16 Jul 2023

எப்படித்தான் குறைப்பது தக்காளி விலையை?

எப்படித்தான் குறைப்பது தக்காளி விலையை?

விலை ஏறி ஏறி தக்காளி தன்னைப் பற்றிப் பேச வைத்து விட்டது. தக்காளியைத் தொடர்ந்து பச்சை மிளகாயும் தன்னைப் பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் விலையும் செஞ்சுரி அடித்து விட்டது.

தக்காளி விலையேறிய போதே அடுத்து வெங்காயம்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சின்ன வெங்காயமும் தன்னைப் பற்றி பேச வைத்து விட்டது. அதன் விலை டபுள் செஞ்சுரி அடித்து விட்டது டெண்டுல்கருக்கும், விராட் கோலிக்கும் சவால் விடுவதைப் போல.

ஒரு கிலோ தக்காளியைப் பத்து ரூபாய்க்குக் கூட வாங்கியிருக்கிறோம். இப்போது அதே தக்காளியைப் பத்து மடங்கு விலை கொடுத்து அதாவது நூறு ரூபாய் கொடுத்தும் சில நாட்களில் அதைத் தாண்டியும் விலை கொடுத்து வாங்குகிறோம். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளியை நான் நூற்று அறுபது ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறேன். தக்காளியின் மிகக் குறைந்த விலையிலிருந்து அது பதினாறு மடங்கு அதிகம்.

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அடிமாட்டு விலைக்கு வீழ்வதும் பின்பு பூதாகரமாக சாமானியர்கள் வாங்க முடியாத விலைக்கு எழுவதும் வருடா வருடம் நடக்கும் வாடிக்கைகளாகி விட்டன.

விலை குறையும் போதெல்லாம் விவசாயிகள் விளைபொருட்களைச் சாலையில் கொட்டிப் போராடுவதைப் பார்த்திருக்கிறோம். விலை ஏறும் போது விவசாயிகளின் தக்காளி வாகனத்தைக் கடத்துவதைப் பார்க்கிறோம். வேடிக்கையாக இருந்தாலும் இப்படி ஒரு சம்பவம் கர்நாடகத்தில் நிகழ்ந்தது. ஏனிந்த நிலை?

இயற்கை ஒரு காரணம் என்பது மறுக்க முடியாதது. இயற்கை மட்டுமா காரணம்? இயற்கையினால்தானே விளைச்சல் குறைகிறது என்று சொல்லலாம். விளைச்சல் குறைவது ஒரு காரணம் என்றாலும் மனிதர்கள்தான் அபரிமிதமாக விலையேறுவதற்கு முக்கிய காரணம். எந்தப் பொருளின் விளைச்சல் குறையும் என்று மனிதர்கள் குள்ள நரிகளைப் போல பார்த்துக் கொண்டிருப்பார்கள் போல. உடனே அந்தப் பொருளைப் பதுக்குவதன் மூலம் சராசரியான விலையேற்றத்தை உச்சபட்சமாக விலையேற்றமாக ஆக்கி விடுகிறார்கள்.

இங்கு இரண்டு கூறுகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, விளைச்சல் குறைவால் வரத்துக் குறைந்து விலையேறுவது. மற்றொன்று விளைச்சல் குறைவையும் வரத்துக் குறைவையும் பயன்படுத்தி மனிதர்கள் விலையேற்றுவது. அரசாங்கம் கொள்முதல் செய்து தக்காளியை ஓரளவு மலிவான விலையில் கொடுக்க முடியும் என்றால் வியாபாரிகளால் அதை ஏன் செய்ய முடியாது? நிச்சயம் செய்ய முடியும். வியாபாரிகள் அப்படிச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட அரசாங்கம் விலையேறும் பொருட்களைக் கண்காணித்து விலையுயர்வை நெறிப்படுத்தலாம். இன்னும் ஒரு படி மேலே போய் விலை உயரும் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையின் முழு கண்காணிப்பையும் விற்பனை மேலாண்மையையும் அரசாங்கமே செய்யலாம்.

இப்போது பிரச்சனை தீர்ந்து விட்டது போல உங்களுக்குத் தோன்றலாம். இன்னும் கொஞ்சம் யோசித்தால் உண்மையான பிரச்சனையின் மேற்பூச்சைத்தான் நாம் கண்டறிந்திருக்கிறோம். அதன் வேர் வேறு விதமானது. அதைத்தான் சரி செய்ய வேண்டும். எங்கே இருக்கிறது அந்த வேர் என்று கேட்கிறீர்களா?

