21 Jul 2023

ஒரு மனையை வாங்கும் முறை அல்லது ஒரு வீட்டைக் கட்டும் முறை

ஒரு மனையை வாங்கும் முறை அல்லது ஒரு வீட்டைக் கட்டும் முறை

கடன் வாங்காமல் வீடு கட்ட முடியாது, மனை வாங்கிப் போட முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இதை உருவாக்கியது யார்? மூன்று முக்கோண முக்கியஸ்தர்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மூன்று முக்கிய முக்கியஸ்தர்கள் வங்கிகள், வியாபாரிகள், தரகர்கள்.

எப்படி உருவாக்கினார்கள்? மனைகளின் விலையை ஏற்றினார்கள். ஏற்றப்பட்ட விலையை அன்றாடமோ, மாத ஊதியமோ பெறுபவர்களால் சுலபமாக வாங்கி விட முடியாத அளவுக்குக் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

நீங்களும் நானும் சொந்த மனையோ, வீடோ இல்லாமல் எத்தனை நாள் இருக்க முடியும் என்று சொல்லுங்கள். கௌரவமாக வாழ்வதன் குறியீடாக அதை அக்கம் பக்கத்தினரும் உறவினரும் சுற்றுப்புறத்தினரும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கடன்பட்டாவது மனையை வாங்கிப் போடு, வீட்டைக் கட்டிப் போடு என்று அவர்கள் எல்லாம் சேர்ந்து பிடுங்கி எடுக்கிறார்கள்.

எத்தனை நாள் பிக்கல் பிடுங்கள்களைத் தாங்குவது? அந்தப் பிக்கல் பிடுங்கல்களுக்காகக் கடன் வாங்குவது தப்பே இல்லை என்ற உணர்வை நோக்கி நீங்கள் நகர்ந்து விடுவீர்கள்.

பிறகென்ன? கடன் கொடுப்பதற்கான வங்கிகளை வியாபாரிகள் கை காட்டுவார்கள். கேட்டக் கடன் கிடைக்கும் போது விலையைக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்தால் என்ன என்று இடைத்தரகர்கள் விலையை ஏற்றுவார்கள். பிறகு நீங்கள் என்ன செய்ய முடியும்? அதிகபட்ச கடன் எவ்வளவு கொடுப்பீர்கள் என்று வங்கியாளர்களைக் கேட்பீர்கள்.

வங்கியாளர்களுக்கு என்ன? நீங்கள் கடனைக் கட்டினாலும் லாபம்.கட்டாவிட்டாலும் லாபம். கட்டினால் குறைந்த லாபம். கட்டாமல் போனால் அதிக லாபம். அபராதம், பறிமுதல், அதிரடி நடவடிக்கை, குண்டர்களை வைத்து மிரட்டல் என்ற சகலவிதமான உபாயங்களையும் கடைபிடித்து அதிகபட்ச லாபத்தைக் கறந்து விடுவார்கள்.

கடன் இல்லாமல் மனை வாங்க முடியாதா? வீடு கட்ட முடியாதா? என்றால் ஏன் முடியாது.

நாம் சேமிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. பணத்தைத் திரட்டிக் கொள்வதற்கும் வழிகள் இருக்கின்றன. நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அவசரம் காட்டக் கூடாது.

மனையை வாங்கிப் போட்டு விட்டு அல்லது வீட்டைக் கட்டி விட்டு மாதாமாதம் வட்டியைக் கட்டிக் கொண்டிருப்பதை விட காத்திருந்து மனையை வாங்குவதோ, வீட்டைக் கட்டுவதோ பின்னடைவோ, தரக்குறைவோ அல்ல.

கடனை வாங்கி விட்டு மாதா மாதம் வட்டியைக் கட்ட முடிகிற நம்மால் மாதா மாதம் ஏன் தொடர் வைப்பை (ஆர்.டி.) கட்ட முடியாது? அதில் வரும் வட்டிக் குறைவு, பணவீக்கத்திற்கு ஈடாகாது என்று நீங்கள் நினைத்தால் மாதா மாதம் ஏன் ஒரு கிராம் தங்க நாணயத்தை வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது?

ஒரு மனையோ வீடோ உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள் ஐயாயிரத்துக்குக் குறைவாக தவணையுள்ள எந்தக் கடனையும் வாங்க முடியாது. நிலைமை இப்படி இருக்க உங்களால் ஏன் மாதாமாதம் ஐயாயிரமோ அதை விடக் கூடுதலாக ஒரு தொகையை ஒதுக்கி ஒரு ஆர்.டி.யை அல்லது ஒரு கிராம் தங்க நாணயத்தை வாங்கிப் போட முடியாது.

ஒரு வாடகை வீட்டில் இருந்து கொண்டு இந்த ஆர்.டி.யையோ தங்க நாணய சேமிப்பையோ செய்து கொண்டே இருங்கள். அவ்வபோது கூடுதலாகக் கிடைக்கும் பணத்தையும் இப்படியே செய்து கொண்டு இருங்கள். இப்போது உங்களுக்கு வட்டி கட்டும் பிரச்சனையில்லை. அநாவசியமாக உங்கள் உழைப்பின் வருமானத்தை வட்டிக்குக் கட்டி சீரழிய வேண்டியதில்லை. உங்கள் ஆர்.டி.யும் தங்க நாணயங்களும் உங்களுக்கு வட்டியை வாங்கித் தருகின்றன.

