4 Aug 2023

பொருளாதார முரண்பாடுகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளும்

பொருளாதார முரண்பாடுகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளும்

இந்தியாவின் பொருளாதார முரண்பாடுகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 65 சதவீதம் குழந்தைகள் மரணமடைவதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

இதற்கும் கீழே இருக்கும் இன்னும் சில தரவுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடிகிறது.

அந்தத் தரவுகளைப் பார்த்து விடுவோம்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்பேம் அமைப்பு இந்தியப் பொருளாதாரம் (2022 – 2023)  குறித்த சில தகவல்களைத் தெரிவித்திருக்கிறது. அதன்படி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்களிடம் இந்தியாவின் 40 சதவீத சொத்துகள் இருக்கின்றனவாம். அடித்தட்டு மக்களிடம் வெறும் 3 சதவீத சொத்துகள்தான் இருக்கின்றனவாம்.

அதுமட்டுமல்ல, 50 சதவீத அடித்தட்டு மக்கள் ஜி.எஸ்.டி.யின் 64 சதவீதத்தைச் செலுத்துகிறார்களாம். டாப் 10 பணக்காரர்கள் செலுத்துவது ஜி.எஸ்.டி.யின் 3 சதவீதம்தானாம்.

இந்த டாப் 10 பணக்காரர்களுக்கு 5 சதவீத வரி விதித்தால் 1.39 லட்சம் கோடி வசூலாகுமாம். இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவில் பள்ளிப் படிப்பிலிருந்து இடைநிற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியைக் கொடுத்து விட முடியுமாம்.

கோவிட் காலத்தில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் சொத்து மதிப்பு மிகவும் குறைந்திருக்கிறது. ஆனால் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் அதிகரித்திருக்கிறதாம். 102 ஆக இருந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் 166 ஆக அதிகரித்திருக்கிறதாம்.

ஆண் – பெண் சம்பள விகிதாச்சார விவகாரத்தையும்  ஆக்ஸ்பேம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு வேலைக்கு ஆண் 100 ரூபாய் சம்பாதித்தால் பெண் 63 ரூபாய்தான் சம்பாதிக்க முடிகிறதாம். மற்ற பல இன மக்கள் 100 ரூபாய் சம்பாதித்தால் பட்டியல் இன மக்களால் 55 ரூபாய்தான் சம்பாதிக்க முடிகிறதாம்.

நிலைமை இப்படி இருந்தால் ஐந்து வயதுக்கு உட்பட்ட 65 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்க மாட்டார்களா என்ன? அவர்கள் ஊட்டச்சத்துகளைப் பெற முடியாமல் இறக்கிறார்கள். அக்குழந்தைகளின் பெற்றோர்கள் ஊட்டச்சத்தான பொருட்களை வாங்குவதற்கான பொருளாதார திராணியின்றி போவதால் இறக்கிறார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால் இந்தியாவில் 65 மக்கள் போதிய ஊட்டச்சத்தைப் பெறக் கூடிய உணவைப் பெறக் கூடிய அளவுக்குச் சம்பாதிக்க முடியவில்லை என்பதாகும் அல்லது அவர்களின் சம்பாத்தியம் ஊட்டச்சத்தான உணவை வாங்கக் கூடிய அளவுக்கு இல்லை என்பதாகும்.

இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு என்று அரசின் திட்டங்கள் இருக்கின்றன. குழந்தை நலன் தொடர்பான திட்டங்கள் இருக்கின்றன. மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. இருந்தும் 65 சதவீத குழந்தைகள் ஐந்து வயதைக் கடப்பதற்குள் இறந்து விடுகின்றன.

பெண்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக இருப்பதாகவும் 90 சதவீத பெண்கள் ரத்தசோகை, கால்சிய குறைபாடு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.

சத்தான உணவை உண்ண முடியாததற்குப் பொருளாதார தன்னிறைவு இல்லாமையும் ஒரு காரணம். அவர்களுக்கு இருக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு மலிவாகக் கிடைக்கும் தானிய உணவுகளையும் மானியத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களையும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்களை மட்டும் வாங்கியும் பெற்றும் உண்ண முடிகிறது. அதற்கு மேல் வாங்கும் திறனற்றுப் போவதற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வருமான விகிதாச்சார வேறுபாடும் ஒரு வகையில் முக்கிய காரணம். மேலே உள்ள தரவுகள் அதைச் சொல்கின்றன. ஒரு வேலைக்கு ஓர் ஆணால் 100 ரூபாய் வருமானம் ஈட்ட முடியுமானால் பெண்ணால் 63 ரூபாய்தான் ஈட்ட முடியும். இப்படிப்பட்ட ஆண் – பெண் வருமான வேறுபாடுகளும் ஒரு விதத்தில் பெண்கள் அதிகமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படவும் தானிய உணவுகளை மட்டும் உட்கொண்டு ஆரோக்கியமற்ற உடல் பருமன் அடையவும் காரணமாகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணமும் அவர்களின் பொருளாதார பலமின்மைதான். விகிதாச்சார அடிப்படையில் மற்ற இன மக்கள் 100 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் பட்டியல் இன மக்களால் 55 ரூபாய்தான் சம்பாதிக்க முடிகிறது. அவர்களின் வருமானம் சத்தான உணவை வாங்கி உண்ணக் கூடிய அளவுக்கு இல்லை.

இப்படிப்பட்ட பொருளாதார முரண்பாடுகளோடுதான் இந்தியா இயங்கிக் கொண்டிருக்கிறது. வல்லரசு கனவுகளையும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இயங்கும் கனவுகளையும் கண்டு கொண்டிருக்கிறது.

இந்தத் தகவல்களை எல்லாம் பார்க்கும் போது மன உளைச்சலாக இருக்கிறது என்கிறீர்களா? நிச்சயம் மன உளைச்சல் ஏற்படும். அந்த மன உளைச்சலின் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதை மனநோய் மருந்துகள் 35 சதவீதம் அதிகமாக விற்பதைக் குறிப்பிடும் பார்மசூட்டிகல் ஆய்விதழ்களின் தரவுகளைக் கொண்டு சொல்லலாம். ஆக இந்தியாவின் பொருளாதார முரண்பாடுகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் மட்டுமல்லாமல் மனநலப் பிரச்சனைகளுக்கும் கூட நெருங்கிய தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...