12 May 2023

இளையராஜா சிற்றுந்தில் ஏறிக் கொண்டார்!

இளையராஜா சிற்றுந்தில் ஏறிக் கொண்டார்!

கிராமத்துச் சிற்றுந்துகள் பண்டோரா உலகத்தைப் போல. ஒவ்வொரு முறை ஏறும் போது ஒரு புதிய உலகத்தை விரித்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றது.

இந்த உலகின் அதி அற்புதமான பாடல்கள் பலவும் சிற்றுந்துகளில்தான் குடி கொண்டிருக்கின்றன. ‘தூதுவளையை அரைச்சு தொண்டையிலத்தான் நனைச்சு மாமன்கிட்டே பேசப் போறேன்’ என்ற பாட்டை அத்தனைக் கிறக்கத்தோடும் இந்தச் சிற்றுந்தால்தான் பாடிக் காட்ட முடிகிறது. அதே பாடலை ஆற அமர வேறு எங்கு ரசித்தாலும் அந்தக் கிறக்கம் சிற்றுந்தில்தான் வாய்க்கிறது. இளையராஜாவும் சந்திரபோசும் சங்கர் கணேசும் சிற்பியும் இசையமைத்து அவர்களுக்கே மறந்து போன பல பாடல்களை இந்தச் சிற்றுந்துகள்தான் இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்து அடிக்கடி பாடிக் கொண்டிருக்கின்றன.

ஒன்பது அவதாரங்களை எடுத்த கடவுள் பத்தாவது அவதாரத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது அல்லவா! இந்தச் சிற்றுந்துகள் கடவுள் அவதாரத்தினும் மிஞ்சியவை. ஒரு நாளுக்குள் எத்தனை அவதாரங்கள் எடுக்கின்றன.

இந்தச் சிற்றுந்துப் போகும் சாலையில் ஒரு வீட்டில் கல்யாணம் என்றால் இது ஒரு சரக்குந்து போலாகி அந்த வீட்டின் கல்யாணத் தேவைக்கான அத்தனை சரக்குகளையும் இதுதான் ஏற்றி வருகிறது. கல்யாணத்திற்கான மனிதர்களை வேனைப் போலச் சுமந்து வருகிறது. வந்தவர்களுக்கு உடல் உபாதைகள் என்றால் அவசர கால வாகனம் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறது.

காலையும் மாலையும் பயணித்துக் கொண்டிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதலை மூட்டி விட்டுக் காதல் வாகனமாகவும் ஆகி விடுகிறது.

எவ்வளவு கூட்டம், நெரிசல், கசகசப்பு இருந்தாலும் இதைப் போன்ற ரம்மியமான வாகனம் வேறெதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இதை ஓட்டும் ஓட்டுநரைப் போல, நடத்துநரைப் போல நாயகர்களை எந்தத் திரைப்படத்திலும் பார்த்து விட முடியாது.

எவ்வளவு குண்டும் குழியுமான சாலைகள். அத்தனையிலும் எப்படித்தான் இந்த ஓட்டுநர் ஒரு பள்ளத்தாக்கில் வண்டியை இறக்கி மலை மேல் ஏற்றுவதைப் போல ஏற்றுகிறாரோ?

தார்ச் சாலைகளையே பார்த்த வாகனங்களின் டயர்களுக்கு மண்சாலையும் நாட்டில் இருக்கின்றன என்று காட்டியவை இந்தச் சிற்றுந்துகள்தான். புழுதி பறக்க இந்த வாகனங்கள் செல்லாத கிராமத்துப் பாதைகள் எங்காவது இருக்கிறதா?

மனிதர்கள் புகாத, பல மனிதர்கள் பார்த்திராத எத்தனையோ ஏழு கடல், ஏழு மலைகளுக்கு எல்லாம் இந்தச் சிற்றுந்து சென்று வந்திருக்கிறது. இன்னும் சென்று வந்து கொண்டிருக்கிறது.

