9 Aug 2023

பணக்காரர் ஆவதற்கான நிச்சய வழிமுறைகள்

பணக்காரர் ஆவதற்கான நிச்சய வழிமுறைகள்

எல்லாரும் பணக்காரர்களாகப் பிறந்து விடுவதில்லை. ஒரு குழந்தை பணக்காரராகப் பிறக்க வேண்டுமானால் பெற்றோர்கள் பணக்காரராக இருக்க வேண்டும்.

ஒரு குழந்தை ஏழையாகப் பிறந்தாலும் பணக்காரராகி தம் குழந்தைகளைப் பணக்காரர்களாகப் பிறக்க வைக்க முடியும். ஆக உங்கள் பெற்றோர்கள் பணக்காரர்களாக இல்லாமல் போனதால் நீங்கள் பணக்காரராக இல்லாமல் போய் விட்டதாக நீங்கள் சுமத்தும் குற்றசாட்டை உங்கள் குழந்தைகள் உங்கள் மீது சுமத்தாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மண்ணிலிருந்து எப்படி இரும்பையும் தங்கத்தையும் பிரித்தெடுக்க நிச்சயமான வழிமுறைகள் இருக்கிறதோ அப்படி மண்ணில் வாழும் மனிதர்கள் பணக்காரராக ஆவதற்கும் நிச்சயமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் எல்லாராலும் பணக்காரராக முடியும். அந்த வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

இளமையிலிருந்தே சேமிக்கத் துவங்குங்கள். காசு, பணம் என்று நீங்கள் அறியத் துவங்கிய காலத்திலிருந்தே அதைச் சேமிக்கத் துவங்குங்கள். உங்கள் சேமிப்பு மிகச் சிறியதாக, பொருட்படுத்த தக்கதாக இல்லாமல் இருக்கலாம். அதுவல்ல பிரச்சனை. எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நீங்கள் சேமிக்க வேண்டும். பிறகு அந்தச் சேமிப்பை நீங்கள் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான முதலீடு என்பது முக்கியம். முதலுக்கே மோசம் விளைவிக்கின்ற பல முதலீடுகளும் இருக்கின்றன. அது போன்ற முதலீடுகள் பக்கம் எப்போதும் தலை வைத்து படுக்கக் கூடாது. அதனால் கோடி கோடியாகப் பணம் கொட்டும் என்றாலும் அவ்வகை நிச்சயமில்லாத முதலீடுகள் வேண்டாம்.

பாதுகாப்பான முதலீடுகளே அதாவது சர்வ நிச்சயமாய் பணம் பெருகும் என்று அறிந்த முதலீடுகளே வேண்டும். உங்களுக்கு அது போன்ற முதலீடுகள் எதுவென்று தெரியாவிட்டால் தங்கத்தையும் வெள்ளியையும் வாங்கிப் போட்டுக் கொண்டு இருங்கள்.

விலை குறைவாக இருக்கிறது என்று தெரிந்தால் நிலத்தை வாங்கிப் போடுங்கள். ஆம் அது விலை குறைவாக இருந்தால் மட்டுமே. அடிமாட்டுக்கு விலை என்றால் செய்யுங்கள். இல்லையென்றால் தங்கமும் வெள்ளியுமே போதுமே. ஒரு போதும் டெபாசிட் செய்கிறேன் என்று முதலீட்டு மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். அதுவும் தேவைதான் என்றாலும் அது மிகச் சிறிய அளவு இருந்தாலே போதுமானது. அதற்கு எந்த அவசரமும் இல்லை.

சேமிப்பு என்றால் சேமித்தோம் முடிந்து விட்டது என்றில்லை. அது இடைவெளி இல்லாதது. விடுமுறை இல்லாதது. நீங்கள் எப்போதும் சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும். சேமித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பாக முதலீடு செய்து கொண்டிருக்க வேண்டும். முதலீட்டிற்கு இடைவெளியும் விடுமுறையும் எப்போதும் இல்லை. நீங்கள் எப்போதும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மிக நீண்ட காலம் சேமித்துக் கொண்டிருங்கள். மிக நீண்ட காலம் பாதுகாப்பாக முதலீடு செய்து கொண்டிருங்கள். உண்மையான செல்வ வளம் அப்போதுதான் உருவாகின்றது.

