19 Jul 2023

அந்த ஐந்து நிமிடங்கள்

அந்த ஐந்து நிமிடங்கள்

ஒரு செயலைச் செய்யும் போது முதல் ஐந்து நிமிடங்கள் முக்கியமானது. இந்தச் செயலைச் செய்ய வேண்டுமா? இது நம்மால் முடியுமா? ஆரம்பமே எரிச்சலாக இருக்கிறதே! அலுப்பாக தோன்றுகிறதே! என்று பலவிதமான எண்ணங்கள் ஏற்படுவது இந்த முதல் ஐந்து நிமிடத்தில்தான்.

எந்த எண்ணம் தோன்றினாலும் எப்படிப்பட்ட எதிர்மறை உணர்வுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொண்டு முதல் ஐந்து நிமிடத்தில் ஒரு செயலைச் செய்து கடந்து விட்டால் அந்தக் காரியம் தடைபடாமல் தொடர்ந்து விடும்.

இந்த முதல் ஐந்து நிமிடத்தில் தளர்ந்து விட்டாலோ, இடையில் எழுந்து விட்டாலோ காரியம் தடைபட்டு விடும். இதைத் துவக்குவதில் உள்ள பிரச்சனை (Starting trouble) எனலாம். இந்தத் துவக்கப் பிரச்சனை எல்லாம் முதல் ஐந்து நிமிடம் வரைதான் இருக்கும். அந்த ஐந்து நிமிடங்களைக் கடந்து விடும் போது தன்னை அறியாமல் மனம் காரியத்தில் ஒன்றி விடும். காரியத்தைத் தொடர்ந்து செய்யத் துவங்கி விடும்.

ஆனால் அந்த முதல் ஐந்து நிமிடம் வரை காரியத்தைச் செய்யாமலிருக்க எப்படியெல்லாம் தடை போட முடியுமோ அப்படியெல்லாம் மனமே தடைபோடும். காரியத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எப்படியெல்லாம் காரணங்களைத் தேடிக் கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் காரணங்களைத் தேடிக் கொள்ளும்.

இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வாகனம் தடையைக் கடந்து அதன் மேலேறிக் கடந்து விடும். இயங்க தொடங்க வேண்டிய நிலையில் இருக்கும் வாகனம் தடையைக் கடக்க முடியாமல் திணறி விடும். தடையை விலக்கினால்தான் கடக்க முடியும். அப்படி ஒரு தடைதான் இந்த முதல் ஐந்து நிமிடங்கள். இந்த முதல் ஐந்து நிமிடங்களை எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு கடந்து விட்டால் அந்தக் காரியத்தில் பிறகு என்னவிதமான தடைகள் வந்தாலும் உங்களால் கடந்து விட முடியும்.

ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்த உடன் இந்த முதல் ஐந்து நிமிடங்களில் மட்டும் கவனமாக இருந்து காரியத்தைத் தொடருங்கள். அதன் பிறகு நீங்கள் தொடர வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் காரியம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் மனமே இந்த முதல் ஐந்து நிமிடத்தில் எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் உருவாக்கியபடி தடையாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் பொருட்படுத்தாமல் வைராக்கியமாகக் காரியத்தைத் தொடருங்கள். நீங்கள் செய்ய நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.

முதல் ஐந்து நிமிடத்தில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களுக்குச் செவி சாய்த்தீர்கள் என்றால் காரியம் குட்டிச் சுவர்தான். முதல் ஐந்து நிமிடத்தில் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளுக்கு அடிபணிந்தீர்கள் என்றால் காரியம் கெட்டு விடும்.

எப்படியாவது மன உறுதியோடு முதல் ஐந்து நிமிடத்தில் விடாப்பிடியாகக் காரியத்தைச் செய்து விடுங்கள். தொடர்ந்து காரியத்தை ஆற்றுவதற்கு எதிராக இருந்த அத்தனை தடைகளும் இந்த ஐந்து நிமிடத்தில் தவிடு பொடியாகி விடும்.

அதிகாலையில் எழுந்திருப்பதை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிகாலையில் எழ வேண்டும் என்ற உறுதியோடு நீங்கள் எழுந்து முதல் ஐந்து நிமிடத்தைக் கடந்து விட்டால் உங்களால் அதிகாலையில் நீங்கள் நினைத்தபடியே எழுந்து விட முடியும்.

ஆனால் அந்த ஐந்து நிமிடத்தைக் கடப்பது அவ்வளவு சுலபமானதல்ல. அந்த முதல் ஐந்து நிமிடத்தில்தான் நீங்கள் அலாரத்தை நிறுத்துவீர்கள். ஓர் ஐந்து நிமிடம் படுத்து விட்டு எழுந்திருப்போமே என்று நினைப்பீர்கள். அந்த ஐந்து நிமிடத்தை அப்படியே விட்டு விட்டீர்கள் என்றால் நீங்கள் வழக்கம் போல் தாமதமாகத்தான் படுக்கையை விட்டு எழுவீர்கள். இரவில் அதிகாலையில் எழ வேண்டும் என்ற நினைத்த நீங்கள்தான் அதிகாலையில் எழும் போது அந்த முதல் ஐந்து நிமிடத்தில் இவ்வளவு சீக்கிரமாக எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்று கூட நினைப்பீர்கள். இப்படித்தான் முதல் ஐந்து நிமிட எண்ணங்களாலும் உணர்வுகளாலும் காரியங்கள் தடைபடுகின்றன.

நீங்கள் அவசியம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற காரியங்களும், அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்ற காரியங்கள் கூட இப்படித்தான் செய்து முடிக்கப்படாமல் போய் விடுகின்றன.

ஆக விசயம் இதுதான். காரியத்தடையை உண்டாக்க வாய்ப்புள்ள அந்த முதல் ஐந்து நிமிட நேரத்தைப் புரிந்து கொண்டு எவ்வித சுணக்கத்திற்கும் பின்னடைவுக்கும் இடம் கொடுக்காமல் நீங்கள் கடந்து விட்டால் எவ்வளவு கடினமான காரியத்தையும் நீங்கள் செய்து முடிக்க முடியும். முடியாது என்று கைவிடப்பட்ட காரியத்தையும் உங்களால் அப்போது முடிக்க முடியும். தேவை என்ன என்றால் ஒவ்வொரு காரியத்திலும் அந்த முதல் ஐந்து நிமிடத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது என்ற பழமொழியில் கூட இதற்கான சூட்சமம் இருக்கிறது. முதல் ஐந்து நிமிடத்தில் காரியத்தைச் செய்யத் துவங்கி உங்கள் மனதை நீங்கள் காரியத்திற்குள் வளைத்துக் கொண்டு விட்டால் உங்களால் எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாக முடித்து விட முடியும். அப்படியில்லாமல் காரியத்தில் இறங்காமல் நீங்கள் ஐம்பது நிமிடங்கள் யோசித்துக் கொண்டிருந்தாலும் அந்தக் காரியத்தை நீங்கள் முடித்திருக்க மாட்டீர்கள். ஆகவேத்தான் முதல் ஐந்து நிமிடத்தைக் கடப்பது முக்கியமாகிறது.

*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...