20 Jul 2023

கட்டம் (சிறுகதை)

கட்டம் (சிறுகதை)

-         விகடபாரதி

ஐந்து அல்லது ஆறு மாதங்கள் இருக்கும். ஓ.எம். என்று நினைக்கிறேன் அத்துடன் ஓர் எண்ணைச் சொல்லி கூட்டுறவு சிக்கன கடன் வங்கி லிமிட்டெட்டிலிருந்து வருவதாகச் சொன்னார்கள்.

எந்த வேலை இருந்தாலும் அந்த வேலையைப் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கட்டும் என்றார் மேலாளர். லிமிட்டெட்டிலிருந்து வருவோரின் சொற்களுக்குச் செவி மடுக்குமாறு அவர்கள் முன் பவ்வியமாகக் கூறினார். வேலை சுருக்காக ஆகட்டும், இம்மென்று சொல்வதற்குள் முடியட்டும் என்று சொல்லும் மேலாளரா இப்படிச் சொல்கிறார் என்ற ஆச்சரியம் எனக்கு.

இந்த அலுவலகத்தில் வேலையில் இருக்கும் அனைவரும் அந்த லிமிட்டெட்டில் உறுப்பினராக இணைய வேண்டும் என்பதை அவர்கள் சற்று விரிவாக அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார்கள்.

உறுப்பினர்களுக்கு ஆறு லட்சம் கடன், பதின்மூன்று சதவீத வட்டி, விண்ணப்பித்த இருபது நாட்களுக்குள் கடன் வழங்கப்படும், மாதாந்திர கடன்தொகையைச் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வோம் என்று குச்சி மிட்டாய்களை நூலில் கட்டி ஆட்டினர்.

எல்லாரும் ஆசை ஆசையாக அடித்துப் பிடித்துக் கொண்டு நிவாரணப் பணத்தை வாங்க முண்டியடித்துக் கூட்டத்துள் நசுங்கிப் பொசுங்கிப் போவதைப் போல வாங்கினர். விண்ணப்பத்தை வாங்கி, போட்டி போட்டுக் கொண்டு வேக வேகமாக நிரப்பிக் கொடுத்தனர் என் ஒருத்தனைத் தவிர.

“என்னய்யா நீ மட்டும் சும்மா இருக்கே? போய் நீயும் ஒண்ணுத்த வாங்கி நிரப்பிக் கொடு!” என்றார் மேலாளர்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வாங்கிய கையோடு லிமிட்டெட்டைச் சார்ந்தவர்கள் அழகான கைப்பை ஒன்றையும் கொடுத்தார்கள். ஒரு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்தற்காக இப்படி ஒரு பையா என விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்த அனைவரும் அசந்து போயினர். அப்போதும் நான் அசையாமல் யோசித்த வண்ணம் இருந்தேன்.

“யோவ் சொல்றேன்ல. அப்படியே செவிட்டு முண்டம் மாதிரி உக்கார்ந்தே இருக்கே. போயி ஒரு படிவத்தை வாங்குவியா, நிரப்பிக் கொடுப்பியா, அப்படியே கைப்பையை லவட்டிக்கிட்டு வருவியா? நீ என்னன்னா மக்கு மதாசு மாதிரி உக்காந்திருக்கே இன்னும்?” என்று மேலாளரின் வார்த்தையில் சூடு பொறுக்க முடியாத அளவுக்கு சூடு பறக்க ஆரம்பித்தது.

இதற்கு மேல் மேலாளருக்கு ஒரு வார்த்தையைச் சொல்லாமல் எப்படி உட்கார்ந்திருப்பது. “இல்லைங்கய்யா! இதெல்லாம் வேணாம்ன்னு நினைக்கிறேன்.” என்றேன். மேலாளர் முகத்தில் முதன் முறையாக அதிர்ச்சி. என்னை இதுவரை பார்க்காத ஜந்துவைப் பார்ப்பதைப் போல ஒரு பார்வை பார்த்தார்.

