5 Jun 2023

மாஸ்டர் ஒரு கப் ஆசுவாசம்

விஷேச மனநிலையாளர்கள்

ஒரு விஷேசமான மனநிலை வேண்டும் என்று

வந்தவரிடம்

பேசாமல் போய் படுத்துத் தூங்குங்கள் என்றேன்

ஆம் ஆம் ஆம்

அதுதான் வேண்டும் என்று

அடம் பிடித்து அழத் தொடங்க ஆரம்பித்து விட்டார் அவர்

எனக்கொரு விஷேசமான மனநிலை கிடைத்தது போல இருக்க

அன்றிரவு முழுவதும் உறங்க முடியாமல் அழுதேன்

மறுநாள் விடியலில்

அந்த மனிதரிடம் சென்று மன்றாடினேன்

என் விஷேசமான மனநிலையைக் கொடுத்து விடுங்கள் என்று

அன்றிரவு நிம்மதியாக உறங்கியதாகச் சொன்னவர்

கொடுக்க இயலாமைக்கு வருத்தம் தெரிவிப்பதாகச் சொன்னார்

வருத்தங்களை நன்றியோடு பெற்றுக் கொண்டு

உறக்கம் வராத சாலைகளில்

இரவு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நான்

எனக்கொரு விஷேசமான மனநிலை வேண்டும் என்று

சத்தமிட்டுக் கொண்டே செல்கிறேன்

சாலையின் இரு மருங்கிலும் உறங்கிக் கொண்டிருக்கும்

யாருக்கும் என் குரல் கேட்பதாகத் தெரியவில்லை

குரல் கேட்டு விழித்தெழும் யாரோ ஒருவர்தான்

எனக்கான உறக்கத்தைத் தர வேண்டும்

விழிப்பதற்கு தயாராக யாரும் இல்லாத உலகில்

*****

கால பேதம்

கோழிகளுக்கு அதன் குஞ்சுகள்

எவ்வளவு பிடித்திருக்கிறது

அதுவே கொத்தி விரட்டி விடும் காலம் வரும் வரை

*****

மாஸ்டர் ஒரு கப் ஆசுவாசம்

மாஸ்டர் ஒரு டீ

எனச் சொல்லும் போது வரும் ஆசுவாசம்

அரை பிளேட் மட்டன் பிரியாணி

ஒரு சிக்கன் கிரேவி எனச் சொல்லும் போது

எங்கே தொலைந்து போகுமோ

ஆகவே முடிவில்

பிரியாணி ஆகி விட்ட ஆட்டுக்கும்

கிரேவியாகி விட்ட கோழிக்கும்

ஆசுவாசம் இழந்து விட்ட எனக்கும்

மாஸ்டர் ஒரு கப் டீ

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...