16 Aug 2023

பேருந்திலிருந்து தொடர்வண்டிக்கு…

பேருந்திலிருந்து தொடர்வண்டிக்கு…

இதுவரை எனது சென்னைப் பயணங்கள் அனைத்தும் பேருந்து பயணங்கள்தான். தொடர்வண்டியில் பயணித்ததில்லை. தொடர்வண்டி பயணம் என்றால் எப்படி பயணச்சீட்டு வாங்குவது, எந்தத் தொடர்வண்டியில் ஏறுவது, தொடர்வண்டியில் எப்படி இடம் கண்டறிந்து அமர்வது, பயணத்தின் முடிவில் இறங்கி எப்படி போக வேண்டிய இடம் நோக்கிப் போவது என்று ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். இவ்வளவு கேள்விகளுக்கு விடை காண்பதற்குப் பதிலாக எனக்குப் பிடிபட்ட தோதான பேருந்து பயணத்திலேயே பயணத்தை முடித்து விடலாம் என்று நினைத்து பேருந்து ஏறி விடுவேன்.

பேருந்து நிலையத்திற்குப் போய் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று விசாரித்தால் போதும் இழுத்துக்  கொண்டு போய் பேருந்திலேற்றி இருக்கையில் அமர வைத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். தொடர்வண்டி நிலையத்தில் இப்படி வழிகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொன்றையும் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும். விசாரிப்பதில் எனக்கு இயல்பாகவே ஒரு கூச்ச உணர்வு உண்டு. இந்தக் கூச்ச உணர்விற்காகவே பேருந்து பயணம்தான் எனக்கு லாயக்குப்பட்டு வரும் என்று நினைத்துக் கொள்வேன்.

தொடர்வண்டியும் சரி தொடர்வண்டி நிலையங்களும் சரி எப்போதும் ஒரு பரபரப்புடன் இயங்குவதாகவே எனக்குத் தோன்றும். நின்று நிதானித்துப் பேச அங்கு யாரும் இருக்க மாட்டார்கள், இறங்க வேண்டிய இடத்தில் எழுப்பி விடவும் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணங்கள் எனக்கு உண்டு. தொடர்வண்டியில் என்றால் நானாக சுயம்புவாக இருந்து இறங்கிக் கொள்ள வேண்டும், அல்லது அவ்வபோது விசாரித்துக் கொள்ள வேண்டும் என்ற இந்நினைப்புகளும் எனக்கே உரிய எண்ணங்கள்தான். பேருந்தில் இப்படிப்பட்ட சுயம்புவாக வேண்டிய அவசியமில்லை, நடத்துனரிடம் சொல்லி விட்டால் போதும், பக்கத்தில் அமர்பவர் என்னுடன் பேசாவிட்டாலும் அவ்வபோது போய் பேசிக் கொள்ள சந்தேகங்களைத் தெளிந்து கொள்ள நடத்துனர் வசதியாக இருப்பார் என்று நினைத்துக் கொள்வதும் நானாக நினைத்துக் கொள்வதுதான்.

தொடர்வண்டியிலும் பேருந்தின் நடத்துனரைப் போல பெட்டிக்குப் பெட்டி ஒருவரைப் போட்டு வைத்தால் வசதியாக இருக்குமே என்று நினைப்பேன். ஆனால் தொடர்வண்டி ஓர் இயந்திரத்தனமாக இயங்கக் கூடியது அல்லவா. நின்று நிறுத்தி நிதானித்து எல்லாம் ஏற்றிக் கொள்ளாது, இறக்கியும் விடாது. அதன் இயந்திரப் போக்கு புரிந்து அதற்கேற்ப அந்த நேரத்திற்குள் ஏறிக் கொள்ள வேண்டும், இறங்கிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற தொடர்வண்டி குறித்த கற்பிதங்கள் எனக்கு உண்டு.

இப்போது ஒரு தொடர்வண்டி பயணத்தை முடித்து விட்டுப் பார்க்கையில் நடைமேடையிலிருந்து தொடர்வண்டி பெட்டிக்குள் ஏறுவதில் சிரமம் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆரம்பத்தில் நினைத்துப் பார்த்த போது இரண்டு மலைகளைத் தாண்டுவதைப் போல மனதுக்குள் ஒரு விசித்திர எண்ணம் இருந்தது.

