18 Aug 2023

கேடும் சாக்காடும் – 39 வயதிற்குள்ளாக…

கேடும் சாக்காடும் – 39 வயதிற்குள்ளாக…

39 வயதிற்குள்ளாகச் சாதித்த மாபெரும் மனிதர்கள் பற்றி அறியும் போது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்களைப் பற்றி நினைக்க நினைக்க மயிர் கூச்செரிகிறது.

1)      சே குவேரா,

2)      பிளைஸ் பாஸ்கல்,

3)      பாரதியார்,

4)      விவேகானந்தர்

5)      அலெக்ஸாண்டர்

போன்ற இந்த மாமனிதர்கள் எல்லாம் 39 வயதிற்குள் மகத்தான சாதனைகளை நிகழ்த்தி விட்டார்கள்.

மகத்தான சாதனைகளை நிகழ்த்திய இந்த மாமனிதர்கள் மேல் மரணத்திற்கு என்ன காதலோ? 39 வயதிற்குள் அவர்களை தன்னுள் ஈர்த்துக் கொண்டு விட்டது.

சே குவேரா இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகராகத் திகழ்வதற்குக் காரணம் 39 வயதிற்குள் நிகழ்த்திய சாதனைகள்தான். அவ்வளவு சாதனைகள் புரிந்த அம்மனிதர் குறைமாத குழந்தையாகப் பிறந்தவர். மலேரியாவால் பாதிக்கப்பட்டவர். இறுதி வரை ஏகாதிபத்தியங்களோடு மட்டுமில்லாமல் ஆஸ்துமாவுடனும் போராடியவர். எதிரிகள் துப்பாக்கியால் சுட்ட போதும் வீழ்ந்து கிடந்து குண்டுகளை வாங்கிக் கொள்ள மனமின்றி எழுந்து நின்று நெஞ்சை நிமிர்த்திக் குண்டுகளை வாங்கிக் கொண்டவர். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்பியவர் உலகம் புகழும் இந்த மாமனிதர்.

பாரதியைப் பற்றியோ, விவேகானந்தர் பற்றியோ அவர்களின் சாதனைகள் பற்றியோ சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை என்றாலும் சொல்கிறேன்.

விவேகானந்தர் துணிவின் அடையாளம். தன்னம்பிக்கையின் லட்சினைக்கான உருவம். அவரது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இன்றும் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. தேசிய இளைஞர் தினம் அவரது நினைவாக அவர் பிறந்த ஜனவரி 12 இல்தான் கொண்டாடப்படுகிறது. நாட்கள் குறைவாக இருப்பதாக ஓய்வின்றி உழைத்தவர். தனது குருநாதரின் பெயரால் நாடு முழுவதும் மடங்களை உருவாக்கி மக்கள் தொண்டே மகேசன் தொண்டென ஆன்மிகத்தையும் இறைத்தன்மையையும் மக்கள் சேவையோடு ஒன்றிணைத்தவர். புதிய பாரதத்தை எழுச்சியுற செய்ததிலும் விழிப்புறச் செய்ததிலும் கருதிய இலக்கை அடையும் வரை அயராது உழைக்கச் செய்யத் தூண்டியதிலும் மகத்தான மனிதராக அன்றும் இன்றும் என்றும் ஜொலிக்கிறார். நூறு இளைஞர்கள் இருந்தால் தன்னால் இந்தியாவை மாற்றிக் காட்ட முடியும் என்று நம்பியவர் இந்த மகத்தான மாமனிதர்.

பாரதியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் எதைப் பற்றிச் சொல்வது? கவிஞர் என்றா? கட்டுரையாளர் என்றா? பத்திரிகை ஆசிரியர் என்றா? தமிழறிஞர் என்றா? தமிழ்ப்புலமைக் கொழித்த புதுத்தமிழின் புத்திரர் என்றா? விடுதலைப் போராட்ட வீரர் என்றா? சமூக சீர்த்திருத்தவாதி என்றா? நல்லதோர் வீணை செய்து நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ எனக் கேட்ட பாரதிதான் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இரண்டு விதமாகவும் இறைவனைக் கேள்வி கேட்டு ஆச்சரியப்பட்டவர். தனியொரு மனிதருக்கு உணவில்லை என்றால் உலகத்தை அழிக்க சொன்ன பாரதிதான் நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல் என்ற கடமையையும் நினைவு கொள்பவராக இருந்தார். தன்னுடைய ஏழ்மையை நினைவில் கொள்ளாமல் இந்திய விடுதலையைக் கனவு கண்டவர். அதனாலே மகத்துவமான மனிதராகவும் ஆனவர். மகாகவியென தமிழ் மக்களின் மனதில் எல்லாம் நிலைபெற்றவர்.

பிளைஸ் பாஸ்கல் ஒரு கணித அறிஞர். இயற்பியலாளர் மற்றும் தத்துவ ஞானியும் கூட. மனிதர்களின் எல்லா பிரச்சனைகளும் ஓர் அறையில் அடங்கிக் கிடக்க முடியாததால் ஏற்படுபவை என்றவர் அவர். அவர் சொன்னபடியே அவரே அறைக்குள் அடங்கிக் கிடந்து அவர் கண்டுபிடித்த கணித உண்மைகள் மகத்தானவை. அவர் உருவாக்கிய கூட்டல் கணிப்பான்களே பின்னர் உருவாக்கப்பட்ட கணிப்பான்களுக்கு அடிப்படை. கூம்பு வெட்டுகள் குறித்த பாஸ்கல் தேற்றம் கணிதத்தில் பிரபலம். அவர் உருவாக்கிய பாஸ்கல் முக்கோணத்தைக் கொண்டு ஈருறுப்பு தேற்றத்தின் கெழுக்களை எளிமையாக நினைவில் கொள்ளலாம். கணிதத்தின் உய்த்தறிதல் முறைக்கும் நிகழ்தகவு கணக்கீடுகளுக்கும் பாஸ்கலின் கண்டுபிடிப்புகளே ஆதாரம். இந்த மகத்தான மனிதரை அறிவியல் அழுத்தத்தின் அலகு பாஸ்கல் என்பதாகவும் கணினி உலகம் பாஸ்கல் என்று ஒரு கணினி மொழிக்குப் பெயர் சூட்டியும் பெருமை செய்து நினைவு கொள்கின்றன.

இப்போது சொல்லுங்கள், எப்படிப்பட்ட மனிதர்கள் இந்த மகத்தானவர்கள்!

இவர்களைத் தாண்டிய இன்னொருவர் இருக்கிறார். அவர் அலெக்ஸாண்டர். முதன் முதலாக உலகின் பெரும் பகுதியைப் பிடித்த பேரரசர் என்ற சிறப்பைப் பிடித்தவர். அனைவரையும் தாண்டியவர் என இவரைச் சொல்லக் காரணம், இவரது ஆயுட்காலம் 32 ஆண்டுகளே. இந்தியாவின் பஞ்சாப் வரை கூட இவர் படையெடுத்து வந்து நிலப்பகுதிகளைப் பிடித்திருக்கிறார். யாராலும் வெல்ல முடியாத பாரசீகத்தை தம் காலத்தில் வென்றவர். தன்னுடைய மரணத்தில் கூட தான் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை வெறுங்கையை வெளியில் காட்டிப் புதைக்கச் செய்து உலகிற்கு மகத்தான வாழ்வியல் உண்மையைத் தந்தவர். உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளைப் பிடித்த போதும் தன்னால் தம்பிடி நிலத்தைக் கூட எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதை இதை விட வேறெப்படி உலகின் பெரும்பகுதியை வென்ற ஒரு மகத்தான மனிதரால் சொல்ல முடியும்?

இவர்கள் எல்லாரையும் பற்றி நினைக்கும் போது எனக்கு இந்தக் குறள்தான் நினைவுக்கு வருகிறது.

“நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது.”      (குறள், 235)

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...