17 Aug 2023

நெருக்கடிக்கான தளர்வு முறை

நெருக்கடிக்கான தளர்வு முறை

மன நெருக்கடியிலிருந்து வெளியே வருவது சாதாரணமில்லை.

ஏனிந்த மன நெருக்கடி?

எப்படி உருவாகிறது இந்த மன நெருக்கடி?

யார் காரணம் இந்த மனநெருக்கடிக்கு?

இப்படி எத்தனை விதமாக எந்தக் கேள்விகளைக் கேட்டாலும் அதற்குக் காரணமும் அதற்கான விடையும் அந்த மனதோடு சம்பந்தப்பட்ட அந்த மனிதர்தான்.

ஒருவருக்கான மன நெருக்கடியை அவர்தான் உருவாக்கிக் கொள்கிறார்.

அவருக்குள் உருவாகும் மன நெருக்கடிக்கு அவரே காரணமாகிறார்.

வாழ்க்கை குறித்தும் நிகழ்வுகள் குறித்தும் ஒருவர் கொள்ளும் மனப்போக்கே மன நெருக்கடியை உருவாக்குகின்றன.

உண்மையாக மிகுந்த மன நெருக்கடிக்கு ஆளாகும் சூழ்நிலையில் இருக்கும் மனிதர்கள் அதற்கு நேர்மாறாக மன நெருக்கடி இல்லாமல் இருக்கலாம். அதற்குக் காரணம் அந்தச் சூழ்நிலை அதனால் உருவாகும் மனநிலை குறித்த அவர்களது மனப்போக்கே. மன நெருக்கடிக்கு வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் இருக்கும் ஒருவர் அதற்கு நேர்மாறாக மிகுந்த மன நெருக்கடியோடு இருக்கலாம். இதற்குக் காரணமும் அச்சூழ்நிலை மற்றும் அதனால் உருவாகும் மனநிலை குறித்த அவரது மனப்போக்கே.

மனதை நோக்கி வரும் கருத்துகளை மனம் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை மனம் எப்படி வேண்டுமானால் எதிர்கொள்ளலாம். சம்பவங்களை அல்லது நிகழ்வுகளை மனம் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். இவற்றில் அணுகும் விதமும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் விதமும் ஒருவரை மனநெருக்கடியிலோ அல்லது மன நெகிழ்விலோ வைத்திருக்கும்.

உங்கள் மனதை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்று  கூறலாம். நீங்கள் உருவாக்கிக் கொள்ளாவிட்டாலும் உங்களுக்கான மனநிலையும் மனப்போக்கும் உங்களை அறியாமல் உருவாகிறது. உருவாக்கிக் கொண்டாலும் அதற்கேற்ப மனநிலையும் மனப்போக்கும் உருவாகின்றன. உருவாக்கிக் கொள்ளும் போது உங்கள் மனநிலையையும் மனப்போக்கையும் கட்டுப்படுத்தும் தன்மை உங்களுக்குக் கிட்டுகிறது. உங்கள் மனநிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டதால் உங்களால் உங்கள் மனப்போக்கைப் புரிந்து கொண்டு கட்டுப்படவும் கட்டுப்படுத்தவும் முடிகிறது.

நீங்கள் அறியாமலோ புரியாமலோ உங்கள் மனப்போக்கும் மனநிலையும் உருவாகி இருப்பதாகக் கருதினாலும் அதை நீங்கள் உற்றுநோக்கிப் பகுத்தறிந்து கொள்ள முடியும்.  தியானம் போன்ற வழிமுறைகள் இதற்கு உதவலாம். உங்கள் நலம் விரும்பிகள் வழிகாட்டிகள் மூலமாகவும் உங்கள் மனப்போக்கையும் மனநிலையையும் நீங்கள் அறிந்தும் புரிந்தும் கொள்ளலாம்.

உங்கள் மனப்போக்கையும் மனநிலையையும் உங்களால் உற்றுப் பார்க்க முடிகிறதென்றால் அத்துடன் உங்களால் பகுத்தறிய முடிகிறதென்றால் உங்கள் மனப்போக்கும் மனநிலையும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வந்து விடும். துவக்கத்தில் இது சிரமமாக இருந்தாலும் படிப்படியாகக் காலப்போக்கில் உங்கள் மனநிலையையும் மனப்போக்கையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் கலையில் நீங்கள் தேர்ச்சி பெற்று விடுவீர்கள்.

ஒரு பக்குவமான மனிதர் அப்படித்தான் தன்னுடைய மனப்போக்கையும் மனநிலையையும் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வித்தையை அறிந்தவராக இருக்கிறார். தன் மனதை எப்படி நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்தவராக இருக்கிறார். அவர் மன நெருக்கடி இல்லாமலும் இருக்கிறார்.

தனக்கு மனநெருக்கடியை உருவாக்குவது தன்னுடைய எண்ணங்களும், தான் கொள்ளும் கருத்துகளும் அத்துடன் அவை தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் அல்லது கற்பித்துக் கொள்ளும் நோக்குகளும்தான் என்பதைப் புரிந்து கொள்ளும் போது ஒருவருக்குத் தன்னுடைய மனநெருக்கடியிலிருந்து வெளியேறும் வழியும் தெரிந்ததாகி விடுகிறது. முடிச்சைப் போட்டவருக்கு முடிச்சை அவிழ்க்கும் வித்தையும் தெரியும் என்பதைப் போலத்தான் இது.

மனம் ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கிறது என்பதை அறிந்தவர்கள் அதன் பிரதிபலிப்பிற்கேற்ப மனதுக்குள் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வார்கள். எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். மனதுக்குள் எண்ணங்களும் கருத்துகளும் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பது நாம் எண்ணங்களையும் கருத்துகளையும் அணுகும் மற்றும் எதிர்கொள்ளும் முறையில்தான் இருக்கிறது. இதன் நுட்பம் என்று பார்த்தால் நிதானமாகவும் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் அணுகும் போதும் எதிர்கொள்ளும் போதும் எதிர்மறையான பிரதிபலிப்புகள் இல்லாமல் போகின்றன என்பதுதான்.

எதிர்மறை பிரதிபலிப்புகள் இல்லையென்றால் ஒருவர் மனநெருக்கடிக்கு ஆளாவதும் இல்லை. நேர்மறை பிரதிபலிப்புகள் நிகழும் போது மனமகிழ்வுக்கும் மன நெகிழ்வுக்கும் குறையும் இருப்பதில்லை. இதற்காக ஒருவர் எண்ணங்களையும் கருத்துகளையும் உணர்வுகளையும் தான் உள்வாங்கிக் கொள்ளும் முறைகளையும் அவற்றை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளையும் உற்றுநோக்கிப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் புரிதல் மூலமாகவே மனநெருக்கடியின் முடிச்சுகள் புலனாகும். முடிச்சுகள் புலனாகப் புலனாக மேலும் மேலும் புதிது புதிதாக முடிச்சுகள் உருவாகுவதைத் தடுத்து விடுவீர்கள். உண்டாகி இருக்கும் முடிச்சுகளையும் மெல்ல அவிழ்க்கத் தொடங்கி விடுவீர்கள். பிறகு, மன நெருக்கடியா எனக்கா என்று நீங்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...