“இப்போ இதெல்லாம் புரியாது. வயசு அப்படி. அனுபவப்பட்டவன் சொல்றேன். போயி வாங்கி மரியாதையா நிரப்பிக் கொடுத்து கைப்பையை வாங்கிட்டு வா!” என்று மிரட்டுகிற தொனியில் சொன்னார் மேலாளர்.

“தயவுசெஞ்சு தப்பா நெனைச்சுக்க வேணாம். எனக்கு வேணாம்ன்னு தோணுது.” என்றேன்.

“என்னடா நீ! இவ்வளவு சொல்றேன். என்னவோ சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிகிட்டு இருக்கே. நம்ம கம்பெனியில கடன் கேட்டா கூட கொடுக்க மாட்டோம், தெரியும்ல. நம்மள நம்பி கடன் கொடுக்கிறேன்னு ஒருத்தன் வந்திருக்கான்னா லபக்ன்னு வாங்கிப் பையில போட்டுக்குறத விட்டுப்புட்டுத் தத்துப்பித்துன்னு என்னென்னவோ பேசிட்டு இருக்கீயே?” என்று டா போட்டு டோஸ் விடும் ஒருமைக்குத் தாவினார் மேலாளர்.

“கடன் பெறாத வறியவர்கள்தான் செல்வந்தர்கள்ன்னு ஔவையார் சொல்லிருக்காங்கய்யா!” என்றேன் நான்.

“அவ்வ சொல்லுவாய்யா. அவளுக்கென்ன குடும்ப இருந்துச்சா? புள்ளை குட்டி இருந்துச்சா? ஊரு ஊரா சுத்துன பரதேசிக் கிழவிதானேய்யா அவ்வே. அவளுக்கு எதுக்குய்யா கடன் கப்பில்லாம்? எவன் வீட்டுலயாவது போயி நிக்கிறது? எதாச்சும் பாட்டைப் பாடி புல்லு கட்டு கட்டுறது. நீயும் அப்படி நிக்க முடியுமா? நீயி சம்சாரி. பணத்தேவை எப்போ வரும், எப்போ வராதுன்னுல்லாம் சொல்ல முடியாது.” கொஞ்சம் மரியாதையான தொனிக்கு மாறி மீண்டும் எனக்குப் பொறுமையாக அறிவுறுத்தினார் மேலாளர். இந்த விண்ணப்பத்தை வாங்கி நிரப்பிக் கொடுக்காவிட்டால் என்னை வேலையை விட்டு நீக்கி விடுவதைப் போல அவர் முகத்தில் ஒரு கடுமையும் கோபமும் தாண்டவமாடியது.

இந்த இக்கட்டான நிலைமையை அதற்கு மேல் சமாளிக்கத் தெரியாமலா, சமாளிக்க முடியாமலா என்று தெரியவில்லை. மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மாக்கானைப் போல போய் விண்ணப்பத்தை வாங்கினேன். வாங்கினேனே தவிர நிரப்ப மனசு வரவில்லை. பத்துப் பக்கத்தை பத்து நிமிஷத்தில் நிரப்பி விடும் நான் பெயரைக் கூட நிரப்பாமல் திரும்பத் திரும்ப விண்ணப்பத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னடா இவன் இப்படிப் பார்க்கிறான் என்று என்னை நோக்கி மேலாளர் வந்தார்.

“நான் உன்னைய நெருக்கடி பண்றாப்புல நினைக்கிறே. ஒண்ணும் அவசரமில்ல. வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் ஆர அமர யோசிச்சு நிரப்பி நாளைக்கு அவுங்க அலுவலகத்துக்கே கொண்டு போயி கொடு. நாளைக்கு சாயுங்காலம் இதுக்குன்னே ஒனக்கு ஒரு மணி நேரம் அனுமதி தர்றேன்.” என்றார் மேலாளர் என் மேல் கருணை சுரப்பதைப் போல. நிஜமாக என்னுடைய மேலாளர்தான் அப்படிப் பேசுகிறாரா என்று அந்த நேரத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கிடைத்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று உடனே விண்ணப்பத்தை நான்காக மடித்துச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டேன்.

