11 May 2023

சிறிது சிறிதாகத் தாண்டு!

சிறிது சிறிதாகத் தாண்டு!

ரொம்ப பெரிசு பெரிசா தாண்டப்படாதுடா மவனே என்பார் சோமு சித்தப்பா. அடிக்கடி அவர் உதிர்க்கும் வாசகம் இது. அகலக்கால் வெச்சா ஆபத்துதான்டா மவனே என்பார்.

யார் கேட்டாலும் இந்த வாசகத்தைத்தான் சொல்வர். கேட்காவிட்டாலும் அவராகவே இதைச் சொல்வார். இந்த வாசகத்தைச் சொல்லாமல் அவரால் இருக்க முடியாது. பெரிய அளவில் வியாபாரத்தைத் தொடங்கி நட்டப்பட்ட அனுபவம் அவருக்கு. அந்த அனுபவத்துக்குப் பிறகு இப்போது வரை பெட்டிக்கடை வியாபாரமே போதுமென்று நிறுத்தி விட்டார்.

காலையில் பத்து மணிக்கு மேல் கடையைத் திறப்பார். இரண்டு மணிக்குக் கடையை அடைத்து விட்டுச் சாப்பிட்டு விட்டுப் படுத்தார் என்றால் எழும்புவதற்குச் சாயுங்காலம் நான்கு நான்கரை ஆகி விடும். ஒரு டீயைக் குடித்து விட்டு தெருவில் போவோர் வருவோரிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆறு மணிக்குத் திரும்பவும் பெட்டிக்கடையைத் திறந்தார் என்றால் வீடு திரும்ப பத்து மணியாகி விடும்.

இரவு சாப்பாட்டை முடித்து விட்டு வீடு திரும்பினால் சாப்பிட்டு விட்டு கதை அளந்து விட்டு படுப்பதற்கு பனிரெண்டு ஆகி விடும். காலையில் ஏழு மணிக்கு முன்பு எழுந்திருக்க மாட்டார். இப்படியே அவர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

கடைவீதியில் எவ்வளவோ கடைகள் வந்து விட்டன. சோமு சித்தப்பாவுக்கு என்று தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடையை மாற்ற மாட்டார்கள். தவிரவும் சோமு சித்தப்பா கடைக்கென்று ராசி இருப்பதாகச் சொல்வார்கள். மங்கல காரியமாக வெளியே செல்பவர்களுக்கு சோமு சித்தப்பா கடையில் வெற்றி, பாக்கு, மஞ்சள், குங்குமம் வாங்கினால்தான் திருப்தியாக இருக்கும். சாயுங்காலம் வேலை முடித்து திரும்புபவர்களுக்கு  அவர் கடையில் பலகாரங்களும் பிஸ்கெட்டுகளும் வாங்கினால்தான் திருப்தி. பீடி, சிகரெட்டுக்கு என்று அவர் கடையை விட்டு வேறு கடைக்கு மாறாத வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

ஏண்டா மவனே கடைப்பக்கம் வரது, கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம், அப்படியே யேவாரம் கத்துக்கிடலாம் என்று பார்க்கும் இளவெட்டுகளை எல்லாம் கூப்பிட்டுப் பார்ப்பார். என்ன பெரிய அம்பானி யேவாரமா பாக்குறே சித்தப்பா என்றால் ஒரு சிரிப்பு சிரிப்பார். அடேய் அவனுங்க யேவாரம் கூட படுத்துடும்டா, நம்ம யேவாரம் எப்பவும் படுக்காதுடா மவனே என்பார்.

ரொம்ப பெரிசா தாண்டப்படாதுடா மவனே, சிறிசு சிறுசாத்தான் தாண்டணும். அதுவும் சிறிசாத்தான் தாண்டணுங்றதுல உறுதியா இருந்துட்டா தடுமாறி விழுறதுக்கு வாய்ப்பே இல்லடா என்று வழக்கமாக சொல்வது திரும்ப அவர் வாயிலிருந்து வந்து விழும்.

இப்படியே சொல்லிட்டிரு சித்தப்பா, உனக்கு பின்னாடி கடை ஆரம்பிச்சவனெல்லாம் பெட்டிக்கரை, பெரியக்கடை, சூப்பர் மார்கெட்டுன்னு போயிட்டான், நீ இன்னும் பெட்டிக்கடையிலே உக்காந்திக்கிட்டுக் கிட என்று எகத்தாளமும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவரிடமிருந்து வந்து சேரும்.

