16 Jul 2023

உங்களையும் இப்படித்தான் நெருக்குகிறார்களா?

உங்களையும் இப்படித்தான் நெருக்குகிறார்களா?

உங்களையும் இப்படித்தான் நெருக்குகிறார்களா? அல்லது எனக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா?

அலுவலகம் விட்டு அலுப்பாகச் சென்றேன்.

வங்கியிலிருந்து பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான மறு உறுதிமொழி பத்திர ஆணை ஒன்றைக் கேட்டிருந்தார்கள். ஏற்கனவே இது போன்ற ஓர் உறுதிமொழி பத்திர ஆணையைக் கொடுத்திருந்தேன்.

வங்கி அதிகாரி படிவங்களைக் கொடுத்து நிரப்பிக் கையெழுத்து போட்டு வருமாறு சொன்னார். படிவத்தில் போட வேண்டிய கையெழுத்துகள் எண்ணிக்கை நாற்பது சொச்சம் இருக்கும். நானும் என் மனைவியுமாக சோடியாகக் கையெழுத்துகள் போட வேண்டியிருந்தது. இதுவே வேலையாகி விட்டது என்று அலுத்துப் போய் உட்கார்ந்து விட்டேன்.

அப்போதிருந்த மனநிலையில் படிவங்களைப் படித்துப் பார்த்துக் கையெழுத்து போடும் மனநிலையில் இல்லை. அத்துடன் மனைவியின் கையெழுத்தும் வேண்டியிருந்ததால் வீட்டிற்குப் போய் நிரப்பிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி விட்டேன்.

வீட்டிற்கு வந்து சிற்றுண்டியும் தேநீரும் அருந்திய பிறகு நினைப்பு மாறி விட்டது. சரிதான் போ நாளை பார்த்துக் கொள்வோம் என்று தோன்றியது. ஆண்டுக்கு ஐந்தாறு முறை வரச் சொல்லி ஆதார் அட்டையின் நகல் கொடு, பான் அட்டையின் நகல் கொடு, இதை நிரப்பிக் கொடு, அதை நிரப்பிக் கொடு என்று அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி அலைய விடுகிறீர்கள் என்று கேட்டால் வாடிக்கையாளரை அறிந்து கொள்கிறோம் என்கிறார்கள். எல்லா வாடிக்கையாளர் விவரங்களும் தொழில்நுட்பத்தின் விரல் நுனியில் இருக்கும் போது இவர்கள் கட்டு கட்டாகக் காகிதங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கிருந்த சலிப்பான மனநிலையில் படிவங்கள் பாதுகாப்புப் பெட்டக வசதி தொடர்பானதா என்பதைப் படித்துப் பார்க்கவும் யோசனையாக இருந்தது. மனைவியிடம் கொடுத்துதான் படித்துப் பார்க்கச் சொன்னேன். அவள் படித்துப் பார்த்து விட்டு அது தொடர்பான பத்திரங்கள்தான் என்று சொன்னாள்.

நாங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு சோடி கையெழுத்துக்களைப் போட வேண்டியிருந்தது. கீழே ஒரு சோடி கையெழுத்து, பக்கவாட்டில் வலது புறத்தில் ஒரு சோடி கையெழுத்து. இப்படியாக ஒன்பது பக்கங்கள். பக்கத்திற்கு இரண்டு சோடியென்றால் நான்கு, ஒன்பது பக்கத்திற்கு என்றால் ஒன்பத்து நான்கு முப்பத்தாறு கையெழுத்துகளைப் போட்டு முடித்து ஆதார் மற்றும் பான் நகலை இணைத்து அதிலும் கையெழுத்தைப் போட்டு முடித்த போது நாற்பது கையெழுத்துகள் வந்திருந்தன.

நான் மறுநாள் படிவங்களைச் சமர்ப்பித்த போது வங்கி அதிகாரி கோபப்பட்டார். நான் நேற்றே தர வேண்டும் என்று சொன்னேனே என்றார்.

ஒரு நாள் தாமதத்தால் உங்கள் பாதுகாப்ப பெட்டக வசதிக்கு என்ன தொந்தரவு வந்தது என்றேன். நாங்கள் இந்தப் பணியை நேற்று மாலையே முடித்திருக்க வேண்டும் என்றார்.

ஏன் இன்று முடித்தால் என்னவாகி விடப் போகிறது என்றேன்.

அதற்கு மேல் என்னிடம் பேச விருப்பம் இல்லாதவர் போல அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். எனக்கு மட்டும் அவரிடம் பேச வேண்டும் என்று விருப்பமா என்ன? நானும் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்து விட்டேன். அடுத்த முறை இது போன்று படிவங்களை அவசரமாகக் கேட்டால் ஒரு வாரமாவது தாமதம் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

எல்லாம் உடனே உடனே என்றால், இவர்கள் மட்டும் எல்லாவற்றையும் உடனேயாவா செய்து கொடுக்கிறார்கள். பணம் கொடுக்கும் இயந்திரம் பணத்தைக் கொடுக்காமல் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்துக் கொண்டு விட்டது என்றால், ஒரு வாரம் கழித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இன்னும் காசோலை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்றால் மூன்று நாட்கள் ஆகும் என்கிறார்கள். அவசரமாக பணம் ரொக்கமாகத் தேவைப்படுகிறது என்றால் நாளை வாங்கிக் கொள்ளலாமா என்கிறார்கள். ஒரு வரைவோலை எடுப்பதற்கு நாள் முழுக்க காத்திருக்க வைக்கிறார்கள். பணத்தைக் கட்டுவதென்றால் இரண்டு, மூன்று மணி நேரம் வரிசையில் நின்று தேவுடு காக்க வைக்கிறார்கள்.

அவர்களுக்கு என்றால் அவசரம், வாடிக்கையாளர்களுக்கு என்றால் ஆற அமர நத்தையின் நிதானம் என்றால், இதிலென்ன நியாயம் இருக்கிறது சொல்லுங்கள்?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...