“எல்லார்கிட்டேயும் வாங்கிட்டீங்க இல்லே. இந்த ஆளு மட்டும் நாளைக்கு உங்க அலுவலகத்துல கொண்டாந்து தருவான். அதுக்கு நான் உத்தரவாதம். இங்க வந்து இவுங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு நல்ல வழியக் காட்டுனதுக்கு ரொம்ப நன்றிங்க.” என்றார் மேலாளர் வழியாத கூழைக் கும்பிடைப் போட்டு. லிமிட்டெட்காரர்கள் நிறைந்த மனதோடு சென்று கொண்டிருந்தார்கள்.

மறுநாள் நான் அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக மேலாளர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். நான் விண்ணப்பத்தைப் படித்துப் பார்த்தேனா? நிரப்பி வைத்திருக்கிறேனா? என்று எதையும் கேட்காமல், “சாயுங்காலம் நாலு மணிக்குக் கிளம்பிடு. அதெ கொண்டுப் போய் கொடுத்துடு. இந்த அலுவலகத்துல எல்லாரையும் லிமிட்டெட்ல சேர்க்குறேன்னு சொல்லியிருக்கேன். என்ன புரிஞ்சுதா?” என்றார்.

நான் மஞ்சள் தண்ணி தெளிக்கப்பட்ட ஆடு போல மூன்றே முக்காலுக்கு அவசர அவசரமாக விண்ணப்பத்தைப் படித்தது பாதி படிக்காதது பாதியாக வேக வேகமாக நிரப்பிக் கொண்டு மேலாளர் அறைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் எதுவும் பேசாமல், நான்தான் காலையிலேயே சொல்லி விட்டேனடா நாற்ற முண்டம், கிளம்பு என்பது போல கழுத்தை ஒரு வெட்டு வெட்டி இழுத்து விட்டு ஏதோ ஒரு கோப்பில் மூழ்கிக் கொண்டிருந்தார்.

நகர மறுத்த கால்களை எப்படியோ நகர வைத்து ஒரு ஜவ்வு மிட்டாய் இழுவையோடு நகர்ந்தபடி நான் லிமிட்டெட் அலுவலத்தில் நுழைந்து விண்ணப்பத்தை நீட்டினேன். ஏன்டா நாயே, இதை நேற்றைக்கே கொடுத்துத் தொலைய வேண்டியதுதானே என்பது போல என்னை ஓர் எகத்தாளப் பார்வை பார்த்து அலட்சியமாக வாங்கிக் கொண்டார் சுவரோரத்தில் சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்த எழுத்தர் ஒருவர். அத்துடன் அவர் எழுதிக் கொண்டிருந்த பதிவேட்டில் ஆழ்ந்து விட்டார். முறைப்படி எப்படி நகர்வது அல்லது விடைபெற்றுக் கொள்வது அல்லது உத்தரவு வாங்கிக் கொள்வது என்பது புரியாமல் நான் நின்று கொண்டே இருந்தேன் நேர்ந்து விட்ட ஆட்டைப் போல.

அத்துடன் என் அல்ப ஆசை விட வேண்டுமே என்னை. அதற்குக் கட்டுப்பட்டு நான் நின்று கொண்டிருந்தேன். ஏழெட்டு நிமிடம் நின்றிருப்பேன். என்னை அண்ணாந்து பார்த்து என்ன என்பது போல கண்ணை நிமிட்டிப் பார்த்தார். “ஐயா! கைப்பை!” என்று என் அலுப்பைத் தனத்தைக் காட்டியபடி நான் ஓர் இளிப்பு இளித்தேன். “அதெல்லாம் நாங்க நேற்றுக்கு உங்களைத் தேடி வந்தப்போ கொடுத்தவங்களுக்குத்தான். ரொம்ப யோசிச்சிட்டு வர்றவங்களுக்கு இல்ல. கையில லட்டைத் தூக்கிக் கொடுத்தா யோசிக்காம வாங்கிச் சாப்பிடணும். அது இனிப்பு குண்டா? வெடிகுண்டா? அப்படின்னு ஆராய்ச்சி பண்ணுறவங்களுக்கு எல்லாம் லிமிட்டெட் எதுவும் செய்யாது.” என்றார்.