இந்த வேர் நம் கண்களுக்குப் படாமல் பூமியில் மறைவாக இல்லாமல் வெளியே தெரியும் ஆலம் விழுதுகளைப் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்களே பாருங்கள். விளைநிலங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன. மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. விளைநிலங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன என்பது கூட தவறான வாக்கியம். குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் சரியான வாக்கியம்.

விளைநிலங்கள் குறைவதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இதைத்தான் நான் பிரச்சனையின் வேர் என்று குறிப்பிட விரும்புகிறேன். விளைநிலங்கள் குறைக்கப்படுவதை அரசாங்கம் ஊக்குவிக்கக் கூடாது. இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால் விளைநிலங்களை மாற்றுப் பயன்பாடுகளுக்காக அனுமதிப்பதை அரசாங்கமே ஊக்குவித்து அப்படிச் செய்யத் தூண்டக் கூடாது.

அரசாங்கம் செய்ய வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. அது என்னவென்றால் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அபரிமிதமாக ஒரு பொருள் விளையும் போது அதைப் பதப்படுத்தி வைக்க வேண்டும். இதை அரசாங்கம்தான் பெரும் முதலீட்டைச் செய்து பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளை நிறுவ முடியும். மற்றொரு முக்கியக் கூறாக இதை அரசாங்கம் செய்தால்தான் இது போன்ற பதப்படுத்தும் பணிகளில் பதுக்கல்கள், செயற்கையான விலையேற்றங்கள் போன்றவை நேராமலும் தடுக்க முடியும்.

வருடா வருடம் தட்டுபாடு ஏற்படுகிறது எனத் தெரியும் போது ஏன் அரசாங்கம் தக்காளிக்காகவும் வெங்காயத்திற்காகவும் ஒரு பதப்படுத்தும் ஆலையை நிறுவி பதப்படுத்திச் சேமித்து வைக்கக் கூடாது. அபரிமிதமாக விளையும் ஒரு பொருளுக்கு அடிமாட்டு விலை தரப்படுவதை இது போன்ற பதப்படுத்தும் முயற்சிகள் நியாயமான விலையைப் பெற்றுத் தர உதவக் கூடும்.

இன்று தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்திற்கு நேரும் நிலை நாளை அரிசிக்கும் கோதுமைக்கும் நிகழாது என்று சொல்லி விட முடியாது. அரசாங்கம் தன்னிடம் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறது. அரிசியையும் கோதுமையையும் அரசாங்கமே பெருமளவில் கொள்முதலும் செய்கிறது. அரசாங்கத்தின் சேமிப்புக் களஞ்சியங்கள் பாதுகாப்பாகவும் முறையான பராமரிப்பிலும் இருக்கிறதா என்பதை எப்போதும் அரசாங்கம் மிகத் தீவிரமான தன்மையோடு உறுதி செய்து கொள்ள வேண்டும். இது போன்ற களஞ்சியங்களை மற்றும் பதப்படுத்தி வைக்கும் சேமிப்புக் கிடங்குகளை ஏன் தனியார் மயமாக்கக் கூடாது என்பதற்கு இப்போது தக்காளியும் சின்ன வெங்காயமும் விற்கும் விலைகளே போதுமான காரணமாகும்.

ஆக, எப்படிதான் குறைப்பது தக்காளி விலையை என்ற இந்தப் பிரச்சனைக்கு இதனின்று நாம் மூன்று தீர்வுகளைப் பார்க்கலாம்.

1. விலையேறும் அத்தியாவசியப் பொருட்களின் வியாபாரத்தை விலை குறையும் வரை அரசாங்கமே மேற்கொள்வது. இது ஒரு தற்காலிகத் தீர்வுதான்.

2. அத்தியாவசியப் பொருட்களைப் பதப்படுத்தி வைக்கும் ஆலைகளையும் கிடங்குகளையும் அரசாங்கம் அமைப்பது. இது நடுநிலையான இடைக்காலத் தீர்வு.

3. விளைநிலங்களின் பரப்பு குறையாமல் அரசாங்கம் மேலாண்மை செய்வது. இது நிரந்தரத் தீர்வு. இந்த நிரந்தர தீர்வில் அரசாங்கம் தன்னுடைய தொலைநோக்கான பார்வையை அமைத்துக் கொண்டு, இடைக்காலத் தீர்வில் சீரான கவனம் செலுத்தித் தற்காலிகத் தீர்வில் போர்க்கால நடவடிக்கை எடுத்தால் தக்காளியின் விலையைப் பொதுமக்கள் வாங்கக் கூடிய விலைக்குக் கொண்டு வந்து விடலாம். இந்தத் தீர்வு என்பது தக்காளிக்கு மட்டுமல்ல அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...