6 Aug 2023

இலக்குகள் தவறும் காலங்கள்

இலக்குகள் தவறும் காலங்கள்

எப்போது இலக்குகள் தவறுகின்றன?

சரியான பார்வையும் சரியான கோணமும் இல்லாத போது இலக்குகள் தவறுகின்றன.

ஏன் இலக்குகள் தவறுகின்றன?

சரியான இலக்கை அடிப்பதற்கான அனுபவங்கள் இன்னும் தேவைப்படுகின்றன. குறிப்பாக மன ஓர்மை. சிதறிக் கொண்டிருக்கும் மனதை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. மனமே இலக்காக, இலக்கே மனமாக மாறும் போது இலக்கை அடைவது சுவாரசியமான அனுபவமாக ஆகி விடுகிறது. அப்போது அதன் சாகசத்திற்காகவே நீங்கள் மேலும் அதிக இலக்குகளை விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள்.

இலக்குகள் தவறும் போது என்ன செய்ய வேண்டும்?

ஓர் இலக்கை அடைவதற்கு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு அவசியம். இலக்கை நோக்கிய பயணத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற திட்டம் இருக்க வேண்டும். தடைகளை எதிர்கொள்ளும் சாமர்த்தியம், குறுக்கீடுகளை சமாளிக்கும் சமயோசிதம் இவையும் அவசியம்.

இலக்குகள் தவறும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

அல்லது எப்படி அதை எடுத்துக் கொள்ள வேண்டும்?

ஒரு விளையாட்டில் ஆயிரம் முறை தோற்கலாம். குழந்தைகள் சந்தோசமாக விளையாடுகிறார்கள். விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பயணங்களில் ஆயிரம் தடைகள் நேரிடுகின்றன.

விபத்துகள் நடக்கின்றன. மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். பயணங்கள் நிற்பதில்லை. பயணங்களில் மக்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள். இலக்குகளும் அப்படித்தான் பார்க்கப் பட வேண்டும். இலக்குகள் தவறிக் கொண்டேதான் இருக்கும்.

இலக்குகளைத் தீர்மானித்துக் கொண்டு அம்புகளைச் செலுத்துவதில் ஒரு வில்லாளி குறை வைத்து விடக் கூடாது. ஆயிரம் முறை தவறும் போது ஓர் இலக்கை எப்படிச் சரியாகக் குறி வைப்பது என்பதை ஒரு வில்லாளி கற்றுக் கொள்கிறான்.

தவறும் இலக்குகள் சொல்லும் பாடம் என்ன?

தவறிய இலக்குகளிலிருந்து தவறாகாத இலக்குகள் கண்டடையப்படுகின்றன. ஒவ்வொரு முறை தவறும் போது சரியான இலக்கை நோக்கிய பயணத்திற்கான தூரம் குறைகிறது. தோற்கின்ற விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் வெறி கூடுகிறது. இதற்கு மாறாகவும் நிகழலாம். அப்படி நிகழ்ந்தால் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. முன்னோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கும் அம்பு பின்னோக்கித் திரும்பி வந்து விடலாகாது.

இலக்குகளும் நினைப்புகளும் ஒன்றையொன்று பாதிக்கின்றனவா?

இலக்கிற்கான வடிவத்தைக் கொடுப்பது நினைப்பு. ஏதோ ஓர் இலக்கிற்கான தூண்டல் நினைப்பின் வழியே செயல்படுகிறது. கூர்மையான மற்றும் உறுதியான நினைப்பு இலக்கின் வடிவமாகிறது. சில நேரங்களில் இலக்கை அடைய வேண்டுமே என்ற அதீத நினைப்பே கூட இலக்கை அடைய முடியாமல் போவதற்குக் காரணமாக இருக்கலாம், இலக்குக் குறித்த மன உளைச்சலை உருவாக்கி விடலாம். நினைப்பு குறித்த மேலாண்மையும் இலக்கை அடைவதற்குத் தேவைப்படுகிறது.

நீங்கள் நினைப்பது நடக்காமல் போவதற்குக் காரணம்

நான் நினைப்பது மட்டும் நடக்காமல் போவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கலாம். நினைப்பது நடக்கும் என்பதுதான் பிரபஞ்ச விதி. விதைப்பது விளையும் என்பது போல நினைப்பதும் நடக்கும். ஆனால் விதைக்காமல் விளையாது.

வயலில் எதையும் விதைக்காத ஒருவர் அறுவடை நேரத்தில் என் வயலில் மட்டும் எதுவுமே விளையவில்லை என்று அரற்றிக் கொண்டிருக்க முடியாது.

விதைக்கின்ற விதை பழுதில்லாத விதையாக இருக்க வேண்டும். நினைக்கின்ற நினைப்பும் அப்படி பழுதில்லாததாக இருக்க வேண்டும். முழுமையாக இருக்க வேண்டும்.

