எப்படி ஏற்படுகின்றன தொடர்வண்டி விபத்துகள்?
இந்தியாவில் அதிக தொழிலாளர்கள்
பணியாற்றும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது இந்திய தொடர்வண்டி நிறுவனம் (இந்திய
ரயில்வே). இதற்கு அடுத்த இடத்தில்தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்களின்
எண்ணிக்கை உள்ளது.
கடந்த சில ஆண்டுகளின் கணக்குப்படி
இந்திய தொடர்வண்டி நிறுவனத்தில் பனிரெண்டரை லட்சம் பேருக்கு மேல் பணியாற்றுகிறார்கள்.
காலிப்பணியிடங்களில் ஆட்கள் அமர்த்தப்பட்டால் பதினைந்தரை லட்சத்திற்கு மேல் தொழிலாளர்கள்
பணியாற்றுவார்கள். மூன்று லட்சம் காலிப் பணியிடங்கள் இந்திய தொடர்வண்டி நிறுவனத்தில்
இருக்கின்றன.
தினம் பதின்மூன்றாயிரம் தொடர்வண்டிகளை
இந்திய தொடர்வண்டி நிறுவனம் இயக்குகிறது. அறுபத்து ஆறாயிரம் கிலோ மீட்டருக்கு மேல்
இந்திய தண்டவாளங்கள் நீண்டு கிடக்கின்றன. தினம் ஒரு கோடியே முப்பது லட்சத்துக்கு மேல்
அதாவது ஆண்டுக்கு ஐநூறு கோடிக்கு மேல் மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு
முப்பத்தைந்து கோடி டன் சரக்குகளை இந்திய தொடர்வண்டி நிறுவனம் கையாள்கிறது.
உலகளவில் அதிகப் பணியாளர்களையும்
வாடிக்கையாளர்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களில் பத்து இடங்களுக்குள் இந்திய
தொடர்வண்டி நிறுவனமும் வருகிறது. இதனால் பயணியர்கள் மற்றும் சரக்குகளைக் கையாளுதல்,
நிர்வகித்தல், பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துதல் போன்றவை இந்திய தொடர்வண்டி
நிறுவனத்திற்குச் சவால் மிகுந்த ஒன்றாக இருக்கிறது.
நாளொன்றுக்கு ஒரு கோடியே
முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட பயணியர்கள், பதின்மூன்றாயிரம் தொடர்வண்டிகள் எனும் இந்த
எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதுகாப்பான விபத்தில்லாத
தொடர்வண்டி பயணங்களை அமைப்பதில் இந்திய தொடர்வண்டி நிறுவனம் பல்வேறு திட்டங்களையும்
அமைப்பு முறைகளையும் கொண்டுள்ளது. இருந்த போதிலும் அண்மையில் ஓடிசா மாநிலத்தின் பாலசோர்
பகுதியில் ஏற்பட்ட மூன்று தொடர்வண்டிகளின் மோதல் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும்
பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பலியானவர்களின் எண்ணிக்கை
அடிப்படையில் பார்த்தால் ஓடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட தொடர்வண்டி விபத்து நான்காவது
பெரிய விபத்தாகும்.
1981 இல் பீகாரில் சூறாவளியால்
ஏற்பட்ட தொடர்வண்டி விபத்தில் 800 பேருக்கு மேல் பலியாகினர். இந்தியாவில் ஏற்பட்ட மிக
மோசமான தொடர்வண்டி விபத்து இதுவே ஆகும். உலகளவில் இரண்டாவது மிக மோசமான தொடர்வண்டி
விபத்தும் இதுவேயாகும்.
1995 இல் உத்திரபிரதேசத்தின்
பைரோசாபாத்தில் இரண்டு தொடர்வண்டிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 350 பேர் வரை
மரணித்தனர். இது இரண்டாவது மிகப் பெரிய விபத்தாகும்.
