10 May 2023

தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ – ஓர் எளிய அறிமுகம்

            நாவல் ஆர்வலர்களால் தவற விட முடியாத ஒரு நாவல் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’. தி.ஜா.வின் நாவல்களில் தனித்த இடம் பெற்று விட்ட நாவல்களில் முதல் இடத்தில் இருப்பதும் இந்த நாவலே.

            கும்பகோணம் குறித்த அந்நாளைய சித்திரம் தற்காலத்துச் சித்திரம் போன்று விரியும் பிரேமையைத் தருவதுதான் நாவலின் சிறப்பு. கும்பகோணமும் அதன் தெருக்களும் பாத்திரங்களாகி மனதில் உலாவும் மாயத்தை இந்த நாவலில் நிகழ்த்தியிருப்பார் தி.ஜா.

            பருவ வயது இளைஞனுக்கு ஒரு முதிர்கன்னியின் மேல் ஈர்ப்பு வந்தால் என்ற ஒரு வரியினின்று விரியக் கூடிய நாவலே மோகமுள். ஈர்ப்புக்கான காரணம், ஈர்ப்பின் பின்னணி, ஈர்ப்பின் பின்னுள்ள அன்பு, ஏக்கம், மோகம், ஆற்றாமை, காத்திருப்பு, பிரிவு என்று எல்லா தளங்களிலும் வெகு ஈர்ப்பாக நாவலை வடித்திருப்பார் தி.ஜா. அந்த ஈர்ப்பை எதிர்பாலின ஈர்ப்பாகவும், இளம்பிராயத்திலிருந்து தொடங்கிய அன்பின் தொடர்ச்சியாகவும், தடுத்தாட்கொள்ள முடியாத மோகமாகவும், நிறைவாகச் சங்கீதத்திற்கான மடைமாற்றமாகவும் தி.ஜா. நாவலைக் கொண்டு சேர்த்திருப்பார்.

            மராத்திய – பிராமணிய கலப்பில் பிறந்த யமுனாவுக்கு முப்பது வயதைக் கடந்தும் மணமாகாமல் போவதும் அந்த இடத்தை நிரப்புவது போல பாபு வந்து சேர்வதும் நாவலை இழுத்துச் செல்லும் தொடக்கமாகும்.

            பாபு தங்கியிருக்கும் அறையின் பக்கத்து வீட்டில் இருக்கும் தங்கம்மாளின் விரக தாபம் பாபுவுக்கு யமுனா மீதான ஈர்ப்பை உணர வைப்பதும், அதைத் தொடர்ந்து பாபுவின் நிராகரிப்பால் நிகழும் தங்கம்மாளின் தற்கொலை உண்டாக்கும் குற்றவுணர்ச்சி பாபுவை அலைக்கழிப்பதும் நாவலின் மையமாகும்.

            தொடர்ந்து நிகழும் பாபுவின் சங்கீத குருவான ரங்கண்ணாவின் மரணம் உண்டாக்கும் வெறுமையும், எதையும் பகிர்ந்து கொண்டு ஆற்றுப்படுத்தும் நண்பன் ராஜத்தின் பிரிவு உண்டாக்கும் ஆற்றாமையும், யமுனாவின் மௌனமான நிராகரிப்பும் நாவலை நிறைவை நோக்கிச் செலுத்தும் உட்காரணிகளாகும். இக்காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாபுவைச் சென்னையை நோக்கிச் செலுத்துகிறது.

            தொடர்ந்து தள்ளிப் போகும் மண வாய்ப்புகளால் தாயாரோடு உண்டாகும் மனக்கசப்புகளாலும், வறுமையையும் பசியையும் எதிர்கொள்ள முடியாத நிர்கதியற்ற நிலையாலும் யமுனாவும் சென்னைக்கு வர நேரிடுகிறது. பாபுவும் யமுனாவும் சென்னையில் சந்திக்கும் பொழுதுகளில் எட்டு ஆண்டுகளாகப் பாபுவின் மனதில் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கும் மோகத்தைத் தீர்ப்பதற்கான சூழ்நிலையையும் காலம் உருவாக்கிக் கொடுக்கிறது.

