14 Aug 2023

ஞாபக சக்திக்கான உணவுகளும் வழிமுறைகளும்

ஞாபக சக்திக்கான உணவுகளும் வழிமுறைகளும்

 ஓர் ஆசிரியர் அல்லது ஒரு மருத்துவர் அதிகம் எதிர்கொள்ளும் கேள்வி என்னவாக இருக்க முடியும்?

ஞாபக சக்தியைப் பெருக்கும் உணவுகள் ஏதேனும் இருக்கின்றனவா? ஞாபக சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இருக்கின்றனவா? என்பதாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

முதலில் உணவை எடுத்துக் கொள்வோம்.

கிராமங்களில் வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும் என்பார்கள். விளாம்பழமும் நல்லது என்பார்கள். ஞாபக சக்திக்காகத்தான் வல்லாரையையும் விளாம்பழத்தையும் உண்ண வேண்டும் என்றில்லை. வல்லாரையும் விளாம்பழமும் உடல்நலத்துக்கும் உகந்தவை. உண்ண வேண்டிய கீரை வகைகளில் வல்லாரையும் ஒன்று. அது போல உண்ண வேண்டிய கனி வகைகளில் விளாம்பழமும் ஒன்று.

ஞாபக சக்தியைப் பெருக்குவதற்கு என்று தனியாக எந்த குறிப்பிட்ட காய்கறிகளையோ, பழங்களையோ, தானியங்களையோ, பருப்பு வகைகளையோ அல்லது வேறெந்த உணவையோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆரோக்கியமான உணவு போதும்.

மூன்றாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் சொல்கிறார்களே சரிவிகித உணவு என்று. அது போதும். அதிலே உங்களுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைத்து விடும்.

குறிப்பாக உடல் வளர்ச்சிக்குப் புரதச்சத்து உதவுகிறது என்பதால் புரதச்சத்தைப் பற்றாக்குறை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்துள்ள உணவுகள் நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.

சில நேரங்களில் தாது சத்துகளின் குறைபாடும் உடலியக்கச் செயல்பாடுகளில் பிரச்சனைகளை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து குறைபாடுகள் குறைபாட்டு நோய்களை உண்டு பண்ணி விடும்.

இவற்றைப் புரதச்சத்து குறைபாடு, தாதுச் சத்து குறைபாடு, உயிர்ச்சத்து குறைபாடு என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. சரிவிகித உணவு என்றால் இவை ஏற்பட வாய்ப்பில்லை. அதனுள்ளே அனைத்தும் அடக்கம். அனைத்துச் சத்துகளும் கிடைக்கும் வகையில் சரிவிகித உணவை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

உண்ணும் உணவில் தானியங்களோடு காய்கறிகளும் பருப்பு வகைகளும் கீரை வகைகளும் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தினந்தோறும் முட்டை, பால் சேர்த்துக் கொள்வது, வாரத்தில் இருமுறை அசைவ உணவை எடுத்துக் கொள்வது என்று உணவுப்பழக்கத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். நொறுக்குத் தீனிகளை உண்பதை விடுத்து பழங்கள், கடலைகள் போன்றவற்றை உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்காக நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நம் உணவு முறையே இயற்கையாக அப்படித்தான் அமைந்து இருக்கிறது. உணவில் கீரைகளையும் காய்கறிகளையும் ஒதுக்காமல் உண்ண பழகிக் கொண்டால் போதும்.

விலையுயர்ந்த பழங்களை வாங்கி உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தந்தப் பருவங்களில் மலிவாகக் கிடைக்கும் பழங்களை வாங்கி உண்ணுவதை வழக்கமாக வைத்துக் கொண்டால் போதுமானது. தினம் ஒரு வாழைப்பழம் உண்ணுவது கூட போதுமானது.

ஒரு பஜ்ஜியோ, போண்டோவோ, பகோடாவோ உண்பதை விட கைப்பிடியளவு நிலக்கடலையோ, பட்டாணிக் கடலையோ உண்பது ஆரோக்கியமானது. இப்படி உணவுப் பழக்கத்தை சற்று மாற்றி அமைத்துக் கொண்டாலே போதுமானது உங்கள் ஞாபக சக்திக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

இரண்டாவதாக ஞாபக சக்திக்கான வழிமுறைகள் என்று பார்த்தால் கவனச் சிதறல்களைக் குறைத்தாலே போதுமானது. தொலைக்காட்சி, அலைபேசி, சமூக ஊடகங்கள் என்று இன்றைய வாழ்வில் கவனச்சிதறலுக்கான காரணிகள் அதிகமாக இருக்கின்றன.

