறுவனங்களின் முடிவுகளுக்கு விட்டு விடாதீர்கள். அப்படி விட்டு விட்டால் கைவிடப்பட்டவர்களின் பட்டியலில் ஒருவராக நீங்கள் உங்களை தள்ளிக் கொள்ள வேண்டியதுதான்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...