21 Aug 2023

விவசாயம் குறித்த ஆரோக்கிய நகர்வுக்கு இரு வழிமுறைகள்

விவசாயம் குறித்த ஆரோக்கிய நகர்வுக்கு இரு வழிமுறைகள்

2023 ஆம் வருடத்து மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு இருபது லட்சம் கோடியை நிர்ணயித்து இருக்கிறார்கள். வங்கிகள் மூலமாகவோ பிற நிதி நிறுவனங்கள் மூலமாகவோ கூட்டுறவு அமைப்புகள் மூலமாகவோ வழங்க இவ்வளவு பெரிய கடன் இலக்குத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு துறைக்கு இவ்வளவு பெரிய கடன் தொகை வழங்கப்பட்டால் அந்தத் துறை எப்படிச் செழிக்க வேண்டும்?

ஆனால் விவசாயத் துறை செழிக்காது. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. வெகு முக்கியமான காரணம் என்னவென்றால் இவ்வளவு பெரிய கடன் தொகையை இலக்கு வைத்து எந்த வங்கியும் கூட்டுறவு அமைப்பும் விவசாயிகளுக்கு வழங்காது.

நீங்கள் வங்கிகளிலும் கூட்டுறவு அமைப்புகளிலும் நிதி நிறுவனங்களிலும் வழங்கப்படும் விவசாயக் கடன்களைப் போய் பார்க்க வேண்டும். தங்கத்தை அடமானமாகப் பெற்றுக் கொண்டுதான் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. அப்படித்தான் விவசாயிகள் இங்கு கடன் வாங்குகிறார்கள். அது எப்படி விவசாயக் கடன் ஆகும்? விவசாயக் கடன் என்றால் விவசாயத்தை நம்பி விவசாயம் எனும் தொழில்துறையை நம்பி அல்லது விவசாயியை நம்பியாவது கொடுக்க வேண்டும். தங்கத்தை நம்பிக் கொடுக்கப் பட்டால் அது தங்க நகைக்கடன்தானே.

அடுத்த முக்கியமான காரணம் விவசாயத்தை நம்பி கடன் கொடுப்பது என்பது ஆபத்தானது. உத்சேமாகக் கணக்கிட்டாலும் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டாலும் விவசாயத்திற்கும் ஆகும் செலவையும் அதிலிருந்து வருகின்ற விற்றுமுதலையும் கணக்கிட்டால் செலவு அதிகம் ஆயிருக்கும், விற்றுமுதல் குறைவாகக் கிடைத்திருக்கும். விவசாய விளைபொருளுக்குக் கிடைக்கும் லாபம் என்பது மிகக் குறைவுதான். விவசாயம் ‘Low Margin Model’ வகையைச் சார்ந்தது. அந்த மிகக் குறைந்த லாபமும் பருவநிலையின் சூதாட்டத்திற்கு உட்பட்டது. வந்தாலும் வரும், வராமல் போனாலும் போகும்.

நம் நாட்டில் விவசாய விளைபொருளுக்கு சரியான விலையை விடுங்கள், உரிய விலை ஒருபோதும் கிடைப்பதில்லை. விவசாயத்திற்குச் செய்யப்படும் செலவு மட்டும் அதிகமாகிக் கொண்டே போகும். இதற்குக் காரணம் விவசாயத்திற்குத் தேவையான இடுபொருள்கள் அத்தனைக்கும் சரியான விலை கொடுத்துதான் விவசாயி சந்தையில் வாங்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். கருவிகள் அத்தனையையும் சரியான விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். கடன் வாங்கியிருந்தால் அதற்குச் சரியான வட்டியைக் கொடுத்துதான் தீர வேண்டும். ஆனால் விளைவிக்கப்படும் பொருளுக்குச் சந்தையில் எப்போதும் சரியான விலை கிடைப்பதில்லை. இதற்கு இடைத்தரகர்கள் காரணம் என்ற நொண்டிச்சாக்குகள் ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. உண்மையில் இடைத்தரகர்கள்தான் காரணம் என்றால் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க முடியாதா? உண்மையில் விவசாயம் குறித்து வகுக்கப்படும் கொள்கைகளும் முக்கிய காரணம். அரசாங்கமே நேரடியாகக் கொள்முதல் செய்யும் நெல்லிலும் இதே நிலைதான் என்பதால் நெல்லுக்கு வழங்கப்படும் அல்லது நிர்ணயிக்கப்படும் விலைதான் இதில் பிரச்சனை.