1999 இல் மேற்கு வங்கத்தின்
கெய்சல் பகுதியில் இரண்டு தொடர்வண்டிகள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் 300 பேர்
வரை பலியாகினர்.
தற்போது கோரமண்டல் விரைவு
தொடர்வண்டியும் சரக்குத் தொடர்வண்டியும் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து நான்காவது
மிக மோசமான தொடர்வண்டி விபத்தாகும். இந்த விபத்தில் 275 பேர் வரை பலியாகியுள்ளனர்.
1175 பேர் காயடைமைந்துள்ளனர்.
கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டியானது
நின்று கொண்டிருந்த சரக்கு தொடர்வண்டியில் மோதியதில் தடம் புரண்ட பெட்டிகள் எதிரே வந்த
பெங்களூர் ஹவுரா விரைவுத் தொடர்வண்டியின் மேல் விழுந்ததில் இவ்விபத்தானது மூன்று ரயில்களின்
விபத்தாக மாறியது.
இந்த தொடர்வண்டி விபத்துக்கு
தானியங்கி சமிக்ஞையில் (ரயில்வே சிக்னல் இன்டர்லாக்கிங் சிஸ்டம்) ஏற்பட்ட கோளாறு முக்கிய
காரணமாகக் கூறப்படுகிறது. தானியங்கி சமிக்ஞைகளில் உள்ள குறைபாடுகளால் விபத்துகள் ஏற்படக்
கூடும் என்று முன் கூட்டியே ஓர் எச்சரிக்கை அறிக்கை இந்திய தொடர்வண்டி நிறுவனத்துக்கு
அளிக்கப்பட்டிருந்த போதும் இவ்விபத்து நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது.
தொடர்வண்டி விபத்துகள் ஏன்
ஏற்படுகின்றன? அதற்கு நான்கு வகையான முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பொதுவாகத் தொடர்வண்டி
விபத்துகள் நான்கு வகையில் ஏற்படுகின்றன.
1. தொடர்வண்டிகள் மொதிக்
கொள்வதால் ஏற்படுவன
2. தடம் புரள்வதால் ஏற்படுவன
3. இயற்கை பேரிடர்களால் ஏற்படுவன
4. கவனக்குறைவால் ஏற்படுவன
மோதல் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு
சமிக்ஞை குறைபாடுகள் (சிக்னல் கோளாறுகள்) முக்கிய காரணமாகும்.
தடம் புரள்வதற்குக் காரணம்
தண்டவாள பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகள் ஆகும்.
கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளுக்குக்
காரணம் அதிக நேரம் பணியாற்றும் பணிச் சூழ்நிலைகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியங்கள்
போன்றவை ஆகும்.
இந்திய தொடர்வண்டி ஓட்டுநர்கள்
(லோகோ பைலட்டுகள்) பத்து மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற
நிலைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. இது எட்டு மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும்
என்றும் அந்த அறிக்கை வேண்டுகோள் விடுக்கிறது.
இந்திய தொடர்வண்டிகளுக்கான
தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் தொகை குறைவாக இருப்பதாகவும்
நாடாளுமான்ற நிலைக்குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைவாக ஒதுக்கப்படும் அந்தத்
தொகையும் முழுமையாகச் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப் படுவதாக நிலைக்குழுவின் அறிக்கைகள்
வருத்தம் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் தண்டவாளப்
பாராமரிப்புகளை முறைப்படுத்துவதும், சமிக்ஞை கோளாறுகளைச் (சிக்னல் குறைபாடுகள்) சரி
செய்வதும், போதிய எண்ணிக்கையில் ஊழியர்களை நியமிப்பதும், ஊழியர்களின் பணி நேரத்தை எட்டு
மணி நேரத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்வதும், பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதும்
தொடர்வண்டி விபத்துகள் நேராமல் இருக்க செய்ய வேண்டிய அவசரமான மற்றும் அவசியமான போர்க்கால
நடவடிக்கைகள் ஆகும்.
*****
No comments:
Post a Comment