கொடுத்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளலாமா என்று தோன்றியது. அவ்வளவு ரோஷம் இருந்தால் மேலாளருக்குக் கட்டுப்பட்டு ஏன் வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இருக்கிற வேலையையும் விட்டு விட்டு எத்தனைப் பேர் காலில் விழுவது? அதற்குப் பேசாமல் மேலாளர் காலில் விழுவதே மேல் என்று நினைத்துக் கொண்டு விண்ணப்பத்தை வாபஸ் வாங்கும் முடிவை வாபஸ் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். இப்படியாக லிமிட்டெட்டில் நானும் உறுப்பினர் ஆனேன்.

உறுப்பினர் ஆன பின்தான் அடுத்தடுத்த வினைகள் ஆரம்பித்தன. அடுத்தடுத்த வாரங்களில் அலுவலக சகாக்கள் ஒவ்வொருவராக கடனுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்தனர். அந்த விண்ணப்பத்தில்தான் வினை ஆரம்பித்தது. அதற்கு ஜாமீன் கையெழுத்து இருவர் போட வேண்டியிருந்தது. அதில் ஒருவனாக என்னைப் பலரும் போடச் சொல்லி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தனர். எனக்கு நீ ஜாமீன், உனக்கு நான் ஜாமீன் என்று ஒவ்வொருவரும் ஜாமீன் கையெழுத்துப் போட ஒரு காரணம் இருந்தது. எல்லாருக்கும் கடன் தேவையாக இருந்தது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாமல் இருந்தது. இருந்தாலும் பக்கத்து மேசை சகாக்கள் கேட்கும் போது எப்படிப் போடாமல் இருப்பது? நாளை முகத்தில் முழிக்க வேண்டும், நல்லது கெட்டது என்றால் அவர்களின் தயவு வேண்டுமே.

என் நிலைமை எனக்கே பரிதாபமாக இருந்தது. ஜாமீன் பத்திரத்தின் நிபந்தனைகளைப் படித்துப் பார்த்த போது பயங்கரமாக இருந்தது. யார் கடன் வாங்குகிறார்களோ அவர்களுக்கு முழு உத்திரவாத்தையும் ஜாமீன் கையெழுத்துப் போடும் நான் கொடுப்பதாகவும் கடன் வாங்குபவர் கடனைச் செலுத்தாமல் போனால் என்னுடைய சொத்திலிருந்து பறிமுதல் செய்ய அனுமதிப்பதாகவும் பல்வேறு ஷரத்துகளைச் சேர்த்திருந்தார்கள். அதை படித்த மாத்திரத்திலே எனக்குப் பேதியாகத் தொடங்கி விட்டது. அலுவலக கழிவறையை நான்கு முறைக்கு மேல் போய் நாறடித்து வந்தேன். என் நிலைமையின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட நண்பர்கள், “பேசாம நீயும் கடனுக்கு ஒரு விண்ணப்பத்தைப் போட்டுடு. எனக்கு நீ ஜாமீன், உனக்கு நான் ஜாமீன்ங்றதால நான் கடன் கட்டலன்னா நீயும் கட்ட வாணாம், நீ கட்டலன்னா நானும் கட்ட வாணாம். அதுக்கும் இதுக்கும் சரியாப் போயிடும்.” என்றார்கள்.

