1 Sept 2023

லோகேஷ், நெல்சனின் படங்களின் மையம் என்ன?

லோகேஷ், நெல்சனின் படங்களின் மையம் என்ன?

கமலஹாசனை இயக்கியதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் மிகவும் பேசப்படும் இயக்குநராகி விட்டார்.

நெல்சனும் அப்படியே ரஜினிகாந்தை இயக்கியதன் மூலமாகப் பேசப்படும் இயக்குநராகி விட்டார்.

இவர்கள் காட்டுத் திரைப்படங்களின் மையம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா?

லோகேசுக்கு மாநகரம் முதல் படம். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என்று படங்களை எடுத்துத் தன்னை பெயர் சொல்லும் இயக்குநராக்கிக் கொண்டு விட்டார்.

நெல்சனுக்கு கோலமாவு கோகிலா முதல் படம். இவர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என்று படங்களைக் கொடுத்து ஒரு பிரபல மதிப்பைக் கொண்டு விட்டார்.

இவர்கள் காட்டும் படங்களின் மையம் என்பது ஓர் இருண்ட உலகம். அந்த இருண்ட உலகில் ஒரு நாயகத்தன்மையையும் இருண்மையான நகைச்சுவையையும் நுழைத்து விட்டால் இவ்விருவர்களின் படங்களும் தயார் எனலாம்.

பெரும்பாலும் இவர்கள் காட்டும் திரையுலகம் என்பது கடத்தல், பதுக்கல், தலை கொய்தல் என்பதாக இருக்கிறது. உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட இருண்ட காலங்களில் கூட இவ்வளவு தலைகொய்தல்கள் நடந்திருக்குமோ என்னவோ? இதை இவர்களது பிரபஞ்சம் (யுனிவர்ஸ்) என்கிறார்கள்.

இருள் உலகைக் (இரவு உலகமல்ல) காட்டக் கூடாது என்றெல்லாம் சொல்ல வரவில்லை. இவர்களுக்கு முன்பாக ஹெச். வினோத் காட்டிய இருள் உலகம் நம்பகத்தன்மையும் எதார்த்தம் கொண்டதாகவும் இருந்தது. ஹெச். வினோத்தான் இவர்களின் முன்னோடி என்றும் சொல்லலாம். அவரது சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்றவை அப்படிப்பட்ட படங்கள். வலிமை, துணிவு போன்றவை நாயக பிம்பத்தை மையமாகக் கொண்டு செய்தவை. அவற்றை நாம் பெரிதாகக் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

நான் முன்பே சொன்னபடி லோகேசும் நெல்சனும் காட்டிய அத்தனைத் திரைப்படங்களையும் ஒரு மைய சரடில் கொண்டு வந்து விட முடியும். இருண்ட உலகில் ஒரு கதாநாயகத் தன்மையை நுழைப்பதன் மூலம் இவர்களது படங்களின் மைய இழையை நீங்கள் அடைந்து விட முடியும். அவற்றில் கொஞ்சம் அவல நகைச்சுவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உணர்ச்சிகரமான குடும்ப உறவுகளை இணைத்துக் கொண்டால் இவர்களின் படங்களை நீங்களே கற்பனை செய்து உருவாக்கி விட முடியும்.

தங்களது வெற்றிகரமான மைய இழையின் மூலமாக லோகேசும் நெல்சனும் உருவாக்கிய வியாபார வெற்றியின் பிரமாண்ட படங்கள் என்று விக்ரமையும் ஜெயிலரையும் சொல்ல முடியும்.

கமலுக்கு ஒரு பிரமாண்ட வெற்றி தேவைப்பட்ட நேரத்தில் தன்னுடைய மைய இழையின் மூலமாகவே லோகேஷ் அதை உருவாக்கித் தந்திருக்கிறார்.