இந்தநடத்துநர்தான் சாமனியப்பட்டவரா? சர்க்கஸில் அவ்வளவு சாகசங்களைப் பார்த்திருக்க முடியாது. அவ்வளவு சாகசங்களை அநாயசமாகச் செய்வார். காற்றுக் கூட புகுந்து புறப்பட முடியாத நெரிசலில் இவர் இந்தப் படிகட்டுக்கும் அந்தப் படிகட்டுக்கும் மாறி மாறிப் போய் வருவது சத்தியமாக மேஜிக்தான். டிக்கெட் டிக்கெட் என்று ஏறிய அத்தனை மனிதர்களின் கணக்குப் பிசகாமல் சரியாக டிக்கெட் போட்டு விட்டு படியில தொங்குற நாற்பதாவது ஆள் இன்னும் டிக்கெட் எடுக்கலையே என்று போடும் போடில் இந்த மனிதருக்கு இப்படி ஒரு பூதக்கண் எப்படித்தான் வாய்த்ததோ என ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

ஓட்டுநருக்காகவது ஒரு இருக்கை இருக்கிறது. அதில் உட்கார்ந்து கொண்டு ஓட்டிக் கொண்டு போகிறார். இந்த மனிதர் நடத்துநர் இருக்கிறாரே, எப்படித்தான் உட்காராமலும் நிற்க சரியாக இடம் இல்லாமலும் வண்டி ஏறியதைத் தொடர்ந்து இறங்கும் வரை அப்படியே நின்று கொண்டிருக்கிறாரோ?

வழியில் ஒரு பஞ்சர், பழுது என்றால் இந்த ஓட்நரும் நடத்துநரும் அதைச் சரிசெய்வதில் காட்டும் வேகம் இருக்கிறதே. அந்த நேரத்திற்குப் பொருத்தமாக ஓட விடும் பாட்டு இருக்கிறதே. அது நிற்கும் இடமும் அவ்வளவு அலாதியாக இருக்கும். சுற்றிலும் பச்சைப் பசலேன வயல் வெளியாக இருக்கும். ஒரு சுடுகாடாகஇருந்தாலும் அங்கே அமைதியாக நின்றிருக்கும் ஆலமரம் இருக்கும். ஒரு கருவக்காடாக இருந்தாலும் பத்துப் பதினைந்து குருவிகள் கத்திக் கொண்டிருக்கும். ஆடோ, மாடோ மேய்ந்து கொண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும்.

பத்து நிமிடமோ, பன்னிரண்டு நிமிடமோ ஆனால் அதிகம். அதற்குள் பழுதைச் சரி செய்து கீழே இறங்கி காற்று வாங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தை நொடிக்குள் மேல் ஏற்றிப் புகையைக் கக்கியபடி வண்டியைக் கிளப்பும் வேகத்திற்கு பத்து மின்னல்கள் வந்து போய் விடும்.

நடுராத்திரியில் குடித்து விட்டு ஆங்காங்கே கிடக்கும் மனிதர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு வீடுகளில் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போகும் அளவுக்கு இந்தப் பேருந்துகள் கிராமத்து வீடுகளோடு சொந்ததும் பந்தமும் கொண்டவை. “எப்பாடி இப்படி ஏத்திட்டு வந்து போட்டுட்டுப் போறீயே, இந்தா பத்து ரூவாயைப் பிடி!”ன்னாலும் “அது கிடக்கட்டும் விடும்மா. வண்டி வந்த பாதையில குடிச்சிட்டுக் கிடந்தாரே. வண்டிப் போகாத பாதையில குடிச்சிட்டுக் கிடக்காதே மனுஷான்னு நாளைக்குப் புத்திச் சொல்லி வை.”ன்னு ஒரு சிரிப்பு சிரத்து விட்டு ஓட்டுநரும் நடத்துநரும் போகும் அழகு இருக்கிறதே.

சாலைகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உண்டு என்பதை இந்தச் சிற்றுந்துகள்தான் ஏற்றுக் கொண்டுள்ளன. எத்தனை ஆடுகள், மாடுகள் போகும் வழியில் குறுக்கே படுத்திருந்தாலும், ஹாரனை அடித்துப்பார்த்து விட்டு நகரவில்லை என்றாலும் கோபப்படாமல் இறங்கிப் போய் அடித்து விரட்டி விட்டு அப்புறம் வண்டியை எடுக்கும் பக்குவம் சிற்றுந்துகளுக்கே உரியது.

“டேய் சவத்த மூதி! இன்னும் எத்தனை எடத்துலடா வீட்டுக்கு வீடு நிப்பாட்டி சனங்கள ஏத்துவ?”ன்னு ஒரு பெரிசு சத்தம் போடும் போது பொறுமையை இழக்காமல், “இருடி ஒம் வீடு வர்றப்போ நிறுத்தாமா முறையா ஸ்டாப்பிங்ல கொண்டு போய் நிறுத்துறேனா இல்லையான்னு பாரு?”என்று அதை நடந்துநர் சமாளிக்கும் லாவகம் இருக்கிறதே.