இப்படிச் சில உளவியல் சிக்கல்களாலும் நானாக நினைத்துக் கொண்ட மனப்போக்குகளாலும் தொடர்வண்டி பயணங்களைத் தயங்கித் தயங்கித் தவிர்த்து வந்தேன்.

அண்மையில் சென்னையில் ஒரு திருமணத்திற்குக் குடும்பத்தோடு செல்ல பேருந்து பயணத்தைத் திட்டமிட்டாயிற்று. மன்னார்குடி போன பிறகு தொடர்வண்டியில் செல்லலாமே என என்னைத் தவிர மற்ற எல்லாருக்கும் தோன்ற ஆரம்பித்து விட்டது. அம்மா, மனைவி, மகள் யாரும் இதுவரை தொடர்வண்டியில் பயணித்ததில்லை என்பதால் அவர்களுக்குத் தொடர்வண்டியில் செல்ல வேண்டும் என்ற ஆசை பூதாகரமாகக் கிளம்பி விட்டது.

எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. “நானெல்லாம் டிரெய்ன்ல போகவே முடியாது போலருக்கு.” என்று அம்மா சொன்னதும், “ஆமாம் அத்தெ. நானும்தான், அதுல போகவே முடியாது போலருக்கு.” என்று மனைவி சொல்லவும், “ஆமாம் ஆத்தா, நானும்தான் போகவே முடியாது போலருக்கு.” என்று மகளும் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. இவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றவாவது தொடர்வண்டியில் போவது என்ற முடிவு அப்போது அந்த நேரத்தில் உருவானது.

என்ன இருந்தாலும் எவ்வளவு சிரமங்கள் உண்டானாலும் சரி, தொடர்வண்டியில் செல்வது என்ற முடிவைச் சொன்னதும் அவர்களின் முகங்களில் உண்டான மகிழ்ச்சி இருக்கிறதே, அதை என் ஆயுளில் அதற்கு முன்பு பார்த்ததில்லை.

தற்போது கையில் கைபேசி இருக்கையில் தொடர்வண்டி பயணம் குறித்து யாரிடமும் கேட்கவும் வேண்டியதில்லை, விசாரிக்கவும் வேண்டியதில்லை எனக்குக் கொஞ்சம் சௌகரிய உணர்வைக் கொடுத்தது. கைபேசியில் இணைய இணைப்பைக் கொடுத்துக் கூகுளில் தேடிப் பார்த்தேன். மன்னார்குடியிலிருந்து பத்தே காலுக்குச் சென்னைக்குச் செல்ல தொடர்வண்டி இருந்தது. மன்னை எக்ஸிபிரஸ் என்ற அந்த தொடர்வண்டியின் பெயரே என்னை வசீகரிப்பதாக இருந்தது. அது ஒன்று போதாதா? ஆரம்ப உணர்வே அற்புத சுகமளிப்பது போன்ற ஒரு நம்பிக்கையைத் தந்தது.

பேருந்து நிலையத்திலிருந்து தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று விட்டோம். நிலையத்தில் பயணச்சீட்டு வாங்குமிடத்திலும் கூட்டம் பெரிதாக இல்லை. எல்லாரும் இப்போது இருக்கை முன்பதிவை கைபேசியிலேயே செய்து முடித்து விடுவதால் பயணச்சீட்டு வாங்குவதில் சிரமம் இல்லை என்று நினைக்கிறேன். முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு முன்பதிவில்லாத தொடர்வண்டியின் பெட்டிகளைத் தேடிப் பார்க்கப் புறப்பட்டோம். அதுவும் அருகிலேயே சில பெட்டிகளைக் கடந்ததும் வந்தது. முன்பதிவு செய்திருந்தால் பெட்டிகளைத் தேடி ஓர் அலைச்சல் இருந்திருக்குமோ என்னவோ!

பெட்டியினுள் நுழைந்ததும் இடம் இருக்குமா என்ற ஐயம் இருந்தது. தாராளமாக இடம் கிடைத்தது. அதுவும் படுத்து உறங்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு இடம் கிடைத்தது. அம்மா, மனைவி, மகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் விமானத்தில் செல்வதைப் போன்ற மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் இருந்தது. என்னுடைய முதல் தொடர்வண்டி பயணம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

என்னுடைய மனைவி அவளின் நெருங்கிய தோழிகளுக்கு அலைபேசி செய்து “நான் டிரெய்ன்ல போறேனாக்கும்.” என்று சொல்லிக் கொண்டாள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் பயணத்தை எனது மன தயக்கங்களையும் கூச்சங்களையும் கருத்தில் கொண்டு பேருந்துப் பயணமாக அமைத்திருந்தால இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.

