7 Aug 2023

புலம்பல்வாதிகள் எப்படி உருவாகின்றனர்?

புலம்பல்வாதிகள் எப்படி உருவாகின்றனர்?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து கொண்டே இருக்கும் சம்பவங்களில் எதை மாற்ற முடியும்?

அப்படி என்ன நடந்து கொண்டிருக்கிறது?

திருமணம்,

குழந்தை பிறப்பு,

குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல்,

கல்விக் கட்டணங்களைச் செலுத்துதல்,

வீடு கட்டுதல்,

பண்டிகைச் செலவுகள்,

குடும்ப விழாக்கள்,

வருமான வரியைக் கட்டுதல்,

எதிர்பாரத செலவினங்களை எதிர்கொள்ளுதல்,

மருத்துவ செலவினைகளைச் செய்தல் … … …

என்று நீங்கள் யோசித்துக் கொண்டே போனால் எதை மாற்ற முடியும்? எதை நடக்க வேண்டாம் என நிறுத்தி வைக்க முடியும்?

மனிதர்கள் ஒவ்வொருக்கும் நடக்கக் கூடியவைதான் இவை அனைத்தும். இவை ஏதோ திடீரென்று நடந்து விடுவது போலவும் தங்களுக்கே தெரியாமல் நடந்து விடுவது போலவும் மனிதர்கள் நினைத்து விடுகிறார்கள். அல்லது அவை நடக்கும் போது பார்த்துக் கொள்வோம், அதற்குப் பிறகு நடப்பதை நடப்பதன் போக்கில் எதிர்கொள்வோம் என்று நினைத்து விடுகிறார்கள்.

எப்படி நினைத்தாலும் ஒவ்வொரு மனிதரும் மேற்படி பட்டியலில் உள்ள எல்லாவற்றையுமோ இன்னும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சம்பவங்கள் சில பலவற்றை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய இவற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டுக் கொண்டு எதிர்கொள்பவர்கள் அறிவாளிகள். இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தா நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் வாழ்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டு போகிற போக்கில் போகிறவர்கள் அலட்சியவாதிகள். இந்த அலட்சியவாதிகளே காலப்போக்கில் புலம்பல்வாதிகளாகவும் மாறி விடுகின்றனர்.

உதாரணத்திற்குத் திருமணத்தை எடுத்துக் கொள்வோம். அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். எளிமையாக, ஆடம்பரமாக, நடுத்தரமாக என்று. இது குறித்த பார்வை உங்களுக்கு இல்லையென்றால் மற்றவர்கள் எப்படி நடத்தி வைக்கிறார்களோ அப்படித்தான் உங்கள் திருமணத்தை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். அது சிக்கனமாகவும் இருக்கலாம் அல்லது உங்களைக் கடன்பட்டவராக மாற்றவும் செய்யலாம். இதை நீங்கள் நிச்சயம் எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்பதால் இது குறித்து முன்கூட்டியே நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம். திருமணத்திற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நிச்சயம் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

திருமணம் குறித்த உங்கள் பார்வை, உங்களது பொருளாதார நிலை ஆகியவற்றைக் கொண்டு உங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். இப்படி முடிவு செய்வதன் மூலம் திருமணம் உங்கள் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடியை உண்டாக்குவதை உங்களால் தணித்துக் கொள்ள முடியும்.

திருமணம், பிள்ளைகளின் படிப்பு, வீடு வாங்குதல் போன்றவற்றில் பெரும்பாலானோர் தங்களது பொருளாதார வலிமையைக் குறித்த கவனமோ அக்கறையோ இல்லாமல் இருந்து விடுகிறார்கள். பிறகு அப்படி ஒரு சம்பவத்துக்கான நெருக்கடி வரும் போது அதன் போக்கில் முடிவெடுத்து, பின்னர் நேரிடும் பொருளாதார நெருக்கடியை எண்ணி எண்ணிப் புலம்பத் தொடங்கி விடுகிறார்கள்.

சாலையில் பயணிக்கும் போது வேகத்தடை வருகிறது என்ற அறிவிப்பைப் பார்த்து வேகத்தைத் தணித்துக் கொள்வதைப் போல வாழ்க்கைச் சாலையில் அந்தந்த வயதுகளில் நேரவிருக்கின்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றபடி திட்டமிட்டுக் கொண்டால் புலம்பல்வாதிகளாக ஆவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலமாகவும் திட்டமிட்டுக் கொள்வதாலும் தீர்க்கமான ஒரு பார்வையைப் பெறலாம். இதனால் ஒரு நிகழ்வு குறித்து மற்றவர்கள் குழப்பும் போது குழம்பி விடாமல் இருக்கவும் முடியும். அந்த நிகழ்வை உங்களின் சக்திக்கு உட்பட்ட உங்களின் கட்டுபாடான வழியில் கொண்டு சென்று பிசகின்றித் தன்னம்பிக்கையுடன் நிகழ்த்தவும் முடியும்.

உறுதியாகச் சொல்வதென்றால் மனிதர்கள் எதிர்கொள்ளாத அடிப்படையான வாழ்க்கை நிகழ்வுகள் எதையும் புதிதாக இனிவரும் மனிதர்கள் எதிர்கொள்ளப் போவதில்லை. ஆகவே அவற்றைக் குறித்த அறிதலோடும் புரிதலோடும் அவற்றை முன்கூட்டியே எதிர்கொள்ள திட்டமிட்டுக் கொண்டால் வாழ்க்கையின் நெருக்கடிகளையும் நெருக்கடிகளால் நேரிடும் புலம்பல்களையும் தவிர்க்க இயலும்.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...