நம்முடைய பெரும்பாலான நேரமும் காட்சி ஊடகப் பொருட்களில்தான் தொலைந்து போகிறது. இதை முறைபடுத்திக் கொண்டால் நாம் ஞாபக சக்தியைப் பெருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இயல்பாக நம் ஞாபக சக்தி அதிகமாகவே இருக்கும்.

காட்சி ஊடகப் பொருட்களான தொலைக்காட்சி, அலைபேசி, கணினி போன்றவற்றை எல்லை கடந்து பயன்படுத்தும் ஒருவருக்கு கவனச்சிதறல் என்பது சாதாரணமாகிவிடும். கவனச்சிதறல் ஒன்று போதும் ஒருவரின் ஞாபகச் சக்தியைப் பலவீனப்படுத்த.

இன்றைய கால கட்டத்தில் ஒருவர் தொலைக்காட்சி பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்று முறைபடுத்திக் கொள்ள முடியும். அதே போல கணினியைப் பயன்படுத்தாமல் இருப்பதோ, அலைபேசியை உபயோகிக்காமல் இருப்பதோ முடியாது. அவற்றின் பயன்பாட்டையும் முறைபடுத்திக் கொள்ள இயலும்.

கணினியில் பணியாற்றும் சூழ்நிலையில் உள்ள ஒருவர் ஒரே மாதிரியான அமர்வு உடல் நிலைக்கும் அத்துடன் கண்ணுக்கும் சிறிது நேர சீரான ஓய்வு இடைவெளிகளோடு கணினியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிட்டுக் கொள்ள முடியும்.

என்னதான் நீங்கள் அதிதீவிரமாகப் பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்தாலும் நடைபயிற்சிக்கு நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நண்பர்களோடும் உறவுகளோடும் சிரித்துப் பழகவும் நேரம் ஒதுக்கிக் கொள்ளவும் வேண்டும்.

அவ்வபோது வெளியிடங்களுக்குச் சென்று வரும் வகையில் சிறு சிறு பயணங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் மனம் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கும். ஞாபக சக்தி குறைவுபடாமல் இருக்க மன மகிழ்வும் நெகிழ்வும் முக்கியம். அதாவது மனஇறுக்கம் மற்றும் மன உளைச்சலான சூழ்நிலைகள் ஞாபக சக்தியைக் குழைத்து விடக் கூடியவை.

இதைத்தாண்டி இன்னும் ஞாபக சக்தி வேண்டுமானால் எதில் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம் வேண்டுமோ அது குறித்து வாசிப்பது மற்றும் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

வாசிப்பது என்றால் மீண்டும் மீண்டும் வாசிப்பது, பயிற்சி செய்வது என்றால் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வது. இந்த ‘மீண்டும் மீண்டும்’ என்பதுதான் ஞாபக சக்திக்கான சூட்சமம்.

இந்த மீண்டும் மீண்டும் என்பதில் உள்ள இன்னொரு சூட்சமம் என்னவென்றால் நன்கு புரிந்து கொண்டு தெளிவாகவும் திடமாகவும் செயல்படுவது. புரிதல் இல்லாமல் வாசித்துக் கொண்டு போவதோ, தெளிவில்லாமல் பயிற்சி செய்து கொண்டு போவதோ ஞாபகச் சக்தியை மேம்படுத்த உதவாது. மாறாக ஒரு மன உளைச்சலையோ அல்லது ஒரு மன இறுக்கத்தையோ உண்டு பண்ணி இருக்கின்ற ஞாபக சக்தியையும் காலி பண்ணி விடும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஞாபகச் சத்தியைப் பெருக்குவதற்கான உணவென்றால் ஆரோக்கியமான உணவே போதுமானது. ஞாபக சக்திக்கான வழிமுறை என்றால் கவனச்சிதறல்களைக் குறைத்து பணிகளை முறைபடுத்திக் கொண்டு வாசிப்பையும் பயிற்சியையும் புரிதலோடு மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்ப்பதுதான்.

ஞாபக சக்திக்காக வேறெந்த பிரமாதமான உணவையோ வழிமுறையையோ தேடி அதன் பின் நீங்கள் ஓட வேண்டிய அவசியமே இல்லை. இய்லபாகவே ஒவ்வொருவருக்கும் போதுமான ஞாபகச் சக்தி இருக்கிறது. அதைக் குறைவுபடாமல் உணவையும் வாழ்க்கையையும் முறைபடுத்திக் கொண்டாலே போதுமானது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...