2 Aug 2023

இந்தியாவின் உடல்நலம் - இந்தியாவே நலமாக உள்ளாயா?

இந்தியாவின் உடல்நலம்

இந்தியாவே நலமாக உள்ளாயா?

இந்தியாவின் குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்நலன் குறித்து வெளியாகும் ஆய்வுத் தரவுகள் கவலை தருவதாக உள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது. தேவையான முன்னெடுப்புகளைச் செய்யும் அளவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பலங்கள் கொண்டதாக இருக்கிறது. இருந்தும் இந்தியாவின் உடல்நலம் பலவீனமாக இருக்கிறது.

நாட்டின் மக்கள் தொகையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தனித்த இடம் பெற்றவர்கள். நாளை மக்களாக உருவாகப் போகிறவர்கள் இந்தக் குழந்தைகள்தான். அந்தக் குழந்தைகளை வரமாகத் தருவோர் பெண்கள்தான். இவர்களின் ஆரோக்கியத்தில்தான் நாட்டின் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

இந்தியக் குழந்தைகளில் நூற்றுக்கு அறுபத்தைந்து குழந்தைகள் ஐந்து வயதைக் கடப்பதற்குள் இறந்து விடுகிறார்கள். காரணம் ஊட்டச்சத்து குறைபாடு.

இந்தியப் பெண்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் ரத்த சோகை முக்கியமானது. இரும்புச்சத்து குறைபாடு அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தானிய உணவை மட்டுமே உண்ணும் குழந்தைகளும் பெண்களும் நிறைந்த நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அநாவசிய சர்க்கரையும் கொழுப்பும் மிகுந்த நொறுக்குத் தீனி பண்டங்களை அவர்கள் உண்கிறார்கள். இத்தகு உணவுமுறை அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் என்று சொல்ல முடியாது.

காய்கறிகளையும் கீரைகளையும் பழங்களையும் உண்ணும் பெண்களும் குழந்தைகளும் இந்தியாவில் குறைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறார்கள். நூற்றுப் பத்து பேர் என்கிற அளவில்தான் சரியான உணவை உண்கிறார்கள்.

காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ணாத போது ஊட்டச்சத்து குறைபாடு தானாகவே உண்டாகி விடும். இக்குறைபாட்டை நாம் எப்படிப் போக்க வேண்டும்? அவற்றை உண்ண வைப்பதன் மூலமாகத்தானே போக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் முறை வேறாக இருக்கிறது. இவற்றிற்காக மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

இரும்புச்சத்து குறைபாட்டிற்கு டானிக்குகளும் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவின் மூலம் சரிசெய்யக் கூடிய இந்தப் பிரச்சனை மருந்து மாத்திரைகள் கொண்ட வணிக விற்பனைக்கு உகந்த வியாபார தளத்தை நோக்கி நகர்த்தப்படுகிறது.

கீரைகளில் குறிப்பாக முருங்கைக் கீரையைத் தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்வதன் மூலமாக இரும்புச் சத்து குறைபாட்டை ரத்த சோகைப் பிரச்சனையைச் சரி செய்து விட முடியும். முருங்கைக்கீரையும் அப்படி விலை கொடுத்து வாங்க முடியாத ஒஸ்தியான பொருளும் அல்ல. விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஒரு போத்தை நட்டு வைத்தால் தழைத்துக் கிளம்பும் தாவர வகையைச் சார்ந்தது அது.

பருப்பு வகையைச் சார்ந்த சுண்டல்கள், மீன், முட்டை, மாமிச உணவில் ஈரல் போன்றவற்றைச் சேர்த்து கொள்வதன் மூலம் இரும்புச் சத்து குறைபாட்டையும் இன்னபிற ஊட்டச்சத்து குறைபாடுகளையும் போக்கிக் கொள்ள முடியும்.

இந்தியப் பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டில் அடுத்து முக்கியமாகப் பேசப்படுவது கால்சிய குறைபாடு. இதற்கெனவும் ஊட்டச்சத்து பானங்கள் மிகை விளம்பரம் செய்யப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன. மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால் அவை பரிந்துரைக்கவும் படுகின்றன. கேழ்வரகு என்ற சிறுதானிய உணவைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் இக்குறைபாட்டை இயற்கையாகப் போக்கிக் கொள்ள முடியும். மேலும் கடல் உணவுகளான மீன், நண்டு, இறால், அத்துடன் சோயா, பீன்ஸ் போன்றவற்றை உண்பதன் மூலமாகவும் போக்கிக் கொள்ள முடியும்.