உங்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகச் சம்பாதிக்க இழப்பை எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கிறதென்றால் பங்குச் சந்தைகளில் குறியீடுகளில் (நிப்டி, சென்செக்ஸ் போன்ற குறியீடுகளில் மட்டும்) உள்ள நல்ல பங்குகளை மட்டும் மாதாமாதம் வாங்கிப் போடலாம். அல்லது நிப்டி குறியீட்டையே வாங்கிப் போடுங்கள். நிப்டி பீஸ் என்ற பெயரில் கிடைக்கிறது.

என்னைக் கேட்டால் நீங்கள் கலவையாக ஆர்.டி., தங்க நாணயம், மேற்படி முறையில் பங்குகள் என்று மாதா மாதம் செய்வது சிறப்பானது என்பேன்.

இப்படியே செய்து கொண்டிருந்தால் ஒரு பத்து ஆண்டுகளில் உங்கள் கையில் கணிசமான தொகை சேர்ந்திருக்கும். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் சும்மா இருந்து விடாதீர்கள். உங்களுக்குப் பிடித்தமான இடத்தைத் தேடிக் கொண்டிருங்கள். அங்கே வீடுகள், மனைகள் விற்பனைக்கு வருவதை மாதம் ஒரு முறையோ இரு மாதங்களுக்கு ஒரு முறையோ விசாரித்துக் கொண்டு இருங்கள். அங்கே இருப்பவர்களைப் பழக்கப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். யாரோ சிலர் பண முடையாலோ பணத்தேவையாலோ மனைகளையோ வீடுகளையோ சல்லிசான விலையில் விற்பதற்கான வாய்ப்புகளும் வரக் கூடும். கண்டிப்பாக பத்தாண்டுகளுக்குள் இப்படி நீங்கள் ஐந்தாறு வாய்ப்புகளைப் பார்ப்பீர்கள். நல்ல வாய்ப்பு என்றால் அதாவது சல்லிசான விலை என்றால் வங்கிக் கடன் வாங்கி அதை வாங்கிப் போட தயங்காதீர்கள். உங்களிடமும் அப்போது கணிசமான தொகை கையில் இருக்கும். அத்துடன் சல்லிசான விலைக்கு வங்கிக் கடனும் சேர்ந்தால் நீங்கள் வாங்கப் போகும் வங்கிக்கடன் குறைவுதான் என்று சொல்ல வேண்டும்.

நான் சேமிப்பைப் பொருத்த வரையில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் தொடங்கப்படும் ஆர்.டி.யை மட்டும்தான் சொல்கிறேன். தனியார் நிறுவனங்களின் சேமிப்புகளையோ, சீட்டிக் கட்டிச் சேமிப்பதையோ, தவணைத் திட்டங்களில் சேமிப்பதையோ சொல்லவில்லை. அது போன்ற அபாயங்களில் எப்போதும் இறங்கி விட வேண்டாம்.

பங்குகள் என்று சொல்லும் போது நேரடியாகச் சந்தைக் குறீயிடுகளில் பங்களிக்கும் நல்ல பங்குகளைத்தான் சொல்கிறேன். அல்லது நிப்டி குறியீட்டை வாங்கும் நிப்டி பீஸ்ஸைதான் சொல்கிறேன். உங்களுக்கு இதில் துணிச்சல் இன்னும் அதிகம் என்றால் பார்மா பீஸ், ஐடி பீஸ், பேங்க் பீஸ் என்று இறங்குங்கள். மியூட்சுவல் பண்ட் திட்டங்களைக் குறிப்பிடவில்லை. யார் யாரோ சம்பாதிக்க வழிவகுக்க சொல்லவில்லை.

தங்க நாணயங்களை வாங்கும் போதும் தவணைத் திட்டம் போன்றவற்றில் சேர்ந்து வாங்காதீர்கள். தங்க நாணயங்களாக அவ்வபோது சேரும் தொகையைக் கொண்டு வாங்குங்கள். அல்லது பணத்தை நீங்கள் சேமித்து வைத்து அதில் வாங்குங்கள். நகைக்கடைகளை நம்பிப் பணம் கட்டி அதில் வாங்க முயற்சி செய்யாதீர்கள். எப்போது எந்தக் கடை சுருட்டிக் கொண்டு ஓடும், திவாலாகி இல்லாமல் போகும் என்பதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் இல்லை.

மனையையோ வீட்டையோ வாங்குபவர்களுக்கு இதுதான் சிறந்த வழியாக இருக்கும். இதை விடுத்து விட்டு ஆரம்பத்தையே கடனில் துவக்கினீர்கள் என்றால் வட்டி கட்டி சீரழிய நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். என்னைக் கேட்டால் நீங்கள் வங்கிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் உழைத்துக் கொட்ட பிறக்கவில்லை. நீங்கள் நலமாகவும் வளமாகவும் வாழவே பிறந்திருக்கிறீர்கள். அதற்காகக் கொஞ்சம் பொறுத்திருந்து சேமிப்பைச் செய்தால் உங்களால் நிறைவான மன உளைச்சல் இல்லாத நெருக்கடி இல்லாத பிரச்சனைகள் இல்லாத ஒரு வீட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...