22 Jul 2023

சாதிப்பதில் என்ன இருக்கிறது?

சாதிப்பதில் என்ன இருக்கிறது?

நான் சாதிக்க வேண்டும் என்பதற்காக எனக்கு வழிகாட்டி வந்த இரண்டு பேர் என் கண் முன்னே விழுந்து இறந்தார்கள். நான் சாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நான் சாதித்தேன் என்ற பெயரை வாங்கிக் கொள்வதற்காக இரண்டு பேரை இப்படி அர்த்தமில்லாமல் கொல்ல வேண்டுமா?

ஒரு வீரர் இந்தச் சாதனையைச் செய்தார், ஒரு பணக்காரன் இந்தச் சாதனையைச் செய்தார், ஒரு சாமானியராக நான் இந்தச் சாதனையைச் செய்தேன் என்று ஒரு புதுப்பட்டியலை உருவாக்குவதற்காக நான் இதைச் செய்யலாமா?

உலகத்தினர் என் நெஞ்சுரத்தை இந்தச் சாதனைக்காகப் பாராட்டலாம். உள்ளூர நிறைந்திருந்தது எல்லாம் சாதித்து அதன் மூலமாகப் பெயர் வெற வேண்டும் என்ற சுயநலமும் பேராசையும்தானே.

இந்தப் பெயர் இல்லாமல் கூட நான் சந்தோசமாக இருந்திருக்கலாம். இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். நான் காப்பாற்றியிருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த ஒருவர் வந்து அந்த இருவரின் உயிரை எடுத்திருக்கலாம். எது எப்படி நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் நான் என்னை மட்டுப்படுத்தியிருக்கலாம்.

உலகில் சாதிக்கக் கூடாத ஒன்று இருக்கக் கூடாது என்பதற்காக இப்படி ஓர் உயிர்ப் பணயத்தை நான் தூண்டலாமா?

என்னைக் கஷ்டப்படுத்தி, மற்றவர்களின் உயிரை எடுத்து இது என்ன சாதனை? உலகில் இருப்போர் இந்த சாதனையையே எத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? நாட்களை விட்டு விடலாம், எத்தனை மணி நேரங்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்?

சாதனையைக் கேள்விப்படுபவர்கள் சில நிமிடங்கள் ஆகா என்றிருக்கலாம். அடேங்கப்பா பயங்கர சாதனைதான் என்று வாய் பிளந்திருக்கலாம்.

இந்தப் பயங்கர சாதனைக்காக எத்தனை நாட்களைப் பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் நான் வீணாக்கியிருக்கிறேன். குறிப்பிட்ட நிலைமைகளையும் சூழ்நிலைகளையும் தாங்க என்னை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருக்கிறேன்.

நான் என்னையும் கொடுமைக்குள்ளாக்கி மற்றவர்களையும் கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறேன்.

இந்தச் சாதனைக்கான செலவுக்காக எத்தனையோ பேரிடம் போய் நின்றிருக்கிறேன். பிச்சைக்காரன் போல இரந்து கேட்டிருக்கிறேன். அவர்கள் அதை உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள். உதாசீனப்படுத்தியவர்களை மனதிற்குள் கோபித்திருக்கிறேன். இப்போது இரண்டு பேர் உலகை விட்டுப் போனதைப் பார்க்கும் போது அந்த உதாசீனத்தின் பின்னணியில் காலம் ஏதோ ஒரு பொருளைத் தர முயற்சித்ததாகத்தான் நினைக்கிறேன்.

ஒரு சாதனையைச் செய்வதில் நிறைய நுட்பங்கள் இருக்கின்றன. அந்த நுட்பங்களைக் கண்டடைந்தவர்கள் அதைத் தாங்கள் கண்டுபிடித்ததாக உரிமம் வாங்கியிருக்கிறார்கள். அந்த உரிமங்களையெல்லாம் பணம் கொடுத்து வாங்கி பயிற்சி வேறு செய்ய வேண்டியிருக்கிறது.

