8 Aug 2023

யெஸ்கே சொல்லிச் சென்ற குறிப்புகள்

யெஸ்கே சொல்லிச் சென்ற குறிப்புகள்

எழுத்து என்பது பற்றி யெஸ்கேயிடம் கேட்ட போது இப்படிச் சொன்னார்.

எழுத்து என்பதும் படைப்பு என்பதும் நிகழ்த்த நிகழ்த்த எதிர்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பது. கடந்த கால அவதானிப்புகளோடோ நிகழ்கால எதிர்பார்ப்புகளோடோ அதை கட்டுபடுத்தி வரையறுத்து விட முடியாது. எழுதிக் கொண்டே இருந்தால்தான், படைத்துக் கொண்டே இருந்தால்தான் என்ன புதுமை நிகழ்கிறது என்பதைக் கண்டறிய முடியும். அதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. மேலும் அது குறித்து வேறு எதையும் நிர்மாணிக்க முடியாது. போகின்ற வழியில் என்ன கிடைக்கிறதோ அதுதான்.

*

குறியீடு எழுவது குறித்து யெஸ்கே சொன்னது இது.

ஒரு நல்ல குறியீட்டை எழுத வேண்டும் என்று அவ்வளவு ஆசை.

இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது.

அவனும் காதில் வளையம் போட்டிருக்கிறான்.

அவளும் காதில் வளையம் போட்டிருக்கிறாள்.

அதற்கு மேல் குறிப்பிட்டுச் சொல்ல என்ன இருக்கிறது?

*

கடிதம் எழுதுவது பற்றியும் கேட்டேன் யெஸ்கேயிடம்.

இப்படிச் சொன்னார் அதற்கு.

அவ்வபோது கடிதம் எழுதும் ஆசை வந்து விடுகிறது.

வாட்ஸ்ஆப், டிவிட்டர், பேஸ்புக், இமெயில் காலத்தில் கடிதமா என்றால் ஆம் கடிதம்தான். வாட்ஸ்ஆப்பில் அனுப்பினாலும் அது கடிதம்தானே. இமெயிலில் அனுப்புவது கடிதம் ஆகாதா என்ன? Hi என்று அனுப்பினால் ஈரெழுத்துக் கடிதமாகி விடும் வசதி இங்குதான் இருக்கிறது. இப்படி Hi, Hello, Gud mrng, Gud ni8 என்று ஒரு நாளைக்கு ஏகப்பட்ட கடிதங்களை எழுதித் தள்ளுகிறேன்.

*

நாட்டின் வருங்கால தூண்களான குழந்தைகளைப் பார்த்த போது அவருக்கு இப்படி ஒரு சிந்தனை தோன்றியது. அந்தச் சிந்தனையும் உங்களின் பார்வைக்கு.

நான் பள்ளியில் பயிலும் போது பல பாடங்களில் தேர்வானதில்லை. இப்போது இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது பிள்ளைகள் எல்லா பாடங்களிலும் தேர்வாகி விடுகிறார்கள். வாழ்க்கையில் தேர்வார்களா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.

*

மற்றும் அரசியல், திரை, நடப்பியல், மனவியல் பற்றி கூறிய இன்னபிற கருத்துகளின் குவியல் கீழே இருக்கிறது.

சீன மொழி தெரியவில்லை என்றால் யார் என்ன சொல்லப் போகிறார்கள்?

ஜப்பான் மொழி தெரியவில்லை என்றால் யார் என்ன சொல்லப் போகிறார்கள்?

பிரெஞ்சு மொழியோ, கொரிய மொழியோ தெரியவில்லை என்றாலும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

இந்தி தெரியவில்லை என்றால் கேவலமாகப் பார்க்கிறார்கள்.

ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அசிங்கமாகப் பார்க்கிறார்கள்.

தமிழ் தெரியவில்லை என்பதைச் சந்தோஷமாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

காரணம் பின்னணியில் உள்ள அரசியல்தான்.

அரசியல் நம்மை மொழியைக் கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்துகிறது.

தாய்மொழியை அலட்சியப்படுத்தவும் கட்டாயப்படுத்துகிறது.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சரியான அரசியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை என்றால் இப்படித்தான் ஆகும்.

நானே தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ‘சகா’ என்று அழகாகச் சொல்லிக் கொள்வதை விட்டு விட்டு ‘யெஸ்கே’ என்றுதானே சொல்லிக் கொள்கிறேன்.

*

வசனத்திற்காக ஓடிய திரைப்படங்கள் உண்டு.

பராசக்தி அப்படிப்பட்ட திரைப்படம். கலைஞரின் வசனம் இப்போதும் பேசப்படுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வசனமும் அப்படிப்பட்டதே. இப்போதும் சிலாகித்து பேசப்படும் வசனம்.

அறிஞர் அண்ணாவின் வசனம் எழுதிய திரைப்படங்கள் அவரது வசனங்களுக்காகவே புகழ் பெற்றவை.

இப்போது அப்படியெல்லாம் வசனம் பெரிதாக எழுத வேண்டும் என்ற அவசியமில்லை.

மணிரத்னம் வசனங்களை மிகவும் எளிமைபடுத்தினார்.

சமீப காலத்தில் ஒரு பீப் சத்தம் இருந்தால் போதும் என்கிற அளவுக்கு வசனம் எழுத வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் போய் விட்டது.

*

கோலம் போடுகிற மாதிரி. அதென்ன மாதிரி. கோலம்தான் போட்டுச் செல்கிறார்கள். குளோரின் பவுடரை வைத்துச் சுகாதாரப் பணியாளர்கள் போட்டுச் செல்லும் ஒவ்வொன்றும் கோலம்தான்.

*

இரண்டு பேர் சண்டை போடும் வரை எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் என்னிடம் சண்டைக்கு வரும் வரை.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...