11 Aug 2023

நீங்களும் ஒரு தலைவர்தான்!

நீங்களும் ஒரு தலைவர்தான்!

உங்களுக்குத் தலைவர் ஆக விருப்பம் இல்லாமல் இருக்கலாம். அதெல்லாம் ஒரு பதவியா? அதெல்லாம் ஒரு பொறுப்பா? அதெல்லாம் ஒரு மனிதருக்குத் தேவையா? என்று கூட நீங்கள் நினைக்கலாம். ‘தலைவர்’ என்ற சொல் கூட உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருப்பதை நீங்களே நினைத்தாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதரும் ஒரு தலைவராக இருப்பதற்கே படைக்கப்பட்டிருக்கிறார்.

நீங்கள் ஒரு தலைவராக இருப்பது தவிர்க்க முடியாதது. அப்படி ஆவதைத் தடுக்க முடியாது. நீங்கள் மற்றவர்களுக்குத் தலைவராக இருப்பதைத் தவிர்க்கலாம். உங்களுக்கு நீங்களே தலைவராக இருப்பதை நீங்கள் எப்படித் தவிர்க்க முடியும்? நீங்கள் மற்றவர்களுக்குத் தலைவராக ஆவதைத் தடுத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீங்களே தலைவராக இருந்தாக வேண்டியதை உங்களால் தடுத்துக் கொள்ள முடியாது.

உங்களுக்கு நீங்கள் ஒரு தலைவர்தான்.

உங்களுக்கு நீங்களே எப்படி ஒரு தலைவராக முடியும்?

உங்களை நீங்கள் வழிநடத்திக் கொள்ள வேண்டுமே. அதற்கு முடிவுகள் எடுக்க வேண்டுமே. அதற்கான முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டுமே. அப்படி நீங்கள் முடிவுகள் எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தலைவர்தானே.

நானெங்கே முடிவுகள் எடுக்கிறேன்? மற்றவர்கள் முடிவுகளைக் கேட்டே நடக்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் மற்றவர்களின் முடிவுகளைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற முடிவை எடுப்பது நீங்கள்தானே. அதற்கான ஒரு முடிவை நீங்கள் எடுக்காமல் நீங்கள் மற்றவர்களின் முடிவைக் கேட்டு நடக்க முடியாது.

ஒரு சாதாரண செயலாக இருந்தாலும் ஒரு செயலைச் செய்யத் துவங்கும் போது நீங்கள் தலைவராகி விடுகிறீர்கள். இன்னொருவரின் கட்டுபாட்டில் இருந்து நீங்கள் ஒரு காரியத்தைச் செய்தாலும் அந்தக் காரியத்தைச் செய்ய உங்களைக் கட்டுபடுத்தி நீங்கள் இயக்கத்தானே வேண்டும். அப்படி உங்களைக் கட்டுப்படுத்தி ஒரு காரியத்தைச் செய்ய உங்களை நீங்கள் இயக்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் தலைவர்தானே.

அதிகாரிகள், தலைவர்கள் ஆணையிடலாம். அப்படி ஆணையிட்டாலும் அந்த ஆணையை உள்வாங்கி அதை எப்படிச் செய்ய வேண்டுமோ அந்த முறையில் தன்னை வழிநடத்தி செய்தால்தான் தொண்டர்களாலோ ஊழியர்களாலோ ஆணையை நிறைவேற்ற முடியும்.

ஆக ஆணைக்குக் கீழும் ஒரு வழிநடத்தல் என்பது இருக்கிறது. அந்த வழிநடத்தலைத் தனக்குத் தானே செய்து கொள்ளாமல் ஒரு காரியத்தை ஒரு மனிதரால் நிறைவேற்றி விட முடியாது. குதிரையைத் தண்ணீர் துறைக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் குதிரைதானே தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படித்தான் ஒரு எஜமானனின் கீழ் வேலை பார்க்கும் குதிரையும் தனக்குத் தானே எஜமானன் ஆகிறது.

தன்னைத் தானே வழிநடத்திக் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும் தலைவர்தான். அவர் தான் தலைவராக இருக்கிறார் என்பது தெரியாமல் இருக்கிறார். தன்னைத் தானே வழிநடத்திக் கொண்டு மற்றவர்களையும் வழிநடத்துபவர் மற்றவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். இதுதான் வெளிப்படையாகத் தலைவராகத் தெரிபவருக்கும் தனக்குத் தானே தலைவராக இருப்பவருக்கும் உள்ள வேறுபாடாக இருக்கிறது.

தன்னைத் தானே வழிநடத்திக் கொள்ளும் மனிதர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு ஆளுமையைப் பெருக்கிக் கொண்டு மற்றவர்களையும் வழிநடத்த முயன்றால் தனக்குத் தானே தலைவர் என்ற நிலையிலிருந்து மற்றவர்களுக்கும் தலைவர் என்ற பதவி உயர்வினைப் பெறலாம். முயற்சியும் பயிற்சியும் இருந்தால் ஒருவர் அனைவருக்கும் தலைவராகலாம். நீங்கள் உங்களுக்கு மட்டுமே தலைவராக இருந்து கொள்ளப் போகிறீர்களா அல்லது அனைவருக்கும் தலைவராக இருக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...