19 Aug 2023

இணைவும் பிரிவும் எப்படி நேர்கின்றன?

இணைவும் பிரிவும் எப்படி நேர்கின்றன?

காதலிக்கும் போது பிரிய மாட்டோம் என்பார்கள். காதல் அப்படிப்பட்டது என்பார்கள். அதில் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்று இப்போது காதல் பிரிவுகளை இணைப்பின் உடைதல் (பிரேக் அப்) என்கிறார்கள்.

மணமாவதற்கு முன் இணைந்து வாழும் (லிவிங் டுகெதர்) ஒரு வாழ்க்கை இருந்தால் திருமணத்திற்குப் பிறகான பிரிவுகள் இருக்காது என்கிறார்கள். மணமாவதற்கு முன் இணைந்து வாழும் திட்டம் (லிவிங் டுகெதர்) ஆரம்பித்து சில நாட்களில் பிரிபவர்கள் இருக்கிறார்கள். அந்தப் பிரிவையும் கூட இணைப்பின் உடைதல் (பிரேக் அப்) என்ற வகையறாவில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

லிவிங் டுகெதர் என்பதை மண வாழ்க்கைக்கு முன் இணைந்து வாழ்தல் அல்லது மணமாகாமல் இணைந்து வாழ்தல் என்று இரு வகையில் குறிப்பிடலாம். மணமாகி விவாகரத்தாகி அதன் பின் திருமணத்தை விரும்பாமல் விருப்பமான இணையரோடு இணைந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இவ்விரு நிலைகளுக்கும் லிவிங் டுகெதரில் வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டாம் வகையில் நிகழ்ந்தாலும் பிரிவு பிரிவுதான்.

திருமணத்திற்குப் பிறகான பிரிவுகளை விவாகரத்துகள் என்கிறோம்.  இந்தப் பிரிவில் சட்டப்பூர்வமான நெருக்கடிகளும் சிக்கல்களும் இருக்கின்றன என்றாலும் இந்தப் பிரிவிலும் இணைப்பின் உடைதல் (பிரேக் அப்) தரும் வலிகளை ஒத்த வலிகளோடுதான் பிரிய வேண்டியதாக இருக்கிறது.

வார்த்தைகளால் நாம் பலவாறாகப் பிரிவுகளை வேறுபடுத்தினாலும் பிரிவு என்பது பிரிவுதான் இல்லையா? காதலானது மணவாழ்க்கைக்கு முன் இணைந்து வாழ்வதாகி (லிவிங் டுகெதராகி) திருமணத்தில் முடிந்து வெற்றி பெறுவதும் உண்டு.

காதல் – மண வாழ்க்கைக்கு முன் இணைந்து வாழ்தல் (லிவிங் டுகெதர்) – திருமணம் என்ற இந்தப் படிநிலை வரிசைக்கிரமமாகச் சரியான படிநிலைதான்.

மனம் பொருந்திப் போவதில்தான் இந்த வரிசைக்கிரமங்கள் வெற்றிப் பெறுகின்றன. மனம் பொருந்திப் போகா விட்டால் வரிசைக்கிரமமாக எல்லாம் சரியாக அமைந்தாலும் எந்த நிலையில் வேண்டுமானாலும் பிரிவுகள் நேரிடலாம்.

காதல் – மண வாழ்க்கைக்கு முன் இணைந்து வாழ்தல் (லிவிங் டுகெதர்) – திருமணம் எல்லாம் முடிவில் உடலைத் தாண்டி மனதை நேசிக்கும் தன்மை இருக்கிறதா என்பதற்கான சோதனைதான் என்று எனக்குப் படுகிறது. உங்கள் இணையரின் மனம் உங்களுக்கும், உங்கள் மனம் உங்கள் இணையருக்கும் பிடித்து விட்டால் நீங்கள் உங்கள் உறவைத் திருமணம் – மணமாகும் முன் இணைந்து வாழ்தல் (லிவிங் டுகெதர்) – காதல் என்ற தலைகீழ் வரிசையில் கொண்டு சென்றும் இணைந்து இருக்கலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிடித்தங்கள் இருப்பது போலத்தான் மனதை நேசிப்பதிலும் பிடித்தங்கள் வேறுபடுகின்றன. ஒரு மனம் ஒவ்வொரு நேரத்திலும் எப்படிப்பட்ட மனதை நேசிக்கும் என்ற அந்தந்த நேர மாறுபாடுகளுடன் யோசித்தால் மனப்பிடித்தம் என்பது சாதாரணமில்லை என்பது புரிய வரும்.

ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது மனப்பிடித்தம் என்பது சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும் மனதைப் புரிந்து கொள்ளும் பிடித்தம் எப்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும். இன்னொருவர் மனதைப் புரிந்து கொள்வது உங்களுக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டால் அதுகுறித்து நீங்கள் அக்கறை காட்டவே மாட்டீர்கள். அப்போது நிலைமை இன்னும் சிக்கலாகி விடும்.

உங்களைப் பிடித்த ஒரு மனமும், அந்த மனதைப் பிடித்த நீங்களும் என்று பொருந்துவது ரொம்பவே அபூர்வம். இணையர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற வழக்கு உருவாவதற்கு அதுவே காரணம்.

மனப்பிடித்தங்கள் இருவருக்கும் நூறு சதவீதம் ஒன்றுவது அதிசயம்தான். அப்படியொரு அதிசயம் நிகழா விட்டால் அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என்ற ஏக்கத்தில் நீங்கள் தேடிக் கொண்டே இருக்கலாம். தேடித் தேடி அடைந்து, அடைந்தது பிடிக்காமல் பிரிந்து, மீண்டும் தேடத் தொடங்கி மீண்டும் அடைந்து இது ஒரு சுழற்சியாகவும் மாறலாம்.

மற்றவர்களின் மனப்பிடித்தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இன்னொருவரின் மனப்பிடித்தம் உங்களுக்கு ஏன் பிடித்தம் இல்லாமல் போகிறது என்று யோசிக்கலாம். பிடித்தம் இல்லாத உங்கள் இணையருக்கு ஆறுதல்களும் அரவணைப்புகளும் உங்கள் மீதான பிடித்தங்களை அதிகம் செய்யலாம். இது எப்போதும் பிடித்தமில்லாத சூழல்களைப் பிடித்தத்திற்குள் கொண்டு வருகின்றது. மனம் எப்போதும் அரவணைப்புக்கும் ஆறுதலுக்கும் ஏங்குகிறது. அது புத்திசாலித்தனமான யோசனைகளைப் புறந் தள்ளுகிறது. உறவுகளில் சிக்கல்கள் நேரும் போது நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதை விட அன்பும் அரவணைப்புமாக உணர்வுபூர்வமாக நடந்து கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

பிடித்தமில்லாத சூழ்நிலைகளைப் புத்திசாலித்தனமாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுவதை விடுத்து அவர்களின் மன உணர்வுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆறுதல்கள் சொல்லலாம். அரவணைத்துக் கொள்ளலாம். அது இணைப்பை அதிகப்படுத்தும்.

ஒரு நேரத்தில் எப்படி ஒருவரை நேசிக்கிறோம்? இன்னொரு நேரத்தில் அப்படி உருகி உருகி நேசித்தவரை எப்படி வெறுக்கிறோம்? அதுவும் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற வன்மம் உண்டாகும் அளவுக்கு எப்படி வெறுக்கிறோம்? இந்தக் கேள்விகள் முக்கியமானவை.

ஒருவரை நாம் நேசிக்கும் போது அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அவரிடம் எந்த விதமான திருத்தத்தையும் எதிர்பார்ப்பதில்லை. அவர் எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனம் இருக்கிறது. வெறுக்கும் இடத்தில் அவரிடம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். அவர் அப்படி இருப்பதை நாம் விரும்புவதில்லை. நாம் எப்படி மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி அவர் மாற விரும்பவில்லை என்றால் வெறுப்பு மேலும் வெறுப்பாக நீண்டு அது வன்மமாகவும் மாறுகிறது.

ஒரு துளி வெறுப்பானது அவ்வளவு விரும்பி நேசித்தவரையே இவரையா நேசித்தோம் என்று எண்ண வைக்கிறது. இவரை எப்படி நேசித்தோம் என்று யோசிக்கவும் வைக்கிறது. இதெல்லாம் எதிர்பார்ப்பிற்கேற்ற விருப்பத்திற்கு மாறாததால் ஏற்படும் வெறுப்புகள்தான். இதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம், புரிந்து கொள்ளப் போகிறோம் என்பதில்தான் இணைவும் பிரிவும் இருக்கின்றன.

புரிந்து கொள்வதில் சுதந்திரம் இருக்கிறது. நாம் புரிதலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே புரிந்து கொள்வது ஒரு நல்வாய்ப்பு மற்றும் நல்ல தேர்வு என்றே சொல்ல வேண்டும். மாறாக நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிரிதலுக்கான நல்ல வாய்ப்பாகவும் நல்ல தேர்வாகவும் அமைந்து விடலாம். இந்த ஒரு சிறு புரிதல் இணைவையும் பிரிவையும் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...