நீங்கள் நினைக்கின்ற ஒன்றை நிறைவேற்ற பல விதைகளை விதைக்க வேண்டியிருக்கும். ஒரு நினைப்பு செயலாக வடிவம் பெற அப்படி பல வித்துகள் தேவைப்படுகின்றன.

அதிகாலையில் எழுவது ஒரு விதை. சரியான நேரத்தில் உங்கள் கடமைகளைத் துவங்குவது ஒரு விதை. செவ்வனே செய்து முடிப்பது ஒரு விதை. இப்படி விதைகளை நீங்கள் விதைத்துக் கொண்டே போனால் நீங்கள் நினைப்பது கட்டாயம் நிறைவேறும்.

இலக்கிற்கான நினைப்பு எப்படி இருக்க வேண்டும்?

உங்களுக்காக நீங்களே விதைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்காக இன்னொருவர் அதிகாலையில் எழ முடியாது. உங்களுக்காக இன்னொருவர் காலைக்கடன்களை முடிக்க முடியாது. உங்களுக்காக இன்னொருவர் குளிக்க முடியாது. உங்களுக்காக இன்னொருவர் உணவுண்ண, நீரருந்த முடியாது. உங்களுக்காக இன்னொருவர் உடுத்திக் கொள்ள, உறங்க முடியாது. உங்களுக்காகச் செய்ய வேண்டியதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.

உங்களுக்காக விதைக்க வேண்டியதை நீங்கள்தான் விதைக்க வேண்டும். உங்களுக்கான நினைப்பு நீங்கள் உருவாக்கியதாக இருக்க வேண்டும். இன்னொருவர் உருவாக்கித் தந்ததாக இருக்கக் கூடாது.

நினைத்தபடி இலக்கை அடைவது சாத்தியந்தானா?

இந்த உலகில் சாத்தியம் ஆகாது எது? எதுவும் சாத்தியமே. எல்லாம் சாத்தியமே. வழிகள் கடினமாக இருப்பதால் இலக்கை அடைய முடியாது என்பதில்லை. அல்லது கடினம் நினைத்துக் கொள்வதால் இலக்குகள் என்பவை அடைய முடியாததில்லை.

ஒரு நினைப்பு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இலக்கை அடைய முடியும் என்று நினைக்கலாம். அல்லது அடைய முடியாது என்று நினைக்கலாம். அது கடந்த கால அனுபவத்தின் தொடர்ச்சி. எதிர்மறையாக நிகழ்ந்து விட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பு. அல்லது ஆழ்மன அச்சம் அல்லது சந்தேகத்தின் பிரதிவினை.

சாத்தியமில்லை என்பதை நம்ப வேண்டியதில்லை. அப்படி ஒரு நினைப்பு எழும் போதெல்லாம் அதை நீங்கள் ஏற்கவும் வேண்டியதில்லை, மறுதலிக்கவும் வேண்டியதில்லை. நீங்கள் செயல்படத் தொடங்குங்கள். காரியத்தில் ஈடுபடுங்கள். நினைப்பை மாற்ற தேவையான ஒரு நிரூபணத்திற்காக வினையாற்றத் தொடங்குங்கள். உங்கள் நினைப்பானது தானாக மாறிவிடும்.

நினைப்பை மாற்றத் தேவையானது ஒரு நிரூபணம்தானே தவிர மனதோடு போராடிக் கொண்டிருப்பதல்ல. நீங்கள் அப்போது ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கலாம். ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். ஓர் இனிய இசையைக் கேட்கத் துவங்கலாம். நீங்கள் ஈடுபடத் தொடங்கி விடலாம்.

நினைப்புகள் வானத்து மேகங்களைப் போல. எப்படி வேண்டுமானாலும் அதன் வடிவங்கள் மாறிக் கொண்டே இருக்கலாம். நீங்கள் மாற்றாமலே அவை மாறும். உங்கள் இலக்கை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உங்கள் இலக்குக் குறித்த எதிரான நினைப்புகள் இருந்தாலும் உங்கள் இலக்கைக் குறித்து நினைத்துக் கொள்ளுங்கள்.

நினைக்க நினைக்க புதிய வழிகள் தென்படத் துவங்கும். அந்த வழிகளில் நீங்கள் பயணிக்கலாம். வழிகளில் புதிய இசை கேட்கக் கூடும். புதிய புத்தகத்தின் பக்கங்கள் திறக்கப்படக் கூடும். நீங்கள் உங்களை அறியாமல் புதுமையாகச் செயல்படக் கூடும். நீங்கள் தரிசிக்க வேண்டுமானால் எதற்காகவும் எதையும் நிறுத்த முயலாதீர்கள். தொடர்ந்து சென்று கொண்டிருங்கள்.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...