10 Aug 2023

கடன் வாங்காமல் இருப்பதன் ஜென் நிலை!

கடன் வாங்காமல் இருப்பதன் ஜென் நிலை!

‘கடன் கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிற சொல்லாட்சி கம்பராமாயணத்தில் இல்லாமல் இருக்கலாம். நடைமுறை வாழ்க்கையில் இருக்கிறது. சில பலருக்கு கடன் வாங்கிக் கலங்குவதே நடைமுறை வாழ்க்கையாகவும் ஆகி விடுகிறது.

கைமாத்து, சில்லரைக் கடன் என்று வாங்கிக் கொண்டிருந்தோரை இன்றைய தகவல் தொடர்பு யுகம் கூவிக் கூவி அழைத்துக் கடன் வாங்கச் செய்கிறது. கடன் வாங்காத மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

சில பத்தாண்டுகளில் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்துவது கௌரவம் என்ற நிலையும் மாறியிருக்கிறது. கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்த முடியாது என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.

கடன் வாங்குவதால் கடன் சார்ந்த நெருக்கடிகள், சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நாடுகள் கடன் வாங்குகின்றன, மாநிலங்கள் கடன் வாங்குகின்றன, நிறுவனங்கள் கடன் வாங்குகின்றன, பெருமுதலாளிகள் கடன் வாங்குகின்றனர், சாதாரண மனிதர்கள் மட்டும் எப்படி கடன் வாங்காமல் இருக்க முடியும் என்று எதிர்கொள்ளும் கேள்வி சாதாரணமாகி விட்டது.

பெருமுதலாளிகளே வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகின்றனர். திவாலாகி விட்டதாக அறிக்கை கொடுக்கின்றனர். இதில் சாதாரண மனிதர்களின் நிலையை யோசிக்காமல் இருக்க முடியாது.

பெருமுதலாளிகள் கடன் வாங்கினால் கடனைச் செலுத்தாமல் தப்பிப்பதற்கு வழி வகைகள் இருக்கின்றன. ஓடி ஒளிவதற்கு உலகெங்கும் இடங்கள் இருக்கின்றன. சாதாரண மனிதர்களுக்கு அப்படி தப்பிப்பதற்கு வழிகள் ஏதும் இருக்கின்னவா? அல்லது ஓடி ஒளிய இடங்கள் இருக்கின்றனவா?

தப்பிக்கவும் வழியில்லாமல் ஓடி ஒளியவும் இடமில்லாமல் கடன் நெருக்கடியில் தவிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இருக்கின்றனவா?

தலைக்கு மேல் வெள்ளம் போய்க் கொண்டிருப்பதை அறியாமல் அமர்ந்திருப்பவர்களைப் போல கடன் கழுத்தை நெரிப்பது புரியாமல் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் எங்கும் நீக்கமற நிறையத் தொடங்கி விட்டனர்.

கடனைப் பொருத்த வரையில் கட்டுபாடாக இருக்கும் வரையில் கடன் குறித்த பிரக்ஞையுணர்வு இருக்கும். கட்டுபாடின்றிப் போகும் போது கடன் குறித்த பிரக்ஞையுணர்வு இருக்காது. கடன் நெருக்கடியில் நெருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் கடன் வாங்கும் நிலையில் விழுந்து விடக் கூடிய அபாய நிலையும் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க கடன் நெருக்கடியில் இருப்பது குறித்து முன்கூட்டியே அறிந்து அது குறித்து விழிப்புணர்வோடு இருப்பது ஒன்றே மென்மேலும் அதில் மூழ்கி விடாமல் காத்துக் கொள்வதற்கான சாத்தியமாகக் கூடிய வழிகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் கடன் நெருக்கடி குறித்த அறிகுறிகள் சிலவற்றை அறிந்து கொள்வது கடனில் மூழ்கி விடாமல் தவிர்ப்பதற்கு உதவும்.

இனிவரும் பத்திகளில் நீங்கள் / உங்கள் என நான் குறிப்பிடுவது நிச்சயமாக உங்களை அல்ல. முன்னிலைப்படுத்திக் குறிப்பிடுவதும் நிச்சயமாக வாசிக்கும் உங்களை அல்ல. புரிதலுக்காக அச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

முதல் அறிகுறி கடனைக் கட்ட முடியாமல் அந்தக் கடனை அடைப்பதற்குப் புதிய கடனை வாங்குகிறீர்களா என்று பாருங்கள். அப்படியென்றால் கூடிய விரைவில் நீங்கள் கடன் நெருக்கடியில் சிக்கலாம். உஷாராக வேண்டிய தொடக்க கட்டம் இது.

உங்களுக்கு வருகின்ற வருமானத்திலிருந்து உங்கள் கடனை அடைக்க முடியாமல் போகும் போது நீங்கள் புதிது புதிதாகக் கடனை வாங்கி இருக்கின்ற கடனை அடைக்க முயல்வீர்கள். நிலைமை அப்படியானால் கடனை வாங்கிக் கடனை அடைக்க முயலாமல், கையில் இருக்கின்ற தங்கம் அல்லது சொத்துகளை விற்று கடனை அடைக்க முயல்வதுதான் நல்லது.

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் போது அங்கிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது, இங்கிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது, ஒரு வாரத்தில் பணம் வந்து விடும், அடுத்த மாதம் பணம் வந்து விடும் என்று பொய் சொல்ல ஆரம்பிக்கிறீர்களா? அப்படியென்றாலும் நீங்கள் கடன் நெருக்கடிக்குக் கூடிய விரைவில் ஆளாகப் போகிறீர்கள் என்றுதான் அர்த்தம். நிலைமை அப்படியென்றால் பொய்களை அனுமதிக்காமல் கடனை அடைத்து விட்டு வெளியே வந்து விடுங்கள். ஒரு பொய் மேலும் பல பொய்களை அழைத்து வந்து கொண்டே இருக்குமே தவிர உங்கள் கடன் பிரச்சனையை உண்மையாகத் தீர்க்க முயலாது.

மின்சாரக் கட்டணம், கல்விக் கட்டணம், தவணைத் தொகைக் கட்டணம், வரிக் கட்டணம் என்று கட்டாயம் கட்ட வேண்டிய கட்டணங்கள் இருக்கின்றன. இவற்றைக் கூட கட்ட முடியாத நெருக்கடியில் இருந்தால் நீங்கள் கடன் நெருக்கடியில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். நிலைமை அப்படியென்றால் கடனிலிருந்து உடனடியாக நீங்கள் வெளியேற வேண்டிய நிலையை அடைந்து விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். அப்போது நிலைமை எவ்வளவு கஷ்ட தசையில் இருந்தாலும் கடனை அடைத்து விட்டு வெளியே வாருங்கள்.

இன்றைய உலகில் அலைபேசியை ஒருவர் தவிர்க்க முடியாது. அதை அணைத்து வைக்கவும் முடியாது. உங்களுக்குக் கடன் கொடுத்தவரிடமிருந்து வரும் அழைப்புகளுக்காக அலைபேசியை நீங்கள் தவிர்த்தாலோ அல்லது அணைத்து வைக்க ஆரம்பித்தாலோ நீங்கள் கடன் நெருக்கடியில் சிக்கி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். இந்த நிலைமையும் நீங்கள் கடனிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டிய நிலைதான்.

மேற்படி குறிப்பிட்ட அனைத்தையும் கடன் நெருக்கடிக்கான வெளிப்புற அறிகுறிகளாகச் சொல்லலாம். உட்புற அறிகுறிகளும் இருக்கின்றன.

கடனை நினைத்துத் தூக்கம் வராமல் தவித்தாலோ, கடன் நினைப்பிலேயே உங்கள் கவனம் தடுமாறினாலோ, கடனை நினைத்து அந்த நினைப்பிலிருந்து தப்பிக்க போதை வஸ்துகளை நாடினாலோ கடன் நெருக்கடி அறிகுறிகளுக்குள் நீங்கள் வந்து விட்டதைப் புரிந்து கொள்ளலாம். நிலைமை அப்படியானால் கடனைத் தீர்ப்பதை உடனடி நடவடிக்கையாக எடுங்கள். எல்லாவற்றையும் விட உங்களின் மன அமைதியும் மன நிம்மதியும் முக்கியம் என்பதால் இதை நீங்கள் செய்வதுதான் நல்லது.

கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு சில நிச்சயமான வழிமுறைகளும் இருக்கின்றன. அவற்றைப் படிப்படியாகச் செயல்படுத்த முடியுமா என்று பாருங்கள். செயல்படுத்துவதற்கான மற்றும் பழக்கமாக்குவதற்கான முயற்சிகளையும் எடுங்கள்.

முதலில் அநாவசியச் செலவுகளைக் கண்டறியுங்கள். அந்தச் செலவுகளை அடியோடு வெட்டித் தூர எறியுங்கள்.

ஆடம்பரச் செலவுகள் என்னவென்பதை ஆராயுங்கள். அவற்றை வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டுங்கள். காஸ்ட்லி சாமான்களுக்கு எல்லாம் கல்தா கொடுங்கள்.

கூடுதல் செலவினங்களையும் கண்டறியுங்கள். அவற்றையும் தாட்சண்யமன்றி நீக்குங்கள். குறிப்பாக அநாவசிய செலவுகளில் இழுத்து விடும் நட்புகளுக்கு டாட்டா காட்டுங்கள்.

கடன் அட்டைகள் இருக்கிறதென்றால் உடனடியாக அப்படி அட்டைகள் இல்லாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவசர கதியில் எடுங்கள்.

கூத்து, கும்மாளம், பார்ட்டி, பர்சேஸ், செலிபிரேஷன், அவுட்டிங் எல்லாவற்றையும் அழித்து ஒழியுங்கள்.

சிக்கனமாக இருப்பது சிரமம்தான். பழகி விட்டால் எளிமைதான்.

வரவு – செலவுத் திட்டத்தைக் கட்டமையுங்கள். திட்டமிட்டுதான் செலவு செய்வேன் என்பதில் உறுதியாக இருங்கள். அதைப் பார்த்து நான்கு பேர் கஞ்சன் என்று சொல்கிறார்களே என்று கவலைப்படாதீர்கள். கடன்காரன் என்று சொல்வதை விட அது ஒன்றும் மோசமான பட்டம் இல்லை.

கடன் வாங்குவதற்குக் காரணம் வருமானக் குறைவுதான். ஆகவே வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் என்று யோசியுங்கள். வருமானத்தைத் தரும் முதலீடு, வருமானத்தைத் தரும் பகுதி நேர வேலை, வருமானத்தைத் தரும் ஆக்கப்பூர்வமான வேலைகள் என்று யோசித்துக் கடன் வராத அளவுக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

கடன் வாங்குவதற்கு மற்றொரு காரணம் வருமானக் குறைவு மட்டுமல்ல, வருமானத்திற்குள் செலவைக் கட்டுப்படுத்தாமையும்தான். ஆகவே செலவு கட்டுபாடு குடும்ப கட்டுபாடைப் போன்று முக்கியமானது. இந்த இரண்டு காரணங்களையும் இரண்டு கண்களால் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மற்றும் கூடுதலாகச் சில விசயங்கள் என்றால்,

மாதந்தோறும் சேமிப்பதையும் முதலீடு செய்வதையும் கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்கி விட்டு மாதாந்திர தவணைத் தொகை செலுத்துவது எவ்வளவு கட்டாயமோ அந்த அளவுக்குச் சேமிப்பும் முதலீடும் மாதந்தோறும் கட்டாயம் என்கிற அளவுக்கு கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடன் வாங்காத வறியவர்கள்தான் உண்மையில் செல்வந்தர்கள் என்று ஔவையார் சொல்வதில் அனுபவப்பூர்வமான ஆயுட்காலத்துக்கும் பொருத்தமான உண்மை ஒளிந்திருக்கிறது. அந்த உண்மையை உணர்ந்து விட்டால் உங்களால் ஒருபோதும் கடன் வாங்க முடியாது. அதை உணர்வதுதான் கடன் வாங்காமல் வாழ்வதில் இருக்கும் ஜென் நிலை.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...