குழந்தை வளர்ப்பு முறையின் குறைபாடுகளும் போதாமைகளும்
இந்தக் காலத்துக் குழந்தைகள்
சாப்பிடவே மாட்டேன்கிறதே!
ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்ஸையும்
கூடவா?
குழந்தைகளைப் பரவசப்பட வைத்துத்
தங்களைப் பிடித்தமான பெற்றோர்கள் எனக் காட்ட நினைப்பவர்கள் ஸ்நாக்ஸையும் கூல்ட்ரிங்ஸையும்
அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த அறிமுகம் காலப்போக்கில் பழக்கமாக மாறி விடுகிறது.
பிராண்டுகளாகப் பார்த்து
ஸ்நாக்ஸ்களையும் கூல்ட்ரிங்ஸையும் சாப்பிடுவதும் பருகுவதும் குழந்தைகளின் நிலைக்கே
கௌரவம் மற்றும் அந்தஸ்து சார்ந்த விசயமாக மாறி இருக்கிறது. இந்த விசயம் நிச்சயம் பெற்றோர்களால்
ஊட்டப்பட்ட விசம்தான்.
குழந்தைகள் ஸ்நாக்ஸைக் கொரித்துக்
கூல்ட்ரிங்ஸில் மூழ்குவதால் பெற்றோர்களுக்கும் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கிறதே
என்ற சாப்பாட்டுக் கவலை தீர்ந்து விடுகிறது. அப்படியே பாஸ்ட் புட் உணவுகளையும் அறிமுகம்
செய்து விடும் போது குழந்தைகள் துரித உணவின் அடிமைகளாகி விடுகிறார்கள். குழந்தைகளின்
உணவு வலை ஸ்நாக்ஸ் – கூல் டிரிங்ஸ் – துரித உணவு என்று இப்படியாகி அந்த வலைக்குள் அவர்கள்
வசமாகச் சிக்கிக் கொள்கிறார்கள்.
இப்படி ஒரு உணவு வலையில்
சிக்கும் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் சோம்பலால் மந்த நிலையை
அடைகிறார்கள். இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆட்படுகிறார்கள். வாலிப வயதில் மாரடைப்பு
வந்தும் மரித்துப் போகிறார்கள்.
எதைச் சாப்பிட வேண்டும்,
எப்படிச் சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளுக்கு
உருவாகும் குணாதிசயங்கள் எல்லாம் பெற்றோர்கள் மூலமாகக் குழந்தைகளுக்கு வரும் பழக்கங்கள்தான்.
பெற்றோர்கள் பொறுமையாக எடுத்துச் சொல்லும் போது குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். அதைச்
சொல்வதற்கும் அவர்களது உணவு ஒழுக்கங்களை வகுப்பதற்கும் எதிராகப் பெற்றோர்களின் அதீதச்
செல்லமும், குழந்தை வளர்ப்பை அதீதமாகப் பெருமைபட்டுக் கொள்ளும் வறட்டுக் கௌரவமும் அமைந்து
விடுகின்றன.
குழந்தை வளர்ப்பு ரொம்பவே
மாறி விட்டது. குழந்தைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் அதீதமாகச் செல்லம் கொடுக்கிறோம்
அல்லது அதீதமாகக் கண்டிக்கிறோம். அவர்களிடம் ஆரோக்கியமாகப் பேசுவதையும் விவாதிப்பதையும்
பற்றி யோசிக்காமல் விடுகிறோம். பெரியவர்களே ஆரோக்கியமாகப் பேசவும், விவாதிக்கவும் இயலாமல்
தடுமாறுகிறவர்களாக இருக்கிறார்கள். வேடிக்கையாகப் பேசுவதையும் சுவாரசியம் குன்றாமல்
பேசுவதையும் பேச்சு என்று நினைத்து திரைப்பட நகைச்சுவைகளையும், சிரிப்பாணி பட்டிமன்றங்களையும்
பார்த்துப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அறிவார்த்தமாக ஈர்க்கும்படி பேச முடியும்
என்பதில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எளிமையாகவும் இயல்பாகவும் பேசுவது வலிமையானது
என்பதை ஏற்க முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் தாக்கங்களை அதி சுவாரசியப்படுத்தும்
சம்பவங்களாகப் பிரசவிக்கிறார்கள். இப்பிரசவம் நான்கு வித சம்பவங்களாக வளர்ந்தெழுகின்றன.
