7 Jun 2023

வீடுபேறு என்றால் சும்மாவா

வீடுபேறு என்றால் சும்மாவா

வீட்டுக்கு அருகில் இருக்கும்

வேப்பமரத்தடியில்

வெளியின் கானலைக் குறைக்கும்

கொடைக்கானல் இருக்கிறது

வீட்டுக்குள்ளிருக்கும்

ஷவர் பாத்தில் குற்றாலம் இருக்கிறது

வீட்டுக்குச் சற்றுத் தொலைவில்

பழனி அண்ணாச்சிக் கடையில்

பஞ்சாமிர்தம் கிடைக்கிறது

கொஞ்சம் தள்ளிச் சென்றால்

ஏழுமலையான் ஸ்வீட்சில்

வண்ணத்தாளில் சுற்றிய லட்டு இருக்கிறது

அஞ்சலகத்தில் பணம் கட்டி விட்டால்

வீடு தேடி வருகிறது காசித் தீர்த்தம்

ஜி-பேயில் தட்டி விட்டால்

பாபா டாலரும் லட்சுமி எந்திரமும்

டெல்கிவெரி ஆகி விடுகின்றன

என்னை ஏன் வெளியில் அழைக்கிறாய்

வீடு போதுமெனக்கு

வீட்டைத் தேடி வந்து விடும்

வெளிகள் எல்லாம்

வீடுபேறு என்றால் சும்மாவா சொல்

*****

எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்

வீட்டுவரி என்கிறார்கள்

குடிநீர் வரி என்கிறார்கள்

மின் கட்டணம் என்கிறார்கள்

வண்ணம் வெளுத்தால்

பெய்ண்ட் வைக்க வேண்டும் என்கிறார்கள்

மோட்டர் பழுது என்றால்

மெக்கானிக்கைக் கூப்பிடு என்கிறார்கள்

குழாய்கள் அழுது வடிந்தால்

பிளம்பரைத் தேட வேண்டும் என்கிறார்கள்

செப்டிக் டேங்க் நிரம்பினால்

கிளீனர் வர வேண்டும் என்கிறார்கள்

எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்

ஹவுஸ் ஓனரிடம் கொடுத்து விட்டால்

அவர் பார்த்துக் கொள்வார்

வாடகை வீட்டில் இருந்து கொண்டால்

உடலே ஒரு வாடகை வீடுதான் போ

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...