13 Jun 2023

வங்கிகள் ஏன் வாடிக்கையாளர்களை நடைபிணமாக்குகின்றன?

வங்கிகள் ஏன் வாடிக்கையாளர்களை நடைபிணமாக்குகின்றன?

வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது என்றால் பெரும் பாடாக இருக்கிறது. ஒரு கடன் கணக்கை மிக எளிதில் துவங்கி விட முடிகிறது.

பொதுத்துறை வங்கிகள் என்றால் சேமிப்பு கணக்கைத் துவங்குவதற்குள் ஆயுள் முடிந்து விடும்.

வங்கிகளுக்குச் சேமிப்பு கணக்குகளால் எந்த லாபமுமில்லை என்று தெரிந்து கொண்ட பின் பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குச் சேமிப்புக் கணக்கைத் துவக்கிக் கொடுப்பதில் அலட்சியத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டன.

சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கு வங்கிகள் வட்டித் தொகை கொடுக்க வேண்டும். கடன் கணக்குகள் என்றால் கணக்கில் இருக்கும் தொகைக்கு வாடிக்கையாளர்கள் வட்டித் தொகையைக் கட்ட வேண்டும். இதன் காரணமாகத்தான் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய அனுபவத்தில் சேமிப்புக் கணக்கைத் துவங்க நினைத்து மனம் நொந்து போயிருக்கிறேன். ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியாத அளவுக்கு நான் ஏன் அற்ப மானுட பிறப்பாகப் பிறந்திருக்கிறேன் என்று தாழ்வு மனப்பான்மையை அடைந்திருக்கிறேன்.

வங்கிக் கணக்கே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கவும் முடியாது. அப்படி ஒதுங்கி இருக்க நடைமுறைகளோ விதிமுறைகளோ உங்களை அனுமதிக்காது. வாழ்க்கையை ஓட்ட சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. சம்பாத்தியத்தை வாங்க வங்கிக் கணக்கு வேண்டியதாக இருக்கிறது. நீங்கள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இருநூறு சொச்சம் சம்பளத்தை வாங்க வேண்டும் என்றாலும் வங்கிக் கணக்கு இருந்தால்தான் வாங்க முடியும். எந்தச் செலவும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை ஓட்ட முடிகின்ற கடைகோடி கிராமத்தின் நிலைமையும் இதுதான்.

உங்களால் சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியாவிட்டால் உங்களை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து விரட்டி விட்டாற் போலும் ஆயிற்று, வங்கியில் ஒரு கடன் கணக்கைத் துவங்க வைத்தாற் போலும் ஆயிற்று என்பதற்காகக் கூட உங்களால் ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியாத அளவுக்கு முட்டுக்கட்டைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்க ஆயிரத்தெட்டு நடைமுறைத் தடைகளைக் காட்டும் வங்கிகள் எப்படி கடன் கணக்கை மட்டும் நொடியில் துவங்கிக் கடன் கொடுக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வங்கிகள் இதை மிக சாமர்த்தியமாகச் செய்கின்றன.

நான் கிட்டதட்ட இரண்டரை மாதங்களாக அலைந்து பார்த்து விட்டு சேமிப்புக் கணக்கைத் துவங்கும் முயற்சியைக் கைவிட்டு இருக்கிறேன். இதைக் கேட்ட பிறகு சேமிப்புக் கணக்கு துவங்குவது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான ஒன்றில்லை என்று நீங்கள் சொல்லலாம். அப்படிச் சொன்னால் நீங்கள் அந்த வங்கியின் ஒரு பிரத்யேகமான வாடிக்கையாளராக இருக்க வேண்டும்.

பிரத்யேகமான வாடிக்கையாளர் ஒருவருக்கு எத்தனை சேமிப்புக் கணக்குகளை வேண்டுமானாலும் துவங்கிக் கொடுக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. நான் ஒரு சாதாரண வாடிக்கையாளர் மற்றும் இந்த தேசத்தின் சாதாரண குடிமகன். இந்த இரண்டும் எனக்கு நேர்ந்த சாபக்கேடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டும்தான் என்னை ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்குவதற்குள் என்னைப் பாடாய்ப் படுத்துகின்றன. என்னுடைய செருப்பும் தேய்ந்து பாதமும் தேய்ந்து போகும் வரை அலைய விடுகின்றன.

நான் செல்வாக்கு மிகுந்த குடிமகனாக இருந்தால் என்னால் சேமிப்புக் கணக்கை வங்கியில் எளிதாகத் துவங்கி விட முடியும். ஆனால் துரதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கிறதல்லவா. அது என்னைப் பிரத்யேகமான வாடிக்கையாளராகவும் மாற்றவில்லை, செல்வாக்கான குடிமகனாகவும் உருவாக விடவில்லை.

ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியாததற்கு வங்கிகள் வெவ்வேறான காரணங்களை ஒவ்வொரு முறையும் கண்டுபிடித்துச் சொல்லும் போது வங்கியின் குளிர்பதன வசதி என்னைக் கொதிப்படைய வைக்கிறது.

என்னை நீண்ட நேரம் காக்க வைத்து அலட்சியமான ஒரு பதிலைத் தரும் போது வங்கிகளின் சொகுசான இருக்கைகள் என்னை ரணப்படுத்தி வேதனைப்படுத்துகின்றன.

ஒரு சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியாத வேதனையான கணங்களில் நான் இந்தத் தேசத்தின் அகதியா என்றுதான் நினைத்துப் பார்க்கிறேன். வங்கியாளர்கள் அனைவரும் இந்தத் தேசத்தின் சர்வாதிகாரிகளாக மாறி விட்டார்களா என்றும் யோசித்துப் பார்க்கிறேன். நிலைமை அப்படியும் இருக்கலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் ஒரு சாதாரண வாடிக்கையாளரையும் ஒரு சாதாரண குடிமகனையும் நடத்தும் விதங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்தாலும் கட்டுபடியாகாதவை.

வங்கிகள் ஏன் இப்படி சாதாரண குடிமகனை நடைபிணமாக்குகின்றன? அதில் வங்கிகளுக்கு என்ன குரூர சந்தோசம்? இந்த நடைமுறைகளும் விதிமுறைகளும் ஏன் ஒவ்வொருவரிடமும் ஒரு சேமிப்புக் கணக்கை எதிர்பார்க்க வேண்டும்?

ஒரு வங்கிக் கணக்கைத் துவங்குவதால் பல பலன்கள் உண்டு எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒரு வங்கிக் கணக்கைத் துவங்குவதற்குள் ஒரு மனிதன் பலனற்றுப் போய் விடக் கூடாது அல்லவா.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...