கர்ப்பிணிப் பெண்களுக்குப் பொதுவாக இரும்புச்சத்து குறைபாடும் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படுகின்றன. இவற்றையும் உணவின் மூலமாகவே சரி செய்து கொள்ள முடியும். ஆனால் இரும்புச் சத்துக்கான மாத்திரை மருந்துகளும், போலிக் ஆசிட் வகை மருந்து மாத்திரைகளும், கொலைன் சத்துக்கான மருந்து மாத்திரைகளும் எழுதிக் கொடுக்கப்படுகின்றன.

இரும்புச் சத்து குறைபாட்டை அதிரடியாகத் தீர்ப்பதற்கு முருங்கைக் கீரையும் ஈரலுமே போதுமானது. இதில் சைவ உணவுக்காரர்கள் என்றால் முருங்கையையும் அசைவ உணவுக்காரர்கள் என்றால் ஈரலையும் நாடலாம். சைவம் – அசைவம் இரண்டும் உண்டென்றால் இரண்டையுமே எடுத்துக் கொள்ளலாம். மிக விரைவாக இரும்புச் சத்து குறைபாட்டை நீக்கி விட முடியும்.

நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்கவல்ல எத்தனையோ நீர்ச்சத்து நிறைந்த கறிகாய்கள் இருக்கின்றன. வெள்ளரி, பூசணிக்காய், சுரைக்காய், சௌ சௌ என்று அக்காய்கறிகளின் பட்டியல் நீண்டது.

போலிக் ஆசிட்டுக்காக மருந்து மாத்திரைகளே தேவையில்லை. அத்தனை பச்சைக் காய்கறிகளும் கீரைகளும் அச்சத்து நிரம்பியவையே.

கொலைனுக்கு முட்டையின் மஞ்சள் கருவே போதுமானது. சைவ உணவுக்காரர்கள் என்றால் பாலும் நிலக்கடலையும் போதுமானது.

பொதுவாக இன்னும் வைட்டமின் பி12, ஒமேகா 3, வைட்டமின் டி என்று அவற்றின் குறைபாட்டைச் சுட்டிக் காட்டி மருந்துகளும் மாத்திரைகளும் எழுதிக் கொடுக்கும் போக்கே இந்தியாவில் நீடிக்கின்றனது. இவற்றுக்கு மருந்து மாத்திரைகளே தேவையில்லை எனும்படி இயற்கையே இவற்றுக்கான சத்துகளை காய்கறிகளிலும் கீரைகளிலும் அசைவ உணவுகளிலும் சூரிய ஒளியிலும் நிரப்பி வைத்திருக்கிறது.

நாம் கொஞ்சம் அக்கறையாகச் சத்துகளின் வகைகளை அறிந்து கொண்டு அவை நிரம்பியிருக்கும் உணவு வகைகளை அறிந்து கொண்டு நம் அன்றாட உணவு அட்டவணையைக் கொஞ்சம் சீரமைத்தால் போதும். ஆரோக்கியம் தானாகவே திரும்பி விடும். இதனால் உடல்நலம் மிகுந்தவர்களாக மிக எளிமையான முறையில் இயற்கையான முறையில் மாறி விடலாம்.

நல்ல உணவை எடுத்துக் கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு குறைபாடே அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். உடல் வலிமைக்கும் நோயற்ற வாழ்க்கைக்கும் அது அடித்தளம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் உடல்நலத்தை மேம்படுத்த இந்தியர்கள் மருத்துவர்களையும் நிபுணர்களையும் நாடுவதையும் விட காய்கறிகளையும், கீரைகளையும், பருப்பு வகைகளையும், அசைவ உணவு வகைகளையும் சரிவிகிதத்தோடு நாடினாலே போதும். அதற்குக் கொஞ்சம் அதிகப்படியான தானிய உணவு வகைப் பழக்கத்திலிருந்தும் ருசிக்கான நொறுக்குத்தீனி கலாச்சாரத்திலிருந்தும் கொஞ்சம் வெளிவர வேண்டியிருக்கும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...