4 Sept 2023

ஒரு பொருளை வாங்குவதற்கான சமகாலத்தின் சரியான முறை

ஒரு பொருளை வாங்குவதற்கான சமகாலத்தின் சரியான முறை

கடனில் பொருட்களை வாங்க நினைக்காதீர்கள். கடனில் நீங்கள் வாங்கும் நூறு ரூபாய் பொருளின் மதிப்பு நூறு ரூபாயை விட அதிகம். அதெப்படி நூறு ரூபாய் பொருள் கடனில் வாங்கும் போது நூறு ரூபாயை விட மதிப்பு ஆகும் என்றால் கடனில் வாங்கும் பொருளுக்கு நீங்கள் வட்டிக் கட்ட வேண்டுமே. அந்த வட்டி மதிப்பைச் சேர்த்தால் நூறு ரூபாய் பொருளை நூறு ரூபாய்க்கு மேல்தானே வாங்க வேண்டும்.

அதுவே உங்கள் கையில் நூறு ரூபாய் ரொக்கமாக இருந்தால் அந்தப் பொருளுக்கு நீங்கள் பேரம் பேசலாம். பேரம் படியவில்லை என்றால் இன்னொரு கடையை நோக்கியும் போகலாம்.

கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட மாட்டார்கள். அவர்களுக்கு வியாபாரம் முக்கியம். பொருட்களை வாங்கி வாங்கி விற்றுக் கொண்டிருந்தால்தான் அவர்களால் காசு பார்க்க முடியும். அதனால் அவர்களும் உங்களிடம் பேரத்தில் இறங்குவார்கள்.

பேரத்தின் முடிவில் நூறு ரூபாய் மதிப்பு சொன்ன பொருளை உங்களால் நூறு ரூபாயை விட குறைவாக வாங்க முடியும். இதற்கு நூறு ரூபாய் உங்கள் கைகளில் இருக்க வேண்டும். நூறு ரூபாய் உங்கள் கையில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் நூறு ரூபாயைச் சேமித்திருக்க வேண்டும் அல்லது சம்பாதித்து கையில் வைத்திருக்க வேண்டும். சம்பாதித்தோ அல்லது சேமித்தோ நூறு ரூபாய் கைக்கு வந்த பின்பே நீங்கள் பொருட்களை வாங்க வேண்டும். இதுதான் பொருட்களை விலை மலிவாக வாங்குவதற்கான வழிமுறை. இம்முறையால் வட்டி எனும் கூடுதல் தொகையைக் கட்டி அழுவதனின்று நீங்கள் விடுபடுகிறீர்கள்.

இந்த நூறு ரூபாய் உதாரணம்தான் எல்லா பொருட்களை வாங்குவதற்கும் பொருத்தமான உதாரணம் ஆகும். நான் ஒரு புரிதலுக்காக நூறு ரூபாய் என்று சொன்னேன். ஒரு பொருளின் விலை எந்த விலையாக இருந்தாலும் அந்த விலைக்கான பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு பேரம் பேசினால் உங்களால் அந்த விலையை விட குறைவான விலைக்கு வாங்க முடியும்.

ஒரு பொருளை வாங்க ஒரு கடைக்கு அல்லது வியாபார நிறுவனத்துக்குச் செல்லும் போது அந்தப் பொருளை வாங்குவதற்காக வந்தது போல காட்டி விடாதீர்கள். பொருளை விசாரிக்க வந்தது போல நடந்து கொள்ளுங்கள். விலை பிடித்தமானதாக அதாவது மலிவாக உங்களுக்கேற்ற வகையில் குறைவாக இருந்தால் வாங்குவது குறித்து முடிவெடுப்பேன் என்பது போல நடந்து கொண்டு அணுகுங்கள் மற்றும் பேசுங்கள். அப்போதுதான் எங்கே நீங்கள் வேறு கடைகளுக்கு வாங்க சென்று விடுவீர்களோ என்ற அச்சத்தில் கடைக்காரர் உங்களை வளைத்துப் போட சலுகைகளை வழங்க முற்படுவார். அதை விடுத்து அவர்களின் கடையில்தான் பொருளை வாங்குவேன் என்பது போன்ற அறிகுறியைக் காட்டினால் அதைப் புரிந்து கொள்ளும் கடைக்காரர் அவர் நினைக்கின்ற கூடுதல் விலைக்கே பொருளை உங்கள் தலையில் கட்டி விடுவார். மேலும் கறாராக இந்த விலைக்குத்தான தர முடியும் என்றும் பூச்சாண்டி காட்டுவார்.