அதெல்லாம் ஒரு விசயமாடா, எங் கடை எப்பவும் இப்படியே இருக்கும்டா. முதலெப் போட்டு முதலே எடுத்தாப் போதும். பைசா காசு கடன் கிடையாது தெரியுமா? கடனுக்கு யேவாரமும் கிடையாது. என்ன பெரிய கடையை வெச்சுக் கிழிச்சிட்டானுங்க. இந்த ஊர்ல எம்மாம் பெரிய கடைன்னாலும் வெத்தலையும் பாக்கும் எங் கடையில இருந்துதான் போவுது. சீவலும் மொத்த யேவாரம் நம்மத்தான். அத்தோடு பெட்டிக்கடை யேவாரம். எங்கிட்டெ வாங்குற எத்தனை பேருன்னாலும் எங் கையாலத்தான் எடுத்துக் கொடுப்பேன். பிறத்தியாரா ஆளு வெச்சு எடுத்துக் கொடுக்குறதில்ல. ஒரு நாளு கடையை மூடிட்டாலும் ஏன்யா சோமு கடையை மூடிட்டேன்னு வீடு தேடி வந்து நாற்பது பேரு நிப்பான். எனக்குப் பத்திரிகை வெக்காம இந்த ஊர்ல எவன்டா நல்லது கெட்டது பண்ணிருக்கான் சொல்லு என்பார்.

சோமு சித்தப்பா ரொம்ப ரொம்ப பெரிசா தாண்டக்கூடாது என்ற அனுபவத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். அதில் இன்னொரு விசயத்தையும் சேர்த்துச் சொல்வார். ஆனா மவனே குட்டிக் குட்டியா தாண்டிக்கிட்டே இருக்கணும், பெரிசா தாண்டக் கூடாதுன்னு சொன்னேன்னே தவிர, தாண்டாம இருந்துடக் கூடாது என்பதை அழுத்தம் கொடுத்துச் சொல்வார்.

நாம்ம என்ன ஒலிம்பிக்ல தாண்டி பதக்கமா வாங்கப் போறோம்? வாழ்க்கையில தாண்டுனா போதும்டா மவனே. அதுக்குக் குட்டிக் குட்டித் தாண்டலே போதும். ஒரே அடியா தாண்ட நினைச்சா போயிச் சேந்துடுவே. குட்டிக் குட்டியா தாண்டிக்கிட்டே இருந்தா ஆயுசுக்கும் தாண்டிக்கிட்டே இருப்பே. ஒரே அடியா  தாண்ட நினைச்சவனெ விட பல மடங்கு அதிகமா தாண்டியிருப்பே. அதுதாம்டா மவனே வேண்டும் என்பார். அடிக்கடி இப்போதெல்லாம் சோமு சித்தப்பா பெட்டிக்கடையில் நான் உட்கார்கிறேன். அவருக்கு ஒத்தாசையாக சாமான் செட்டுகளை எடுத்துக் கொடுக்கிறேன். தனக்குப் பின்னே இந்தப் பெட்டிக்கடை வியாபாரத்தை அவர் சொல்கிற முறையில் யாராவது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சோமு சித்தப்பா எதிர்பார்க்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை இருந்தால் அப்படித்தான் இந்த வியாபாரத்திற்கென்றே தயார்படுத்தி வளர்த்திருப்பார். சோமு சித்தப்பாவுக்குப் பிள்ளை இல்லை. பார்க்கும் எல்லாரையும் மவனே மவனே என அழைத்து அந்த ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கிறார் போலும்.  பிள்ளைகளும் அவரை சித்தப்பா சித்தப்பா என்று வாஞ்சையுடன் தழுவிக் கொள்கிறார்கள். நாற்பது வயதைக் கடந்ததும் அவரைச் சித்தப்பா என்றுதான் சொல்கிறது, நாலு வயசுப் பிஞ்சும் அவரைச் சித்தப்பா என்றுதான் சொல்கிறது. பெரிசுகளில் கொஞ்சம் அந்தக் கடையைச் சோமு கடை என்று சொல்கிறது. மற்றவற்றிக்கெல்லாம் சித்தப்பா கடையாகி விட்டது.

எங்களில் சோமு சித்தப்பாவின் பிள்ளையாக யார் பெட்டிக்கடையை வைக்கப் போகிறார்கள் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...