சமகால அறிவுரையாளர்கள்
பிதுரா
காமு
சுமோ
இவர்கள்தான் தற்போதைய மூன்று
முக்கிய எழுத்தாளர்கள். இவர்கள் மீது எப்படிப்பட்ட விமர்சனங்களையும் முன் வைக்கலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போல ஒரு பொதுத்தோற்றத்தை இவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும்
இவர்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்களே.
இவர்கள் நிறைய படிக்கிறார்கள்.
படித்தவற்றைப் பிதுக்கித் தள்ளுகிறார்கள், சதா பொழுதும் தின்று தின்று விட்டு சாணியைப்
போடும் மாடுகளைப் போல.
தொடர்ந்து ஓர் ஒழுங்கோடு
எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் அபத்தமான விடா முயற்சிகள் நிற்பதில்லை.
இவர்கள் ஒரு தோற்றத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு எழுதிக்
கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள். எழுத்தையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டு பிழைத்துக்
கொண்டிருப்பவர்கள் புத்திசாலிகள்.
எல்லாவற்றின் அடிப்படையும்
என்னவென்றால் உண்மைதான். உண்மையை விட்டு இவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே வெகு தூரம்
சென்று விட்டார்கள்.
என்னவோ எழுதுகிறார்கள். நன்றாகவும்
எழுதுவதாக ஒரு பிம்பத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பிறகு சமூகத்திற்கு அறிவுரை
சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள், என்னவோ சமூகம் அறிவு கெட்டுத் திரிவதைப் போல. இவர்கள்
யாருடைய அறிவுரையைக் கேட்டு நடந்து கொண்டார்கள்? சமூகம் மட்டும் இவர்களின் அறிவுரைகளை
எல்லாம் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
எல்லாம் தன்னியல்பாகப் பிறக்கின்றன.
ஆர்வங்கள் உண்டாகின்றன. எண்ணங்கள் தோன்றுகின்றன. உற்சாகங்கள் உருவாகின்றன. போக்குகள்
வசப்படுகின்றன. நான்கு பேர் தலையில் தூக்கி உட்கார வைத்துக் கொண்டால், கொண்டாட ஆரம்பித்து
விட்டால் அறிவுரை சொல்லத் தோன்றி விடுகிறது. சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்று துடித்துக்
கிளம்பி விடத் தோன்றுகிறது.
உபதேசம் சொல்வதைப் போல எழுதித்
தள்ள அலுப்பதே இல்லை. அடுத்தவர்களை அதிகாரம் செய்வது எப்படி அலுக்கும்?
ஒருமுறை நீங்கள் இவர்களோடு
பேசிப் பாருங்கள். பேச ஆரம்பித்தால் அவர்களே புதுப்புது தலைப்புகளை உருவாக்கிக் கொண்டு
பேசிக் கொண்டிருப்பார்கள். உங்களைப் பேசவே விட மாட்டர்கள். நீங்கள் எது சொன்னாலும்
அதற்கு ஒரு விளக்கம் அளித்துக் கொண்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு தகவல் குப்பைகள்
நிரம்பிய மண்டைக்குச் சொந்தக்காரர்களாக மாறி விட்டார்கள்.
அரை பக்கம், இரண்டு பக்கம்
கூட இருக்கலாம். நடந்ததைப் பற்றி மட்டும் எழுத வேண்டும். மகிழ்வதற்கும் வியத்தலுக்கும்
புனைவு கூட்டி எழுதுவதில் என்ன இருக்கிறது? புனைவுக்கென்றும் ஒரு தர்க்கம் இருக்கிறது,
ஓர் ஒழுங்கு இருக்கிறது. ஒரு நியாயம் இருக்கிறது. தர்மத்திற்குக் கட்டுப்பட்டு எழுத
வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அசல் எழுத்தின் முன் அபத்தமான
எழுத்து நிற்காது.
சும்மா வெறும் வார்த்தைகளின்
சேர்க்கை கொஞ்சம் கிளுகிளுப்பூட்டுகிறது. உணர்ச்சி வசப்பட வைக்கிறது. அதற்கே இவர்கள்
தங்களை மாபெரும் எழுத்தாளர்களாகக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எவ்வளவு செறிவாகவும் உன்னதமாகவும்
இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் யோசித்துத் தோய்ந்து போயிருக்க வேண்டும்.
மேம்போக்கான போக்கு எழுத்துக்கான களமாகாது.
நீங்கள் எழுத வேண்டியவற்றை
இன்னோர் எழுத்தில், இன்னொருவரின் அனுபவத்தில் வெளியே தேட வேண்டியதில்லை. உங்களைச் சுற்றியே
இருக்கிறது. உங்களிடமே இருக்கிறது.
ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக
எழுதக் கூடாது. அதில் ஓர் உண்மை இருக்க வேண்டும். ஜீவன் ததும்ப வேண்டும். எதுவுமில்லாமல்
அது என்ன எழுத்து?
அழகியலான எழுத்துக்குச் செய்ய
வேண்டியதெல்லாம் அவசரப்படாமல் பொறுமையாக இருப்பதுதான். உலகின் உயர்ந்த தேனுக்கு நீங்கள்
நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும்.
அறிவுரை சொல்லத் துவங்கி
நீங்கள் பாட்டுக்கு எழுதிக் குவிக்கலாம். தொழிற்புரட்சியைப் போல அது எழுத்துப் புரட்சியாகாது.
அறிவுரைப் புத்தகங்களும்
அதன் எழுத்துகளும் ரொம்ப ஆபத்தாக இருக்கின்றன. அவற்றின் அறிவுரைகள் நம்மைக் குழப்பி
விடுகின்றன. நம்மைப் பிறழ்வில் வாழ்வதைப் போலக் கேலி செய்கின்றன.
எதார்த்தத்தை எழுதுவது சாமானியமோ
சாதாரணமோ இல்லை. அதற்கு எதார்த்தமாக இருக்க வேண்டும். அறிவுரை என்ற பிறழ்வில் தொலைந்து
போய் விடக் கூடாது. எளிமையை எழுதுவது போன்ற கடினம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
அதற்கு எளிமையாக இருக்க வேண்டியது ஒரு நிர்பந்தம் ஆகிறது.
*****
No comments:
Post a Comment