15 Aug 2023

நம்பிக்கையின் உணவு கனவு

நம்பிக்கையின் உணவு கனவு

பகல் கனவு பலிக்காது என்பார்கள்

அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள்

கல்வியில் மாற்றத்தை உருவாக்க நினைத்த ஜுஜூபாய் பதேக்கா

என்ற ஆசிரியர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு பகல் கனவு என்பது

இன்றைய கல்வி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்க்கும் போது

அவருடைய பகல் கனவு பலித்திருக்கிறதுதான்

அப்துல் கலாம் சொல்வார்

உறக்கத்தில் காண்பதல்ல கனவு

எது உன்னை உறங்க விடாமல் செய்கிறதோ அதுவே கனவு என்று

உறங்காமல் கனவு கண்ட அந்த விஞ்ஞானியின்

எழுச்சி பாரதமும் இன்று உருவாகி இருக்கிறதுதான்

ஹெலன் ஹெல்லர் சொல்வார்

தினம் தினம் கனவு காணுங்கள்

கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்று

விடாமல் கனவு கண்ட அந்த பெருமாட்டியின் சாதனைகள்

இன்று உலகில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்லாது

அனைவருக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறதுதான்

பிராய்டு சொல்வார்

அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு கனவு என்று

கனவுகளுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சிய அந்த அறிஞரின்

கனவு குறித்த ஆய்வுகள் எத்தனையோ மனவியல் பிரச்சனைகளுக்குத்

தீர்வுகளைச் சொல்லியிருக்கிறதுதான்

பாரதி சொல்வார்

கனவு மெய்ப்பட வேண்டும் என்று

பாரதியின் காலத்தில் அவரது கனவுகள் மெய்ப்படாமல் போனாலும்

இன்று அவரது கனவுகள் ஒவ்வொரு மெய்ப்பட்டுக் கொண்டு இருக்கிறதுதான்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொல்வார்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்று

அவரின் சமத்துவக் கனவை நோக்கித்தான் இன்று உலகமே போய்க் கொண்டிருக்கிறது

சீன புனைவு இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லப்படும்

ஒரு நாவலின் பெயர் சிவப்பு அறை கனவு என்பது

வாழ்விலக்கியத்தில் மட்டுமல்லாது புனைவிலக்கியத்திலும்

கனவு நிகழ்த்தும் அசாத்தியங்கள் அதிகம்தான்

அறிஞர் அண்ணா பற்றிய ஒரு புத்தகத்தின் தலைப்பு

மாபெரும் தமிழ்க்கனவு என்பது

அந்த மாபெரும் தமிழ்க்கனவே

ஒரு மாநிலத்தின் பெயரை நாடு என்று அமையும் வகையில்

தமிழ்நாடு என்று ஆக்கியிருக்கிறது

பென்னட் சொல்வார்

கனவுகள் இல்லாமல் யாரும் மகத்துவத்தை அடைந்ததில்லை என்று

மகத்துவமான மனிதர்கள் அனைவருக்கும்

மகத்துவமான கனவுகள் இருந்திருக்கின்றனதான்

கனவு வருவதற்கான தூக்கத்தைப் பற்றி நீட்ஷே சொல்வார்

தூங்குவது என்பது சாதாரண கலை அல்ல

அதற்காக நாள் முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்று

நாள் முழுவதும் விழித்திருந்து நற்காரியங்களை நிகழ்த்துபவர்களுக்குத்தான்

நல்ல தூக்கம் கிடைக்கிறது

நல்ல தூக்கத்தில்தான் நல்ல கனவுகள் உண்டாகின்றன

உலகை உன்னதமாக மாற்றும் யோசனைகள் பிறக்கின்றன

கனவுகள் வெறும் கனவுகள் மட்டுமல்ல

உன்னதப் பசிக்கான உணவுகள்

உறுதியை வளர்ப்பதற்கான தினவுகள்

ஆம் கனவுகள் வெறும் கனவுகள் மட்டுமல்ல

நன்மையை நோக்கி நகர்த்தும் நம்பிக்கைக்கான விளைவுகள்

அவை வாழ்க்கைக்கான திசைகாட்டிகள்

இருண்மையைக் கடப்பதற்கான ஒளி விளக்குகள்

பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கான கலங்கரை விளக்கங்கள்

இறந்து போனவர்கள் கனவில் வந்தால் சுபம் என்பார்கள்

என்னைக் கேட்டால் ஆக்கப்பூர்வமான கனவு உங்களுக்கு வந்தால்

எல்லாம் சுபம் சுபம்தான்

கனவு காணுங்கள்

கனிவைப் பேணுங்கள்

புது உலகைக் காணுங்கள்

புதுமையைப் பேணுங்கள்

அதற்கான கனவுகளை எப்போதும் காணுங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...