வாடிக்கையாளர்கள் எப்போதும் பேரத்தில் இறங்கும் போது இந்தக் கடையை விட்டால் இன்னொரு கடை இருக்கிறது என்ற விதத்திலேயே இறங்க வேண்டும். அப்போதுதான் பேரம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும். நீங்கள் அந்தக் கடையில்தான் பொருளை வாங்கப் போகிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கான எந்த சமிக்ஞைகளையும் ஒரு போதும் வழங்கி விடக் கூடாது. இன்னொரு கடையில் அதே பொருளை பாதி விலைக்குத் தருவதாகச் சொல்வதாகக் கூட அடித்து விடலாம். அதனால் தவறு ஒன்றும் இல்லை.

ஒரு சிறு விசாரிப்போ, சிறிய அளவில் பேரமோ செய்யாமல் எந்தப் பொருளையும் வாங்காதீர்கள். நிஜத்தில் எந்தப் பேரத்தில் ஈடுபட விருப்பம் இல்லாவிட்டாலும் பேரம் பேசுவது போல ஒரு நடிப்பையாவது வழங்குங்கள். அப்போது உங்களுக்கு பல விவரங்கள் தெரிய வரும். கொஞ்சம் பேச்சை வளர்த்துக் கொண்டு போகும் போதுதான் அந்தக் கடையைப் பற்றியும் நீங்கள் வாங்க இருக்கும் பொருளைப் பற்றியும் சிறிளதவேனும் நீங்கள் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். அதற்காகவேனும் இந்தப் பேர வகை பேச்சு வார்த்தை தேவையாகும்.

ஒரே பொருளைக் குறித்து ஒரே கடையில் நான்கைந்து முறை கூட திரும்ப திரும்ப போய் விசாரிக்கலாம். இது நீங்கள் வாங்கும் பொருள் குறித்த மேலான புரிதலை அளிக்கும். அந்தப் பொருள் குறித்த நிறைய விவரங்களையும் உங்களுக்குச் சேகரித்துத் தரும்.

ஒரு பொருளை நான்கு முறை சென்று விசாரிக்கிறீர்கள் என்றால் நான்காவது முறை அந்தப் பொருளை வாங்க வேண்டாம் என்று கூட தோன்றும். அப்படிப்பட்ட பொருள் நிச்சயம் உங்களுக்கு அத்தியாவசியமான பொருளாக இருக்காது. இதனால் அநாவசியமான ஒரு பொருளை வாங்குவதிலிருந்தும் தப்பித்து விடலாம். இப்படியும் சில அனுகூலங்கள் திரும்ப திரும்பப் போய் விசாரிப்பதில் இருக்கின்றன.

வெகு முக்கியமாக எந்தப் பொருளையும் தவணை முறையில் வாங்காதீர்கள். அதற்குப் பதில் தொடர் வைப்பு எனும் ஆர்.டி. முறையில் வங்கியிலோ அஞ்சலகத்திலோ கட்டி பணத்தைச் சேர்த்துக் கொண்டு அந்தப் பொருளை வாங்குங்கள். இதனால் நீங்கள் தவணைக்தொகைக்கான வட்டியை மிச்சம் பிடிப்பதோடு தொடர் வைப்பில் கிடைக்கும் வட்டியைப் பரிசைப் போல பெறுவீர்கள்.

எந்தப் பொருளை வாங்கினாலும் சரி அதற்கு வட்டி கட்டித் தண்டம் செய்ய மாட்டேன் என்று முடிவெடுத்துக் கொண்டு, கையில் பணத்தைச் சேர்த்துக் கொண்டு பேரம் பேசி, ஒன்றுக்கு நான்கு கடைகள் ஏறி இறங்கித்தான் ஒரு பொருளை வாங்குவேன் என்று நீங்கள் முடிவு கட்டி விட்டால் ஒரு பொருளை வாங்கும் முறை உங்களுக்குத் தெரிந்து விட்டதாகத்தான் அர்த்தம். அந்த அர்த்தப்பாட்டோடு இனி பொருளை வாங்குங்கள். ஒரு பொருளை வாங்குவதிலும் உங்களால் ஒரு தொகையை மிச்சம் செய்ய முடியும் என்றால் அது சம்பாதிக்க முடியும் என்றுதானே அர்த்தம்.

இந்தப் பத்தி நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்றவர்களுக்கும் இந்தப் பயன் கிடைக்க இதைப் பகிருங்கள், பலரும் பயன் பெற உதவுங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...