1. அழுகின்ற குழந்தைகள் ஆன்ட்ராய்டு
போன்கள் கொடுத்து அமைதிப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக ஆன்ட்ராய்டு போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு
இருக்காது. ஆன்ட்ராய்டு போன்களிலிருந்து இப்படி ஒரு கண்டுபிடிப்பைப் பெற்றோர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பிறகு குழந்தைகள் ஆன்ட்ராய்டு போனே கதியென்று இருப்பதாகப் பெற்றோர்கள் குழந்தைகளைப்
பற்றிக் கவலைப்படுகிறார்கள். அவர்களின் கவலைக்கு மருந்து கண்டுபிடித்து பார்மா உலகம்
கல்லா கட்டுவதை வருங்கால சிந்தனையாளர்கள் குறை சொல்லலாம்.
2. பெற்றோர்களுக்குக் குழந்தைகளை
அமைதிப்படுத்த தெரியவில்லை என்று சொல்வது பொத்தாம் பொதுவாகத் தெரியலாம். அதில் உண்மை
இல்லாமல் இல்லை. தொலைக்காட்சிகள் அவர்களை அமைதிப்படுத்துகின்றன. தொலைக்காட்சியோடும்
அலைவரிசைகளோடும் ரிமோட்டோடும் வாழும் குழந்தைகள் ஏராளம். எந்நேரமும் அவர்களின் கண்கள்
ரியாலிட்டி ஷோக்களிலும், அடிதடி குத்துப் பாடல்களிலும் நிறைந்திருக்கின்றன. வாழ்க்கை
என்பதை வெற்று சாகசங்கள் நிறைந்ததாகக் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றார்கள்.
3. பெற்றோர்களுக்குக் குழந்தைகளை
மகிழ்ச்சிப்படுத்தவும் தெரியவில்லை என்று சொல்வதை மேலும் குறை சொல்வதாக நீங்கள் நினைக்கலாம்.
பெற்றோர்கள் குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்தாத போது வீடியோ கேம்கள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன.
விளையாடி விளையாடி அவர்கள் கட்டிடங்களைத் தகர்க்கிறார்கள். துப்பாக்கிகளால் எல்லாவற்றையும்
சுட்டுத் தள்ளுகிறார்கள். சர்வ அலட்சியமாக வெர்ச்சுவல் ரியாலிட்டியில் கார்களையும்
விமானங்களையும் ஓட்டுகிறார்கள். மோதி உடைக்கிறார்கள். அதனுள் சிக்கித் தூள் தூளாகச்
சிதறிப் போகிறார்கள்.
4. பெற்றோர்களுக்குக் குழந்தைகளோடு
விளையாடவும் தெரியவில்லை என்று மேலும் மேலும் அவர்களின் மீது குறைகளை அடுக்கிக் கொண்டே
போவதா என்று நீங்கள் நினைக்கலாம். குழந்தைகளோடு பெற்றோர்கள் அல்லது சக வயது குழந்தைகள்
விளையாடாத போது மொபைல் ஆப்புகள் குழந்தைகளோடு விளையாடுகின்றன. அவர்களின் விரல்களும்
கண்களும் பரபரக்கும் வேகம் எதார்த்தங்களை மீறியவை. எல்லாவற்றையும் இயல்பை மீறிச் செய்ய
முடியும் என்ற நம்பிக்கையைக் குழந்தைகள் ஆப்புகள் மூலமாகப் பெறுகிறார்கள்.
இத்துடன் இப்போது மேலும்
ஒரு கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் இருக்கிறது. குழந்தைகளைச் சுதந்திரமாக இயங்க
விட வேண்டிய நிலைமைகள் எவையெவை, கட்டுப்பாடாக இருக்க வைக்க வேண்டிய நிலைமைகள் எவையெவை
என்பது குறித்த புரிதல்கள் பெற்றோர்களுக்கு இருக்கின்றதா?
பொது இடங்களில் அதீதமாக அழுது
அடம் பிடிக்கும் தன்மையோடு இருக்கும் குழந்தைகளையும், பார்க்கும் பொருட்களையெல்லாம்
தூக்கி எறிந்து உடைக்கும் குழந்தைகளையும் அண்மைக் காலங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.
அப்படிக் குழந்தைகள் வளர்வதைப் பொறுத்துக் கொண்டு ரசிக்கும் பெற்றோர்களையும் பார்க்க
முடிகிறது. அந்தந்த வயது வந்தால் சரியாகி விடுவார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.
அதையே வெளியில் காரணமாகவும் சொல்கிறார்கள். சரியாகும் குழந்தைகளும் இருக்கின்றன. இவையே
பழக்கமாகித் தங்களை மாற்றிக் கொள்ள முடியாத குழந்தைகளும் இருக்கின்றன.
