11 Jun 2023

இழப்பதில் கில்லாடிகள்

இழப்பதில் கில்லாடிகள்

சீட்டு கட்டிப் பணத்தை இழப்பதில் கிராமத்து ஆட்கள்தான் கில்லாடி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பணத்தை இழப்பதில் கிராமத்து ஆட்களென்ன, நகரத்து ஆட்களென்ன? எங்கிருந்தாலும் மக்கள் பாகுபாடின்றி எதிலாவது பணத்தைக் கட்டி இழப்பதில் கில்லாடிகள்தான் என்பதைச் சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன.

நகரத்தில் இருக்கும் மக்களுக்குக் கிராமத்து மக்களை விட விழிப்புணர்வு அதிகம் இருக்கும் என்பது ஒரு பொது புத்தி. அதுவும் சென்னை மக்களிடம் அந்த விழிப்புணர்வு அதிகம் இருக்கும் என்ற பொது புத்தி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் உண்டு.

இந்தப் பொது புத்தியை உடைப்பது போல அவ்வபோது சம்பவங்கள் நடக்கின்றன. இது எதார்த்தமாகத்தான் நடக்கிறதா? வேண்டுமென்றே நடக்கிறதே? பருவம் தப்பாது பொழியும் மழையைப் போல இப்படி நடந்துதான் தீர வேண்டும் என்று விதியிருக்கிறதா? மாதா மாதம் மும்மாரி பொழிவைதப் போல இப்படிச் சம்பவங்கள், சம்பவங்கள், சம்பவங்கள்,…

ஐ.எப்.எஸ்., ஆரூத்ரா என்று மக்கள் பணத்தைக் கட்டி ஏமாந்தது போதாது என்று அடுத்த சம்பவம் வந்திருக்கிறது. இன்னும் வந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. ஏன் எங்களைப் பற்றிய பொது புத்தி உடையக் கூடாதா என்று நினைக்கிறார்கள் போல நகரத்து மக்கள். அதுவும் சென்னை மாநகரத்து மக்கள்.

வடபழனியில் ‘பிராவிடென்ட் டிரேடிங்’ என்ற நிறுவனம் கானா நாட்டில் தங்கச் சுரங்கத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் இருபது சதவீத பணம் வட்டியாகத் தரப்படும் என்கிறது. அதாவது ஒருலட்சம் கட்டினால் மாதா மாதம் இருபதாயிரம் கிடைக்கும் என்பது அந்த நிறுவனத்தின் அறிவிப்பு.ஐந்து மாதங்களில் போட்ட பணம் கிடைத்து விட்டால், அதன் பிறகு வரப் போவதெல்லாம் லாபம் என்பது மக்கள் போட்ட கணக்கு. பணத்தைத் திரட்டிய நிறுவனத்தின் கணக்கோ வேறு.

இரண்டாயிரம் கோடி வரை அமைதி காத்து மக்களிடமிருந்து திரட்டிய பிறகு கம்பியை நீட்டி விட்டார்கள். பணத்தைக் கட்டிய மக்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

லட்ச ரூபாய் பணத்தைக் கட்டுபவர்கள் சாதாரண ஆட்களாகவா இருப்பார்கள்? அவர்கள் நிச்சயம் அன்றாடங்காய்ச்சிகளாவோ, கூலித்தொழிலாளிகளாகவோ இருக்க மாட்டார்கள். பணம் குறித்து ஓரளவு விசயம் அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

விவரம் இருந்தும், எதார்த்தம் தெரிந்ததும் என்ன? லட்சத்துக்கு மாதா மாதம் இருபதினாயிரம் வருகிறது என்றால் கசக்கிறதா என்ன? அதுவும் வேறெந்த வேலையும் செய்யாமல் போட்ட முதலுக்கு மாதா மாதம் இருபதினாயிரம் என்றால் யார்தான் சும்மா இருக்க முடியுமா?

பணத்தைக் கட்டி ஏமாந்தவர்கள் கனத்த மனதோடு நின்று கொண்டிருக்கிறார்கள். வயிறு எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏன் நம் மக்களுக்கு வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களின் எளிமையான முதலீடுகள் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்கிறது?

அதிகம், இன்னும் அதிகம் என்பதில் மக்களுக்கு தங்களையறியாமல் ஓர் ஆசை இருக்கத்தான் செய்கிறது. அது எப்படி வந்தால் என்ன? அதில் போய் விழ வேண்டும் என்ற கண்மூடித்தனமான ஆசை மக்களின் மனதைப் போட்டு உலுக்குகிறது. அந்த உலுக்கலில் ஆடிப் போய் நிற்பவர்கள் பல பேர். அந்த உலுக்கலுக்கு அசைந்து கொடுக்காமல் இருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பதுதான் எப்போதும் உங்கள் பணத்துக்கும் இதயத்துக்கும் பாதுகாப்பானது.

பணத்தை இழக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது பணம் என்று பலர் நினைக்கிறார்கள். இதயம்தான் முதலில் பாதிக்கப்படுகிறது. நிறைய மாரடைப்புகள் அது போன்ற நேரங்களில்தானே ஏற்படுகின்றன.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...