நெல்சனும் கிட்டதட்ட இதே நிலையில்தான் ரஜினிக்கு ஒரு பிரமாண்ட வெற்றி தேவைப்பட்ட நேரத்தில் தன்னுடைய மைய இழையின் மூலமாக ஜெயிலரை உருவாக்கித் தந்திருக்கிறார்.

லோகேசும் நெல்சனும் கிட்டதட்ட ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் என்றும் சொல்லாம். கதைக்காகக் கொஞ்சம் வேறுபாடுகளை நீங்கள் அவதானிக்கலாம். மற்றபடி ஒரே மாவைத்தான் இருவரும் மாற்றி மாற்றி அரைக்கிறார்கள்.

விக்ரம் திரைப்படத்தில் கமல் நேர்மையான மகனை இழக்கிறார். இது லோகேசின் பிரபஞ்சம் என்று வைத்துக் கொண்டால், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நேர்மையற்ற மகனை இழக்கத் தயாராகிறார் என்பது நெல்சனின் பிரபஞ்சம் எனலாம்.

விக்ரம் திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்தல் என்றால், ஜெயிலர் திரைப்படத்தில் சிலை கடத்தல். இரண்டு திரைப்படங்களிலும் பேரன்களைக் காக்க கமலும் ரஜினியும் போராடுகிறார்கள்.

விக்ரமில் கமலுக்கு நிறைய ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் என்றால் ஜெயிலரில் ரஜினிக்கு நிறைய தாதாக்கள் இருக்கிறார்கள். அங்கே கமல் உளவுப்பிரிவு போன்ற ராணுவ தன்மை நிறைந்தவர் என்றால் ஜெயிலரில் ரஜினி காவலர் பிரிவில் தனி சாம்ராஜ்யம் நடத்துபவர்.

இயக்குநர்கள் இவ்விருவருக்கும் பிரமாண்ட மதிப்பு ஏறி விட்டதால் இருவரும் தங்கள் படங்களில் பிரபலங்களின் பட்டாளங்களைக் கொண்டு வியாபார மதிப்பை ஏற்றி விடுகிறார்கள். லோகேஷ் சூர்யாவை கொலைவெறி பிடித்த கசாப்புக்கடைகாரராக மாற்றினார் என்றால் நெல்சன் மோகன்லாலை அப்படி மாற்றுகிறார்.

என்னதான் கமலுக்காகவும் ரஜினிக்காவும் இவர்கள் படம் செய்கிறார்கள் என்றாலும் தங்களின் வளையத்திற்குள் கமலையும் ரஜினியையும் இவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இல்லையென்றால் விக்ரம் படத்தில் இடைவேளைக்கு முன்பே கமல் சாகசங்களைத் துவங்கியிருப்பார். ரஜினியும் ஜெயிலர் படத்தில் 25 வயது காவரலாக அட்டகாசம் செய்திருப்பார். இருவரும் 16 வயதினிலே நடித்தவர்கள் என்பதற்கு ஞாபகார்த்தமாக 16 வயது நாயகிகளோடு குத்தாட்டமும் போட்டிருப்பார்கள்.

போலீஸ், ராணுவம், உளவுப்பிரிவு, மாபியாக்கள் என்பவை பற்றி நாம் அறிந்தவை அநேகம். அறியாதவையும் அநேகம். இவற்றிற்கு இருண்ட பக்கங்களும் உண்டு. ஒளிரும் பக்கங்களும் உண்டு. இவற்றில் நாம் அறியாத அநேகத்தோடு அவற்றின் இருண்ட பக்கங்களை இணைத்து மென்மையான குடும்ப உறவுகளை மசாலாவைப் போலத் தூவி எடுத்தால் நீங்கள் லோகேஷ் மற்றும் நெல்சனின் படங்களின் மையங்களை அடைந்து விடலாம். இதைத்தான் நான் லோகேஷ் மற்றும் நெல்சன் படங்களின் மையம் என்கிறேன். இதில் உங்களுக்கு அட்சேபனை இருந்தால் நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...