அடப்பாவிகளா! உறுப்பினராக முடியாது என்று தெளிவாக இருந்த என்னை உறுப்பினராக்கி இப்படி ஜாமீன் கையெழுத்துப் போடும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டீர்களே என்று வருத்தமாக இருந்தது. வேலைக்கு வருவதற்கு முன் வேலை இல்லாமல் இருந்தது ஒரு பிரச்சனையாக இருந்தது. இப்போது வேலைக்கு வந்த போது இப்படி ஒரு பிரச்சனை முளைக்கிறதே என்று தாங்க முடியாத வேதனையாக இருந்தது. வேறு வழியில்லாமல் பத்து பேருக்கு மேல் ஜாமீன் கையெழுத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தேன்.

என்ன ஆனாலும் பரவாயில்லை, நான் மட்டும் கடனுக்கு விண்ணப்பிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருந்தேன். நான்கைந்து நாட்கள் இந்த நினைப்பில் கர்ண கொடூரமாகக் கனவுகள் வந்து அப்புறம் இதை எப்படியோ மறந்து போய் பிறகு நான்கைந்து மாதங்கள் கழித்து ஒரு சம்பவம் ஜாமீன் கையெழுத்தை ஞாபகப்படுத்துவதற்கென்றே நடந்ததோ, இயல்பாக நடந்ததோ? கடன் வாங்கிய அலுவலக சகா ஒருவன் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வேலையை விட்டு விட்டு, ஊரை விட்டு விட்டு ஓடிப் போனான். அவனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட இரண்டு பேர் கண்ணீர் வளையத்திற்குள் வந்தார்கள். எனக்கு மீண்டும் வயிற்றைக் கலக்க அலுவலக கழிவறை இந்த முறையும் ஒன்றுக்குப் பலமுறையாக ஏழெட்டு முறைக்கு மேல் நாறியது. அந்த இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

“என்ன இப்படிப் பண்ணி விட்டுடீங்களே?” என்று மறுநாள் வேலைக்கு போனதும் மேலாளர் அறைக்குப் போய் புலம்பினேன்.

“பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுன நாயை நெனைச்சு பயப்படுறீயா? இன்னும் ஒரு மாசத்துல அந்த நாயே திரும்பி வர்றானா இல்லியான்னு பாரு. அந்த நாய்க்கு எல்லாம் எவன் வேலை கொடுப்பான்ங்றே? அதெல்லாம் இங்க வாலை ஆட்டத்தான் லாயக்கு. ஒரு ஒண்ணுத்தையும் ஆட்ட முடியாது.” என்று அவன் ஆண்மையைப் பழிப்பது போல பழிப்புக் காட்டிப் பேசினார் மேலாளர்.

அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அன்று மாலை ஒரு மணி நேரம் அனுமதி கேட்டு விட்டு அவருக்குத் தெரியாமல் லிமிட்டெட் அலுவலகம் போய், “எப்படியாச்சும் என்னை உறுப்பினர்லேந்து விடுவித்துடுங்க!” என்று சின்னக் குழந்தையைப் போலக் கேவிக் கேவி அழுதேன்.

“பத்து பேருக்கு மேல ஜாமீன் கையெழுத்துப் போட்டுருக்காங்கய்யா. இப்போ வந்து உறுப்பினர்லேந்து விலக்கிக்கிறானாம்.” என்றார் அங்கிருந்த எழுத்தர் பக்கத்து இருக்கை இன்னொரு அலுவலரிடம். அவர் என்னவோ இதுவரை வாழ்க்கையில் கேட்காத நகைச்சுவையைக் கேட்டது போல விழுந்து விழுந்து சிரித்தார். நான் ரொம்ப கேவலமாகவா தாங்க முடியாத அகௌரவமா என்று புரியாத ஒரு நிலையில் இருந்தேன்.

பிறகு ஏதோ கருணை மனோபாவம் வந்தவர் போல, “பத்து பேரும் கடனைக் கட்டி முடிக்கட்டும்டா தம்பி. பெறவு விடுவிக்குறதெப் பத்தி யோசிக்கலாம். இந்த மாதிரியில்லாம் வேலை நடக்குற நேரத்துல அலுவலகத்துக்கு வந்து சின்னபுள்ள தனமா இம்சை கொடுக்கக் கூடாது. புரியுதா?” என்றார் அவர்.

