5 Aug 2023

ஓடாத ஆறு!

ஓடாத ஆறு!

இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் வந்ததே தெரியவில்லை.

வெண்ணாறு கிணறு போலாகி விட்டது. அவ்வளவு ஆழம். சிறுபிராயத்தில் பார்த்த ஆறு இதில் பாதி ஆழம்தான் இருக்கும். அப்போது ஆறு நிறைந்த மணல். மணல் மாயமாகிக் கட்டடங்களாக ரூபமெடுத்து நிற்கிறது.

அப்போது ஆற்றை அடைத்து மண்டியிருந்த காட்டாமணக்குச் செடிகளை இப்போது காணவில்லை. இப்போது ஆறு முழுவதும் வெங்காயத்தாமரை மண்டிக் கிடக்கின்றது.

எப்படியோ மாதத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ பெய்து விடும் மழையில் பள்ளமான ஆற்றில் தண்ணீர் கிடக்கிறது. அந்தத் தண்ணீர் தெரியாதவாறு வெங்காயத் தாமரை ஆற்றை அடைத்துக் கிடக்கின்றது. இந்த வெங்காயத் தாமரையால்தான் ஆற்றுத் தண்ணீர் ஆவியாகி விடாமல் அப்படியே கிடக்கிறதோ என்னவோ. முன்னர் ஒரு தமிழக அமைச்சர் அணைக்கட்டில் கிடக்கும் நீர் ஆவியாகி விடாமல் இருப்பதற்குத் தெர்மகோலை நீர்ப்பரப்பின் மேல் பரப்ப நினைத்தாராம். தெர்மகோல்கள் பறந்தோடி விட்டனவாம். அவருக்கு இந்த வெங்காயத்தாமரை யோசனை வந்திருந்தால் அணைக்கட்டுகள் எல்லாம் வெங்காயத்தாமரைகளாக மண்டியிருக்கும்.

இதே ஆறு மணலாகக் கிடந்தால் தண்ணீர் இல்லாமல் மணலில் ஊற்று தோன்றப்பட்ட ஆற்றைப் பார்க்க முடியும். ஆற்று மணலில் இரவு நேரத்தில் சிறுவர்கள் விளையாடுவதையும் பெரியவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடியும். அந்தக் கதைகள் எல்லாம் பழங்கதைகளாகி விட்டன.

ஆற்றுப் பக்கம் யாரும் போவதில்லை. பாலத்தின் வழியாக ஆற்றைக் கடக்கும் போதும் ஆற்றைப் பார்ப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள், ஆற்றைப் பற்றி நினைப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரவர் வாழ்க்கையும் ஆற்று நீர் போல ஓடிக் கொண்டிருப்பதில் அவரவர் வாழ்க்கையைப் பார்க்கவே பலருக்கும் நேரம் இருப்பதில்லை. ஒருவேளை திடீரெனப் பாலம் உடைந்து போனால் ஆற்றைப் பற்றி மக்கள் நினைக்கக் கூடும். இருக்கின்ற எதைப் பற்றியும் நினைக்கும் பிரக்ஞையை இழந்து எவ்வளவோ நாளாகி விட்டது.

இந்த ஆண்டு திறந்து விடப் பட்ட தண்ணீர் போதவில்லையோ என்னவோ ஆற்றில் தண்ணீர் வந்ததே தெரியவில்லை. தென்மட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. தென்மட்ட வாய்க்கால் பகுதி அவ்வளவு பள்ளம் என்பார்கள். ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் ஏறினாலும் வெள்ளம் போலப் பாயும். பள்ளம் என்று சொன்னாலும் வெள்ளம் வந்தாலும் அவ்வளவு வேகமாக வடியும்.

தென்மட்ட வாய்க்கால் பாசனப் பகுதியில் வயல்கள் இருந்தால் அதிர்ஷ்டம்தான். முதலில் தண்ணீர் பாய்வதும், வெள்ளமானால் வேகமாக வடிவதும் வயலுக்கான அதிர்ஷ்டங்கள்தானே!

ஆற்றில் தண்ணீர் வராமல் தென்மட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடாதே என்று ஆற்றுப்பக்கம் வந்து உற்றுக் கவனித்த போது ஆற்று நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்திருந்தது. அதை அப்படியும் சொல்ல முடியாது. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல வெங்காயத்தாமரைகள் சற்று உயர்ந்திருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே மழைநீர் நிரம்பியிருந்த ஆறானது திறந்து விடப்பட்ட நீரால் சற்று உயர்ந்திருந்தது.

வெங்காயத் தாமரைகளால் நிறைந்திருந்த ஆற்றைப் பார்த்துப் பார்த்து அது உயர்ந்திருக்கிறதா, தாழ்ந்திருக்கிறதா என்பதை வைத்துதான் ஆற்றில் நீரோட்டம் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கணிக்க வேண்டும் போலிருக்கிறது. அரிச்சந்திரபுரத்தில் தொடங்கி லெட்சுமாங்குடி வரை ஆற்றைப் பார்த்துக் கொண்டே போனேன். ஆயிரம், லட்சம், கோடி தாமரைகாளல் நிறைந்தது போல ஆறே வெங்காயத்தாமரையாகி விட்டது.