வாழ்க்கையின் ஒரு வேளை பசியை ஆற்றக் கூட உதவாத அந்த நுட்பங்களுக்காக மிகப் பெரிய தொகையைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வேளை அந்தத் தொகை அந்த நுட்பங்களை உருவாக்கியவர்களின் பசியை ஆற்றிக் கொண்டிருக்கலாம். ஒரு சில நுட்பங்கள் அதைக் கண்டுபிடித்தவர்களைப் பணக்காரர்களாகவும் ஆக்கியிருக்கலாம்.

சாதனையானது சாவின் நுட்பங்களோடு விளையாடுவதாக இருக்கிறது. அது ஓர் அந்நியமாகிப் போன மனிதருக்கு விபரீதமான உற்சாகத்தைத் தருகிறது. சாதனைக்காக முயற்சிக்க முடியாதவர்கள் சாதனையில் கிடைக்கும் விபரீத உற்சாகத்தைச் சாதிப்பவர்களைப் பார்த்து அடைய நினைக்கிறார்கள். சாதிக்க முடியவில்லையே என்ற வெற்றிடத்தைச் சாதித்தவர்களைப் பார்த்து நிரப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

சாதனைகள் ஒரு விதத்தில் மோசமானவை. அவை இயல்பான வாழ்கையை அழிக்கின்றன. பிரத்யேகமான ஒரு வாழ்க்கைக்குத் தள்ளுகின்றன. கொஞ்சமேனும் மனப்பிறழ்வை அடையாமல் நீங்கள் சாதிக்க முடியாது. மன அழுத்தம், மன உளைச்சல் எல்லாம் சாதனையின் முடிவில் பனித்துளியாகி விடலாம். முடிவை எட்டும் முன் தவறி விழுந்தால் பள்ளத்தாக்கில் விழுந்ததைப் போல மன அழுத்தம் பலத்த அடியைப் போட்டு விட்டுப் போகிறது.

நான் என் சாதனைகளை இறக்கி வைக்க நினைக்கிறேன். சாதிக்காத மனிதர்களின் கூட்டத்தில் முகமிழந்து போன மனிதர்களில் ஒருவராக வாழ நினைக்கிறேன். இந்தப் பூமி எத்தனையோ சாதனையாளர்களைக் கண்டு விட்டது. சாதனையாளர்களை நினைவில் வைத்து வைத்து மூளையின் நினைவாற்றல் களைத்துப் போய் விட்டது.

சாதிக்காதவர்களை வரலாறு கணக்கில் கொள்வதில்லை. அவர்கள் பிறந்த தடமும் இறந்த இடமும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். வரலாற்றின் ஒற்றை வார்த்தைக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சாதனையில் தொலைக்க வேண்டியிருக்கிறது. வரலாற்றில் ஓர் இடம் இல்லாவிட்டாலும் சாதனைக்காக அலட்டிக் கொள்ளாத, சாதனை மேல் ஒரு வெறுப்பு கொண்ட வாழ்க்கை இயல்பாகவும் எதார்த்தமாகவும் இனிமையாகவும்தான் இருக்கிறது.

வரலாற்றில் நிலை கொள்ள வேண்டும் என்பதற்காக வாழ்க்கையின் நிதானத்தில் ஏன் நிலைகொள்ளாமல் போக வேண்டும்? ஒரு வெறியின் பசிக்காகச் சாதனையில் ஏன் என்னைப் பலிகொடுக்க வேண்டும்?

இவ்வளவு செலவுகள், இவ்வளவு மெனக்கெடுகள், இவ்வளவு மன அழுத்தங்கள் என எதிர்கொண்டு இவற்றால் நான் சாதித்தது சாதனை ஒன்று மட்டுமே.

ஒரு பூ இயல்பாக பூ பூத்து விட்டு உதிர்ந்து விடுகிறது. அதை பூக்க வைப்பதை நான் சாதனை என்கிறேன். அதுதான் இயல்பாகப் பூக்கிறதே. அதை ஏன் பூக்க வைத்து விட்டு நான் சாதனை என்று சொல்ல வேண்டும்? மற்றவர்களை என்னை நோக்கிக் கவனிக்க வைக்க வேண்டும் என்ற பேராசைக்கும் சுயநலத்திற்கும் அதைச் சாதனை என்று சொல்லாமல் நான் வேறெப்படிச் சொல்ல முடியும்?

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...