என் மரமண்டைக்கு ஒன்றும் புரியாமல் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல இப்படியும் அப்படியுமாக ஆட்டினேன். ஆட்டி முடிந்ததும் சும்மா கெடந்த சங்கை ஊதாமல் கெடுக்குறீங்களேடா என்று நினைக்கத்தான் முடிந்தது. வேறென்ன சொல்வது என்று புரியாமல் அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டை விட்டு இறங்கினேன்.

வீட்டிற்கு வந்து இரவு முழுவதும் எத்தனை முறை என்று கணக்குத் தெரியாமல் பிரக்ஞை இழந்தவனைப் போலப் பேதியாகப் போய்க் கொண்டிருந்தேன். விடியற்காலை எழுந்ததும் மனம் தெளிவானது போல இருந்தது. வேலையை விட்டு ராஜினாமா செய்யும் முடிவில் கடகடவென்று ஏ4 காகிதத்தை எடுத்து எழுதினேன். சரியாக அலுவலகம் கிளம்பும் நேரம் பார்த்து ஊரிலிருந்து அப்பா பேசினார், “தங்கச்சுக்கு ஒரு நல்ல இடமா வந்திருக்குடா. முடிஞ்சிடும்ன்னு நெனைக்கிறேன். நகை நட்டுல்லாம் சேர்த்தது இருக்கு. பண்டம் பாத்திரம், கட்டிலு, பீரோ சாமாஞ் செட்டுகளோட கல்யாணத்தை நடத்துற செலவை மட்டும் நீ பாத்துக்கிட்டீன்னா பேசி முடிச்சிடலாம்.” என்றார் அப்பா.

“எல்லாம் எவ்வளவு வரும்ப்பா?” என்றேன் உதறல் எடுக்கும் குரலோடு நான்.

“சிக்கனமா முடிச்சாலும் நாலைஞ்சு லட்சத்துக்குக் கொறைச்சலா என்னத்தெ செஞ்சுட முடியும்ன்னு நெனைக்கிறே? மண்டப வாடகையே நாப்பதினாயிரம் ஐம்பதினாயிரம் கேக்குறான். அதுக்குக் கொறைஞ்சு சின்னதா மண்டபம் பிடிச்சா நம்ம சொந்தக்காரனே சூத்தால சிரிப்பான்ல. பெறவு ராத்திரிச் சாப்பாடு, காலைச் சாப்பாடு, மத்தியானச் சாப்பாடுல்லாம் இருக்குது. கொறைச்சலா ஐந்நூறு பத்திரிகையே வெச்சுக்கே. ஒரு பத்திரிகை பத்து ரூபாய் மேனிக்குக் கொறைஞ்சு அடிச்சா மான மருவாதி தங்கும்ன்னு நெனைக்கிறே? நாலைஞ்சு லட்சம்ங்றது அஞ்சு ஆறானாலும் சமாளிக்காம விட்றா ஜூட்ன்னு ஓடிடவா முடியுங்றே?” என்று எதிர்கேள்வி கேட்டார் அப்பா.

எனக்கு என்ன பேசுவதென்று புரியாமல் ஒரு கணம் அப்படியே மௌனியாகி அப்படியே ஞானியாகி நின்றேன்.

“கடனுக்கு விண்ணப்பம் பண்றதுன்னா இப்பயே பண்ணி வை. கடைசி நேரத்துல செரமமா போயிடப் போறது.” என்று அப்பாவே அடுத்த அடியெடுத்துக் கொடுத்தது போல பேசினார்.

என்னிடம் ஜாமீன் கையெழுத்து வாங்கி என்னைப் பேதியாக்கிய சகாக்களில் எந்த இருவரிடம் எனக்கான ஜாமீன் கையெழுத்தை வாங்குவது என்று கட்டம் கட்டி யோசிக்க ஆரம்பித்தது மனம்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...