நண்பர் ஒருவருடன் வெண்ணாற்றுப் பாலத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்த போது சொன்னார், வெங்காயத்தாமரைகளைப் பார்த்து விட்டு இப்படி ஆற்றை வைத்திருக்கிறீர்களே என்று. ஆற்றை அடைத்துக் கொண்டிருக்கும் வெங்காயத் தாமரைகள் அவர் மனதை ஏதோ செய்திருக்க வேண்டும். ஆற்றோராமாய் வீடு கட்டிக் கொண்டு இருப்பவர்கள் அவரவர் வீட்டிற்கு எதிரே உள்ள அளவுக்கு ஆற்றைச் சுத்தம் செய்தால் கூட  போதும் ஆற்றில் நீரோட்டத்தைப் பார்க்க முடியுமே என்றார். அவரவர் வீட்டிற்கு எதிரே உள்ள வாசலைச் சுத்தம் செய்வது போல இது சாத்தியமாகக் கூடிய யோசனைதான். மக்கள் சுத்தம் செய்ய வேண்டுமே!

இந்த வெங்காயத் தாமரைகள் இல்லாவிட்டால் கொசுக்கடியும் குறைந்து விடும். மக்கள் கொசுக்கடியைக் கூட தாங்கிக் கொள்வார்கள். வெங்காயத் தாமரைகளைச் சுத்தம் செய்வதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். யோசித்தாலும் ஏன் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். நம் மக்களுக்குப் பொதுவான காரியங்களை யாரோ வந்துதான் செய்ய வேண்டும் என்று நினைப்பு இருக்கிறது. அது அரசாங்கமாகவோ, சேவை அமைப்புகளாவோ இருக்கலாம். நிச்சயமாக அது பொதுமக்களாகிய தாம் இல்லை என்பதில் அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்.

நூறு நாள் வேலை என்று மக்கள் வாய்க்காலில் பள்ளம் பறித்து வைக்கிறார்கள். அவர்கள் இது போன்ற நீர் நிலைகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடலாம். ஆறு தூய்மையாக இருப்பது நாகரிக சமூகத்திற்கான நல்ல அடையாளம். தூய்மையாக இல்லையென்றால் தூய்மை செய்ய வேண்டியது அவர்களின் முதல் கடமை.

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டே நான் ஆற்றை உற்றுப் பார்த்தேன். நானும் இப்படிப் பேசிக் கொண்டுதானே இருக்கிறேன். என் பங்கிற்கு ஆற்றில் இறங்கி கொஞ்சம் வெங்காயத் தாமரைகளை அகற்றிப் போடலாம். இப்படி ஒரு பெருங்கூட்டமாகத் திரண்டு ஆளுக்குக் கொஞ்சம் வெங்காயத் தாமரைகளை அகற்றிப் போட்டால் வெண்ணாற்றில் நீரோடுவதைப் பார்க்க முடியும்.

மக்கள் வந்து தூய்மை செய்யா விட்டாலும் வெண்ணாறு அது பற்றிக் கவலை கொள்ளாது. இயற்கை பேரிடர் தரும் ஒரு வெள்ளத்தைக் கொண்டு வந்து அது தன்னைத் தானே தூய்மை செய்து கொள்ளும். அப்போது ஆற்றோடு அரசியல் செய்யும் மனிதர்களும் சேர்ந்து கொண்டு ஒரு சில இடங்களில் வெள்ளத்தை வடிய விடுவதற்கு இயந்திரங்களைக் கொண்டு வந்து வெங்காயத்தாமரைகளை அள்ளிப் போட்டு விட்டு ஆறு முழுவதும் வெங்காயத்தாமரைகளை அள்ளிப் போட்டு விட்டதாக அளந்து விடுவார்கள். இப்படி ஆறு அதுவாகத் தூய்மையானால் உண்டு. அது தன்னைத் தானே தூய்மை செய்து முடித்ததும் சில மாதங்களில் ‘நீயா? நானா?’ எனப் போட்டியிட்டுக் கொண்டு மீண்டும் வெங்காயத்தாமரை மண்டி விடும்.

இப்போது வரைக்கும் ஆறு முழுவதும் வெங்காயத் தாமரைகள்தான். சொட்டை விழுந்த தலையைப் போல ஆங்காங்கே வெங்காயத் தாமரை வட்டமாக விலகி தண்ணீர் தெரிந்தது. கரும்பழுப்பான தண்ணீர். புதிதாக வரும் தண்ணீர் இப்படி இருக்காது. செம்பழுப்பும் மஞ்சளும் கலந்த வண்டல் நிறத்தில் இருக்கும்.

தண்ணீரில் ஓட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. ஐந்தடிக்கு மேல் நீளமிருக்கும் ஒரு பாம்பு வேகமாக நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. தண்ணீர் ஓடுவது போல ஓடாத ஆற்றில் அதுவாக ஓடிக் கொண்டிருக்கிறதே என்று தோன்றியது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...