அளவை நோக்கும் வாழ்வு!
ஒட்டுமொத்தமாக இந்த வாழ்வை
எப்படி வாழ்ந்தால் சரியாக இருக்கும்?
இந்த வாழ்வை எப்படி வாழ்ந்தால்
நீண்ட நாள் வாழ முடியும்?
இப்படித்தான் வாழ வேண்டும்
என்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருக்கின்றனவா?
நோய் நொடியின்றி இருக்க எங்களை
எப்படித்தான் வாழச் சொல்கிறீர்கள்?
இப்படி என்னிடம் கேட்பவர்கள்
அதிகம்.
இந்தக் கேள்விகளின் பின்னணி
என்ன? தாங்கள் வாழும் வாழ்க்கை சரியாக இல்லை என்று வாழ்பவர்களே உணர்கிறார்கள். அதே
நேரத்தில் அப்படியொரு வாழ்வை விட்டு விடவும் அவர்களுக்கு மனமில்லை. என்ன செய்வது என்ற
குழப்பம் அவர்களிடம் நீடிக்கிறது. அந்தக் குழப்பமே என்னைப் போன்ற ஆட்களைச் சந்திக்கும்
போது இவர்கள் அலட்டிக் கொள்ளாமல் வாழ்கிறார்களே என்ற எண்ணத்தை உண்டாக்கி மேற்படி கேள்விகளை
எழுப்பி விடுகின்றன.
நான் அலட்டிக் கொள்ளாமல்
இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு என்ன செய்கிறேன்? அதைச் சொன்னால்தானே சரிபட்டு வரும்.
அளவான உணவு.
அளவான வேலை.
அளவான நடைபயிற்சி.
அளவான ஓய்வு.
அளவான தூக்கம்.
இவற்றைத்தான் செய்கிறேன்.
எப்போதாவது சில வேளைகளில் இவற்றில் அளவை மீறுவதுண்டு. அது வாரத்திற்கு ஒரு முறையோ,
மாதத்திற்கு ஒரு முறையோ இருக்கலாம். அடிக்கடி இருப்பதில்லை.
ஒரு விழாவிற்குச் செல்லும்
போது பரிமாறப்படும் பல வகை பண்டங்களைப் பார்த்து சற்றுக் கூடுதலாகச் சாப்பிட்டு விடுவதுண்டு.
இது எப்போதாவது விழாக்களின் போது நடப்பது மட்டுமே.
சில நேரங்களில் அலுவலகச்
சூழ்நிலையில் அதிகம் பணியாற்ற வேண்டி வருகிறது. இரவு கண் விழித்துக் கூட பணி செய்ய
வேண்டியிருக்கிறது. இதுவும் எப்போதும் அல்ல. எப்போதாவது சில மாதங்களுக்கு ஒரு முறை
பணி நெருக்கடிகளின் போது உருவாவதுதான். மற்றபடி வழக்கமாகச் செய்வது அளவான வேலையே.
நடைபயிற்சியும் நான் மற்றவர்களைப்
போல அதிக தூரம் நடப்பதோ, அதிக வேகமாக நடப்பதோ இல்லை. நாற்பது நிமிட கால அளவுக்குச்
சாயுங்காலமாக நடந்து போய் விட்டால்தான் மனதுக்குத் திருப்திபடும் என்பதால் அவ்வளவுதான்
நடை. அதற்கு மேல் இன்னும் கொஞ்சம் நடப்போம் என்று யாராவது கூப்பிட்டாலும் நீங்கள் போய்
வாருங்கள் என்று டாட்டா காட்டி வந்து விடுவேன்.
ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற
நாட்களில் ஏழு அல்லது எட்டு மணி நேர தூக்கம். எப்படியும் காலை நான்கு அல்லது ஐந்து
மணிக்கு எழுந்து விடுவேன். நான்கா அல்லது ஐந்தா என்பது இரவு தூங்கப்போகும் நேரத்தைப்
பொருத்தது. ஞாயிற்றுக் கிழமை மட்டும் மதிய சாப்பாட்டு முடித்து ஒரு இரண்டு மணி நேரம்
அல்லது இரண்டு மணி நேரம் தூக்கம் போடுகிறேன்.
இதுவே போதும் என்று நினைக்கிறேன்.
இதைத்தான் நான் கேள்விகளைக் கேட்பவர்களிடம் சொல்கிறேன். அதாவது இதுவே போதுமென்று நினைக்கிறேன்.
இது போதுமா? இன்னும் கூடுதலாக தேவையா? என்பதை அவரவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் கடைபிடித்துப்
பார்த்து இன்னும் கூடுதலாகத் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.
இதைத் தவிர நான் கூடுதலாகச்
செய்வது யோகா. காலையில் சுமார் நாற்பது நிமிடங்களுக்கு யோகா. அதுவும் மிதமான ஆசனங்கள்,
மூச்சுப் பயிற்சி, தளர்வு பயிற்சி, தியானப் பயிற்சி கொண்ட யோகாவின் கூறுகள்தான்.
நான் யோகா கற்றுக் கொண்ட
ஆரம்ப காலங்களில் பலவிதமான ஆசனங்களைச் செய்வதைப் பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டு
உடலைப் படு பயங்கரமா வளைத்து நெளித்து குறுக்கி நீட்டி என்னனென்னவோ செய்து கொண்டிருந்தேன்.