விவசாயிகள் நெல்லுக்கு வழங்கப்படும் விலையை ஏற்க மறுத்து இருப்பு வைக்கத் தொடங்கினாலோ, விற்க முடியாது என்ற முடிவுக்கு வந்து தங்களுக்குத் தேவையான அளவு மட்டும் உற்பத்தி செய்து கொள்வோம் என்ற முடிவுக்கு வந்து விட்டாலோ நெல்லுக்கான சரியான விலையை நோக்கிக் கொள்கைகள் வகுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. நிலைமை அப்படி மாறப் போவதில்லை. இருக்கின்ற பணத்தை எல்லாம் விவசாயத்தில் விட்டு விட்டு விவசாயி விளைபொருளாகி விட்ட நெல்லை விற்றுப்பொருளாக மாற்றினால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை இருப்பதால் விவசாயிகள் நெல்லை இருப்பு வைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கான வசதிகளும் விவசாயிகளிடம் இல்லை. அதனால் நெல்லுக்கான சரியான விலை கிடைப்பதற்கான வாய்ப்பில்லை.

அரசாங்கத்தின் தானியக் கையிருப்பும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் நெல்லுக்கான சரியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருக்கிறது. தவிரவும் வெளிநாட்டு இறக்குமதிகளும் விவசாயிகளின் தலையில் குட்ட எப்போதும் தயாராக இருக்கின்றன.

உலக அளவில் நெல்லுக்கான தட்டுபாடு ஏற்பட்டு அரசாங்கத்தின் தானியக் கையிருப்பும் குறைந்துப் போயிருந்தால் நெல்லுக்கான சரியான விலையென்ன மிகையான விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதுவரை விவசாயிகள் தங்கள் தேவைக்கான நெல்லை எடுத்து வைத்துக் கொண்டு உபரி நெல்லை விற்பதன் வாயிலாக வியாபாரிகளின் கையில் போய் சேரும் நெல்லின் அளவை ஓரளவு குறைக்க முடியும். விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லைப் போட்டு விட்டு அதே வியாபாரியிடம் அரிசியை வாங்கித் தின்பதில் இன்னும் குறியாக இருந்தால் நெல்லுக்கான உரிய விலையை எப்போதும் பெற முடியாது.

இப்போது நாம் மேலே குறிப்பிட்டபடி விவசாயக் கடன்கள் குறித்த இன்னொரு உண்மை முகத்தையும் பார்க்க வேண்டும்.

இங்கு வழங்கப்படும் விவசாயக் கடன்கள் அனைத்தும் பெயர் அளவில்தான் விவசாயக் கடன்கள். உண்மையில் அவை தங்க நகைக் கடன்களே. தங்கநகைக் கடன்கள் வங்கிகளுக்குப் பாதுகாப்பானவை. தங்க நகையைப் பெற்றுக் கடன் வழங்குவதற்கு எந்த விதமான கோப்புகளோ பத்திரங்களோ தேவையில்லை. உத்திரவாதங்களும் தேவையில்லை. தங்கமே ஒரு மதிப்பு மிக்க கோப்புதான். தங்கமே மதிப்புமிக்க பத்திரம்தான். தங்கமே ஓர் உத்திரவாதம்தான். இதை ஒரு விவசாயியினால் தங்கத்தைத் தவிர வேறொன்றை ஈடுகாட்டித் தர முடியாது. விவசாயமும் தர முடியாது. ஆனால் தங்க நகை தரும். கடனுக்குத் தங்கம்தான் சரியான உத்திரவாதம். ஏனென்றால் பணமே தங்கத்தின் மாற்றுதான் மற்றும் தங்கத்திற்கான ஒப்பந்தப் பத்திரம்தான். ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் தங்க இருப்பைக் கருத்தில் கொண்டுதான் பணத்தை அச்சடிக்கின்றன. டாலர் இருப்பைக் கருத்தில் கொண்டும் அச்சடிக்கின்றன என்று சொன்னாலும் டாலர் தங்கத்தின் இருப்பைக் கருத்தில் கொண்டுதான் அச்சடிக்கப்படுகின்றது.

விவசாயிகள் நெல்லைப் பணத்திற்கு விற்றாலும் அந்தப் பணத்தை உடனடியாகத் தங்கமாக மாற்றிக் கொள்வது வருங்கால விவசாய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வசதியாக இருக்கும். தங்கத்தை வேண்டாம் என்று விற்றாலும் தங்கத்தில் லாபம் இருக்கிறது. விற்கும் விளைபொருளுக்கான வரவைப் பணமாகச் சேமிப்பதையோ கையில் இருப்பு வைத்துக் கொள்வதையோ தவிர்க்க வேண்டும். தங்கமாக மாற்றிக் கொள்வதன் மூலம் விவசாயத் தேவைகளைத் தங்கத்தை விற்பதன் மூலமாகவோ அல்லது தங்கத்துக்கு ஈடாகத் தங்க நகைக் கடன் பெறுவதன் மூலமாகவோ நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இனிவரும் காலங்களில் விவசாய விளைபொருளை இருப்பு வைப்பது குறித்தும், விளைபொருளுக்கான வரவைத் தங்கமாக ஆக்கிக் கொள்வது குறித்தும் விவசாயிகள் கவனம் செலுத்துவது விவசாயத்தின் ஆரோக்கியமான நகர்வுக்கு வழிவகுக்கும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...