இது போன்ற இடங்களில் பெற்றோர்கள்
என்னதான் செய்ய வேண்டும்? எது சரி, எது தவறு என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். எதை
தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும், எதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவர்களுக்குப்
புரிய வைக்க வேண்டும். எதை தாங்கள் விரும்புகிறோம், எதை தாங்கள் விரும்பவில்லை என்பதையும்
கறாராகப் பிள்ளைகளிடம் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆம் நிறையவே பேச வேண்டும். வெறுமனே
பேசாமல் அவர்களைக் குடும்ப வேலைகளிலும் ஒருங்கிணைத்துக் கொண்டு அவர்களுக்குச் சிறு
சிறு வேலைகளையும் பொறுப்புகளையும் கொடுத்துக் கொண்டு பேச வேண்டும்.
சமைக்கும் போது பிள்ளைகளைக்
கறி காய்களை எடுத்து வரச் சொல்லலாம். கறி காய்களை நறுக்கச் சொல்லலாம். அப்படி வேலைகளில்
ஒருங்கிணைத்துக் கொண்டே பேச வேண்டும். பூ கட்டும் போது பூக்களைக் கட்டுவதற்கேற்ப குழந்தைகளை
அடுக்கி வைக்கச் சொல்லலாம். அப்படி அடுக்கி வைக்கச் சொல்லிக் கொண்டே பேசலாம். வாகனங்களைத்
துடைக்கும் போது அவர்களையும் வாகனத்தின் ஒரு பகுதியைத் துடைக்கச் சொல்லலாம். அப்படித்
துடைத்துக் கொண்டே பேசலாம்.
இப்படித்தான் என்றில்லாமல்
சூழல்களுக்குத் தகுந்தாற் போல பலவிதமாகப் பேசலாம். வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம்
சார்ந்த பணிகளின் ஒருங்கிணைப்பில் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு பேசுவது இன்னும்
சிறப்பானது. அவர்களோடு சிறு சிறு விளையாட்டுகளை விளையாடிக் கொண்டே பேசுவது நம் மீதான
ஈர்ப்பை அதிகமாக்கம். கதைகளைச்சொல்லிக் கொண்டு பேசுவது அவர்களுடைய கவனிப்பை அதிகமாக்கும்.
சிறு சிறு வேலை ஒருங்கிணைப்போடு பேசுவது எப்போதும் நல்லது. இதனால் வேலையும் ஆகும்,
வேலை செய்வது குறித்த பழக்கமும் உண்டாகும், ஆழ்ந்த புரிதலும் உண்டாகும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
பார்க்கும் போது அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டும். அப்படி அரை மணி நேரமோ அதிகபட்சம்
ஒரு மணி நேரமோ பார்த்து விட்டு அதன் பிறகு உடனடியாகத் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு
தொலைக்காட்சியில் பார்த்தவற்றைப் பற்றிக் கட்டாயம் பேச வேண்டும். ஒரு திரைப்படம் என்றால்
இரண்டரை மணி நேரம் பார்க்க வேண்டியிருக்கும். அதைப் பார்த்து விட்டு அது பற்றி அரை
மணி நேரமாவது பேச வேண்டும். எது நம்மை ஈர்க்கிறது, அது ஏன் நம்மை ஈர்க்கிறது, அந்த
ஈர்ப்பு சரிதானா, இந்த ஈர்ப்புகள் இயல்பானவையா அல்லது கட்டமைக்கப்பட்ட பிம்பங்களால்
நம்மை அறியாமலே நாம் வழிநடத்தப்படுகிறோமா என்பன போன்ற அம்சங்கள் அந்தப் பேச்சில் கட்டாயம்
இடம் பெறும் வண்ணம் நாம் அந்தப் பேச்சைக் கட்டமைப்பது அவசியம். அத்துடன் இயல்பாகத்
தோன்றும்படி அந்தப் பேச்சைக் கட்டமைக்க வேண்டும்.
குழந்தைகள் அவர்களின் இயல்புக்கேற்ப
வளர்கிறார்கள் என்று நாம் சொல்லலாம். அவர்கள் பெரியவர்களின் பேச்சுகளையும் நடத்தைகளையும்
தங்களை அறியாமல் உள்வாங்கியபடிதான் வளர்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
பெரியவர்கள் அந்தப் பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் குழந்தைகளை அணுகினால் குழந்தைகள்
எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களின் வளர்ப்பு நிலைகளில்
நிகழும் குறைபாடுகளையும் போதாமைகளையும் பெருமளவில் களைய முடியும் என்று நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment