13 Aug 2023

சில கேள்விகள்!

சில கேள்விகள்!

அவ்வபோது எனக்குள் சில கேள்விகள் எழுவதுண்டு. உங்களுக்கும் இப்படிச் சில கேள்விகள் எழுந்திருக்கலாம். இப்போது கேள்வி என்னவென்றால் ஏன் இப்படிக் கேள்விகள் எழுகின்றன?

அந்தக் கேள்வியோடு இப்போது இந்தக் கேள்விகளை நீங்களே பாருங்களேன்.

*

அனைவருக்கும் கல்வித் திட்டம் இருந்தும் அரசியல்வாதிகள் மட்டும் எப்படிப் படிக்காமல் விடுபடுகிறார்கள்? அப்படி விடுபடுவர்கள்தான் அரசியல்வாதிகள் ஆக முடியுமா?

*

செத்தவர்கள் மீது நமக்கு ஏன் பிரியம் அதிகமாகிறது?. அவர்கள் மீண்டும் உயிரோடு வந்து பிரச்சனை கொடுக்கப் போவதில்லை என்பதாலா?

*

நானே டிவிட்டர் பார்க்குறதைக் குறைக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். எலான் மாஸ்க்கே என்னைப் போன்ற ஆளெல்லாம் 600 டிவிட்டுக்கு மேலப் பார்க்கக் கூடாதுன்னு கன்ட்ரோல் பண்ணிட்டாப்புல. இதன் மூலம் எலான் மாஸ்க் எனக்கு நன்மை செய்கிறாரா? டிவிட்டருக்கு நன்மை செய்கிறாரா?

*

ஏன் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டுகளை அமலாக்கத் துறையில் போடக் கூடாது?

*

காற்று இல்லையென்றால் சூரியன் ரொம்ப சூடேறிக் கிடக்குமோ?

*

ஜிஆர்டிக்கு திரிஷா.

கோல்ட் பிளஸ்க்கு நயன்தாரா.

உள்ளூர் நகைக்கடைகள் இரண்டு பேருக்கும் நகைகள் பூட்டி கடை முன் வைத்து விடுகிறார்கள் என்பது திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் தெரியுமா?

*

எல்லா மாநிலத்து அரிசியும் தமிழ்நாட்டில் விற்பனையாகிறது. தமிழ்நாட்டு அரிசி எந்த மாநிலத்தில் விற்பனை ஆகிறதோ?

*

படிக்கின்ற எல்லா பிள்ளைகளும் மருத்துவர்களாகி விட்டால் அவர்கள் வருங்காலத்தில் யாருக்கு வைத்தியம் பார்ப்பார்கள்?

*

நுழைவுத்தேர்வு எழுதி எழுதித்தான் படித்துக் கொண்டே போக வேண்டும் என்றால் அந்த நுழைவுத்தேர்வு எழுத எதைப் படிக்க வேண்டும்? இதுதான் படிப்பதற்காகப் படிப்பதா?

*

செத்தான்டா சேகரு என்பதுதான் ஒருவர் சாவில் இன்னொருவர் மகிழ்வதா?

*

வாழ்க்கையின் கஷ்டங்களை மறக்கத்தான் சீரியல் பார்க்கிறோம் என்பவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டும் போலிருக்கிறது, சீரியல் பார்ப்பது எனக்கு மட்டும் ஏன் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?

*

இதுவும் கடந்து போகும்

எதுவும் கடந்து போகும்

நான் அப்படியேதான் இருப்பேனா?

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...