“என்ன தலைவரே! போன காரியம் ஆயிடுச்சா? அக்காவுக்குக் கல்யாணம் ஆகணும்ன்னு சொன்னீங்களே. ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு? கல்யாணம் எங்க இருந்தாலும் பத்திரிகை கொடுக்காம இருந்துடாதீங்க.” என்று ஓட்டுநரும் நடத்துநரும் குடும்பத்தில் ஒருவராக மாறி விடும் அதிசயத்தையும் சிற்றுந்துகள் பண்ணி விடும்.

ஓசூருக்கும் திருப்பூருக்கும் போய் விட்ட மக்களைப் பொங்கல், தீபாவளி என்றால் அவர்கள் வருவது தெரிந்து காத்திருந்து அழைத்து வர வேண்டும் என்ற ஞாபகமும் இந்தச் சிற்றுந்துகளுக்கு இருக்கும்.

“என்னடா இவ்வளவு நேரமா இப்படிப் போட்டு வெச்சிருக்கீங்களே. சீக்கிரமா வண்டிய எடுங்கடா.” என்று ஊர்க்கிழவி போடும் அதட்டலுக்குக் கொஞ்சம் கூட அசங்காமல் “வடக்குத் தெரு மாயன் மவன் சென்னையிலேந்து வந்து கிட்டு இருக்கான்னாம். போன் பண்ணிச் சொல்லிருக்கான். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடும் மெட்ராஸ் பஸ். அதுவரைக்கும் சித்தெ வெளியிலி எறங்கி வெத்தலை பாக்கைப் போட்டு நாலு புளிச்சைத் துப்பிக்கிட்டு இரு கெழவி. வெத்தலை பாக்கு இருக்கா வாங்கித் தரவா?” என்று சொல்லிக் காத்திருக்கும் சிற்றுந்துகள் அவ்வளவு அந்நியோன்மானவை.

சில காதல்களுக்குக் காரணமாகி கண்ணாடி உடைந்து, கலவரங்களில் அடிபட்டு தெருவுக்குள் வந்துப் போகக் கூடாது என்று ஊர்கட்டுமானத்தில் டரியல் ஆகிப் போனாலும் ஒரு சில வருடங்களுக்காக பேரன் பேத்திகளைச் சுமந்து வந்து ஆரத்தி எடுக்க வைத்து எப்படியோ மீண்டும் தெருவுக்குள் நுழைந்துவிடும்.

வண்டியை அடித்து நொறுக்கியவர்கள் அப்போது கொஞ்சம் கூனிக் குறுகித்தான் போவார்கள். “தப்பா நெனைச்சுக்காதேடா மாப்ளே. ஏதோ வேகத்துல பண்ணிட்டேன்டா.” என்று சொல்வதை, “இந்த அழுகாச்சிய வெச்சி எங்களுக்குப் போட வேண்டிய கறிச்சோத்தை மறந்துடாதே யப்பே. போயி விருந்துக்கு ஏற்பாட்டே பண்ணுவியா? என்னவோ சிவாஜி கணக்கா ஆக்ட் விட்டுக்கிட்டு கிடக்கே?” என்று சொல்லியபடி புழுதியையும் புகையையும் கக்கியபடி “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல ஆகுமா?” என்று பாட்டை காது கிழியும் டெசிபலுக்கு கலந்து விட்ட படி வழக்கமாகச் செல்ல ஆரம்பித்து விடும் இந்தச் சிற்றுந்து.

“பாட்டை இப்படிப் போட்டு விட்டு இவனுங்க பண்ணுற அநியாயத்தெ கேக்க ஒருத்தன் பொறந்து வர மாட்டானா?” என்று சொல்லும் ஊர் நாட்டாமையும் சில நேரங்களில் புல்லட்டை மறந்துவிட்டு இந்தப்  பேருந்தில்தான் ஏறிப் போகிறார். “ஆயிரம்தான் சொல்லு. இதுல கேட்டாத்தாம்டா பாட்டு பாட்டா இருக்கு.” என்று அப்போது ஒரு வசனம் வேறு பேசுகிறார்.

இந்தச் சிற்றுந்து பற்றி இப்படி ஒரு கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தமிழ்நாட்டில் இசைஞானி என்றிருந்த இளையராஜா என்ற இசையமைப்பாளர் தான் இசையமைத்த பாடல்கள் மறந்து போன போது ஒரு சிற்றுந்தில் ஏறிக் கொண்டார்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...