ஒரு நாள் நான் அதீதமாக ஆசனங்கள்
செய்து மற்றவர்களை வியக்க வைப்பதை பார்த்த என் ஆசான் ஒரு கேள்வி கேட்டார், “நீயென்ன
கழைக் கூத்தாடியா?” இந்த ஒரு கேள்வி என்னை அளவு என்பதைத் தாண்டக் கூடாது என்ற சரியான
பாதைக்குத் திருப்பி விட்டு விட்டது. அன்றிலிருந்து அப்படிச் செய்வதை விட்டு விட்டேன்.
இப்போது மிதமான அளவான ஆசனப் பயிற்சிகள்தான்.
இந்த அளவைத் தாண்டி இன்னும்
நில நீச்சுகளை வாங்கிப் போடு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். நான் வாங்கிப் போட்டதில்லை.
என் அப்பா விவசாயத்தைப் பார்க்கிறதுக்கு
என்ன என்று கேட்டிருக்கிறார். நான் பார்த்ததில்லை.
இதையெல்லாம் பார்த்து விட்டு
இப்படி இருந்தால் உங்கள் பையன் எப்படிப் பிழைப்பான் என்று என் பெற்றோர்களிடம் கேட்டவர்களும்
இருக்கிறார்கள். நான் இப்படி இருங்கள் என்று சொல்லும் போது நீங்கள் இதையும் கருத்தில்
கொள்ள வேண்டும். உங்களுக்கு இப்படி ஒரு பெயரும் ஏற்பட்டு விடும்.
பொதுவாக என்னைச் சுற்றி இருக்கும்
எல்லாரையும் பொருத்த வரையில் நான் இன்னும் ஓடியாடி வேலை பார்க்க வேண்டும், சொத்து சேர்ப்பதற்காக
இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும், பிள்ளையின் படிப்பிற்காகத் தனியார் பள்ளியில் சேர்த்து
அரும்பாடு பட வேண்டும் என்கிறார்கள். நான் இவற்றில் எதையும் செய்வதில்லை. இதற்கான ஏச்சுக்கும்
பேச்சுக்கும் நான் ஆட்படுகிறேன். அப்படி ஆட்பட்டுக் கொண்டேதான் ஒரு சிலரால் நான் மேலே
சொல்லியிருக்கிறேனே அந்தக் கேள்விகளுக்கும் ஆட்படுகிறேன்.
மொத்தத்தில் நான் சொல்கின்ற
வாழ்க்கை முறை என்பது எந்தச் சிறப்புமில்லாத ஒரு சாதாரண வாழ்க்கைதான். அதைத்தான் நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சிறப்பே இல்லாமல் அதாவது விஷேஷமே இல்லாமல் எப்படி வாழ்வது?
அதெல்லாம் ஒரு வாழ்வா? என்று நீங்கள் கேட்டால் நான் சொல்கின்ற வாழ்க்கை முறை ஒத்து
வராது. இதை வாழ்க்கை முறை என்று சொல்லக் கூட முடியாது. இயல்பாக இருப்பது, இயல்பாக வாழ்வது
என்றுதான் சொல்ல முடியும்.
என்னைக் கேட்டால் நான் ஏன்
சிறப்புக்காக வாழ வேண்டும் என்றுதான் கேட்கிறேன். பொதுவாக சாதாரணமாக வாழ்பவர்களுக்கு
அசாதாரணமாக வாழ்வதில் ஒரு கவர்ச்சி தெரிகிறது. அசாதாரணமாக வாழ்பவர்களுக்குச் சாதாரணமாக
வாழ்வதில் ஒரு கவர்ச்சி தெரிகிறது. இந்த இருதலை மனப்பான்மைதான் கேள்விகளை எழுப்புகின்றன
என்று நினைக்கிறேன்.
அது மட்டும்தான் காரணங்களா?
அல்லது அசாதாரணமாக வாழ்ந்து சாதனைகளை நிகழ்த்தி விட்டவர்கள் இன்று நோய் நொடிகளால் கலங்கிப்
போய் நிற்பதால் இவன் மட்டும் எப்படி அப்படியே இருக்கிறான் என்பதை நோக்கியும் இப்படிக்
கேள்விகளை எழுப்புகிறார்களா என்னவோ!
நான் சொல்வதுதான் சரியா என்று
எனக்குத் தெரியவில்லை. என்னவோ என் மனநிலை அப்படி அமைந்துவிட்டது. நான் படித்த புத்தகங்களும்
நான் சந்தித்த மனிதர்களும் அப்படி ஒரு மனநிலையைத்தான் எனக்குள் கட்டமைத்தார்கள். நீங்கள்
வாழ்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றாலும்
அளவோடு வாழ்வது நமக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது என்று தோன்றுகிறது. அத்துடன்
அது நமக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பானது என்றும் தோன்றுகிறது.
ஆகவே இதில் சபலப்பட ஏதுமில்லை
என்றுதான் நினைக்கிறேன். அளவை மீறி வாழ்ந்தாலும் எல்லாரும் ஒரு காலத்தில் அளவை நோக்கி
வந்துதான் ஆக வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்பதைச்
சொல்லுங்கள். அது பற்றி நாம் மேற்கொண்டு உரையாடுவோம்.
*****
No comments:
Post a Comment