சம்பாத்தியம் இல்லாத காலங்களில் எப்படிச் சேமிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். எப்போதும் நீங்கள் வாங்கும் பொருட்கள் விலை அதிகமாகவும் கிடைக்கும். விலை மலிவாகவும் கிடைக்கும். விலை மலிவாகப் பொருட்கள் கிடைக்கும் போது வாங்க கற்றுக் கொண்டால் அதுவே மாபெரும் சேமிப்பு. நீங்கள் சம்பாதிக்காமலே சம்பாதிக்கும் சம்பாத்தியம் அது. அது மிகச் சிறிய தொகையாக இருக்கலாம். அதைச் சம்பாதிப்பதற்காக நீங்கள் உழைக்கவில்லை, உங்கள் அறிவை மட்டும் பயன்படுத்தியிருக்கிறீர்கள். நேரத்தைப் பார்த்திருந்து பொறுமையாக இருந்து வாங்கியிருக்கிறீர்கள். அது போல சிறுக சிறுக உங்களிடம் சேரும் மிச்சத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது மிகப்பெரிய தொகையாக இருக்கும்.

பொருட்களை அன்றாடம் வாங்குவதை விட ஒரு வாரத்திற்கு ஒரு மாதத்திற்கு என மொத்தமாக வாங்கும் போது வியாபாரியிடம் பேரம் பேசி விலையை உங்களால் குறைக்க முடியும். அப்படி மிச்சம் ஆகின்ற தொகையும் சேமிப்புதான். இப்படித்தான் சேமிப்பு என்றில்லை தரத்தைக் குறைத்துக் கொள்ளாமல் விலையைக் குறைத்து வாங்கும் அத்தனையும் நீங்கள் சம்பாதிப்பதைப் போன்றதுதான். நீங்கள் சேமிப்பதைப் போன்றதுதான்.

மற்றவர்களின் மிக வேகமான முன்னேற்றத்தையோ வளர்ச்சியையோ பார்த்தோ அவசரம் காட்டாதீர்கள். பணக்காரர் ஆவதற்கான வழிமுறை சேமிப்பும் பாதுகாப்பான முதலீடும் என்பதால் உங்களுக்குத் தெரிந்த சேமிப்பு மற்றும் முதலீட்டு முறையில் உறதியாக இருங்கள். இன்னொருவரின் அசுரத்தனமான வளர்ச்சியைப் பார்த்து அதைக் காப்பி அடிக்கிறேன் என்று பொறுமையை இழந்து எதையாவது செய்துவிடாதீர்கள்.

எவ்வளவு பெரிய அசுரத்தனமான வளர்ச்சிக்கான சூத்திரமாக இருந்தாலும் அதை சிறிய அளவில் பரிசோதனை செய்து பார்த்து அதை சிறு சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிந்த பிறகுததான் அதில் இறங்க வேண்டும். அது குறித்து உங்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

சுருங்கச் சொல்வதென்றால் பணக்காரர் ஆவதற்கான வழிமுறைகளில் இரண்டே இரண்டுதான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று சேமிப்பு. மற்றொன்று முதலீடு. இந்த இரண்டிலும் இருக்கும் சூட்சமம் என்பது இவற்றைத் தொடர்ந்து செய்வதுதான். அடுத்து இந்த இலக்கில் வெற்றி பெற, அதுவும் நிச்சய வெற்றி பெற அடித்தளமாக இருப்பது பொறுமையாக இருப்பதுதான்.

உங்களின் சேமிப்பையும் முதலீட்டையும் பொறுமையாக வளர விடும் மன நிதானம் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். அதிரடி பணக்காரர் ஆவதற்கோ உடனடி செல்வந்தர் ஆவதற்கோ எந்த அவசரமும் காட்டாமல் இருக்க வேண்டும். அதில் அவசரமும் ஆர்வமும் காட்டினால் உங்கள் முதலுக்கான இழப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

எல்லாரும் பணக்காரர் ஆக முடியும். அது ஒரு மரத்தை வளர்ப்பதைப் போன்றது. மரம் வளரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். வளரும் பொழுதில் மரத்தை மிருகங்கள் தின்று விடாமலும் யாரேனும் வெட்டி விடாமலும் பாதுகாப்பதும் முக்கியம் என்பது போல சேமிப்பும் முதலீடும் அநாவசிய செலவுகளில் சிதறி விடாமல் கவனமாக இருப்பதும் முதலிழப்புக்கு ஆளாகும் முதலீடுகளில் சிக்கி விடாமல் பாதுகாப்பதும் முக்கியமாகும். இந்த விடயங்களில் கவனமாக இருந்தால் உங்களிடம் இருக்கும் பணமும் நீங்கள் சேமிக்கும் பணமும் உங்கள் சம்பாத்தியப் பணமும் உங்களைச் சில பத்தாண்டுகளுக்குள் பணக்காரர் ஆக்கி விடும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...