தொடர்வண்டி பயணத்தின் அனுகூலங்களும் அதிமாக இருந்தன. வசதிகள் அதிகம். கட்டணம் குறைவு. அதாவது முன்பதிவில்லாத பயணத்திற்கு. படுக்கை வசதி உடைய பயணத்திற்கும் கட்டணம் கட்டுபடியாகக் கூடியதுதான். அதற்கு முன்பதிவு தேவை. பிற சொகுசு வகை பெட்டிகளுக்குக் கட்டணம் அதிகம்தான்.

சரியான நேரத்தில் இயங்கத் தொடங்கி சரியான நேரத்தில் ஒவ்வொரு நிலையமாகத் தொடர்வண்டி சென்று கொண்டிருந்தது. தொடர்வண்டியில் அமர்ந்தபடியே கைபேசியில் அவ்வபோது இணைய இணைப்பைக் கொடுத்து தொடர்வண்டி போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கே வேடிக்கையாக இருந்தது. மகள் உறங்காமல் தொடர்வண்டியின் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் செல்லும் தொடர்வண்டிக்கு எதிர் திசையில் மற்றொரு தொடர்வண்டி வேகமாகத் தடதடத்துக் கொண்டு செல்வதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். குளிர்காற்று வீசினாலும் பலகணிக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கண்ணில் தெரியும் நகரும் காட்சிகளை, அந்த இரவின் ஓவியங்களை ஆர்வமாகப் பார்ப்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் விழித்திருந்த அம்மா இரு இருக்கைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் ஒரு போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டு விட்டார்கள். மனைவி என்னுடன் நெடுநேரம் பேசியபடி வந்து கொண்டிருந்தாள்.

தொடர்வண்டி பயணத்தின் அனுகூலங்கள் அதிகம்தான் என்பதைத் தொடர்வண்டி பயணத்தின் நிறைவு எங்களுக்கு உணர்த்தியது. எங்கள் யாருக்கும் பயணக்களைப்பு தெரியவில்லை. உடலில் அசதியும் இல்லை.

சென்னை எழும்பூரில் தொடர்வண்டி தனது பயணத்தை நிறைவு செய்ததும் ஒவ்வொருவராகக் கண்ணில் படுவோரிடமெல்லாம் விசாரித்தபடியே தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

செல்ல வேண்டிய இடத்திற்குப் பேருந்து பிடிக்க வேண்டுமே என்று அதை விசாரித்த போது ஒரு முச்சக்கர வாகனக்காரர் பெருந்தொகைக்கு நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். பெருந்தொகை மருட்டிய காரணத்தில் நாங்கள் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தோம். அதைக் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு முச்சக்கர வாகனக்காரர் எங்கள் பின்னே ஓடி வந்தபடி எங்களுக்குக் கட்டுபடியாகும்படியான ஒரு தொகையைச் சொன்னார். நாங்கள் அவரது முச்சக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டோம்.

முச்சக்கர வாகனக்காரர்களிடம் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை என்று புரிந்தது. சமயத்தில் பேரம் ஒத்து வராமல் போனால் அவர்களின் வசவுகளை வாங்கிய அனுபவங்கள் எனக்கு அதிகமாக உண்டு என்பதால் அவர்கள் சொல்லும் தொகை ஒத்து வரவில்லை என்றால் வேண்டாம் என்று நகர்ந்தாலே போதும், கவனித்துக் கொண்டிருக்கும் இன்னொரு வாகனக்காரர் நமக்கேற்ற தொகைக்கு நம்மை அணுகுவார் என்பதையும் புரிந்து கொள்ள இந்தத் தொடர்வண்டி அனுபவம் உதவியது.

என்னைக் கேட்டால் நீங்கள் பேருந்திலே சென்னை சென்று வருபவராக இருந்தால் ஒருமுறையாவது சென்னைக்குத் தொடர்வண்டியில் சென்று வந்து பாருங்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...