            யமுனாவுடன் மோகம் தீர்ந்த பின்னும் யமுனாவின் மீது பாபு வைத்திருக்கும் காதலும் மரியாதையும் பிரமிக்க வைக்கக் கூடியது. பாபுவின் மோகத்தைத் தீர்த்து சங்கீதத்தின் உச்ச நிலைகளை நோக்கி அவனை யமுனா ஆற்றுப்படுத்துவதாக நாவல் முடிகிறது.

            கர்நாடக சங்கீதத்தை ரங்கண்ணாவிடம் கற்றுத் தேர்ந்து முன்னேறும் பாபுவுக்கு வடக்கத்திய சங்கீதத்தையும் நோக்கி முன்னேறும் அடுத்த கட்டத்தைத் தொடர்வதற்காக யமுனா நாவலில் வந்து சேர்ந்திருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றும்படி வாசிப்பின் முடிவில் ஓரு நிறைவு உண்டாகிறது.

            தி.ஜா.வின் கர்நாடக சங்கீதப் புலமையையும் பரீட்சயத்தையும் அறிந்தவர்கள் அதைத் தாண்டி இந்துஸ்தானி இசையையும் கற்க வேண்டும் என்ற அவரின் வேட்கையின் வெளிப்பாடாக இந்த நாவலைப் படைத்திருப்பதாகக் கருதவும் இடம் இருக்கிறது.   

            பாபுவுக்கு நாவலில் யமுனாவின் மேல் ஈர்ப்பு ஏற்படுவது வியப்பான ஒன்று என்று தோன்றாத அளவுக்கு யமுனாவை வார்த்திருப்பார் தி.ஜா. நாவலை வாசித்துக் கொண்டு செல்கையில் யமுனா மேல் பாபுவுக்கு ஏற்படும் ஈர்ப்பின் மீது ஒரு நியாய உணர்வும் தோன்ற ஆரம்பித்து விடும். குறிப்பாகக் கூறுமிடத்து யமுனாவின் ஆளுமையும் கேலியும் கிண்டலும் கலந்த பேச்சும் பாபுவைப் போல வாசிப்போருக்கும் யமுனாவின் மேல் ஈர்ப்பையும் ரகசிய காதலையும் உண்டாக்கக் கூடியவை.

            யமுனாவின் பேச்சு நாவலில் பிரதானம் இடம் வகிக்கக் கூடியது. யமுனாவின் துடுக்கான பேச்சு பாபுவைத் தாண்டி அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது. எவ்வளவு நுட்பமான கேள்விகள், நியாயத்தைச் சுருக் சுருக்கென்று குத்துகின்ற எதார்த்தங்கள் என்று யமுனாவின் பேச்சு நாவலை வாசிக்க வாசிக்க அவளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும். நாவலின் இறுதியில் ‘இதற்குதானா?’ என்ற யமுனாவின் கேள்வியும் அதற்கு பாபுவின் சமாதானங்களும் வாசிப்போரின் மனவிசாரத்தை மென்மேலும் விவாதத்தை நோக்கி எடுத்துச் செல்பவை.

            பாவுக்குக் கிடைத்திருக்கும் யமுனாவும் ரங்கண்ணாவும் நாவல் வாசிப்போரை ஏங்க வைத்து விடுகிறார்கள். பாபுவுக்குக் கிடைத்த யமுனா, ரங்கண்ணா மட்டுமல்லாமல் அப்பா வைத்தி, நண்பன் ராஜம் என்று எல்லாரும் நம்மை ஏங்க வைப்பவர்கள்.

            சங்கீத ஓட்டத்தில் இழைந்து செல்லும் நாவல் என்றாலும் சங்கீதம் புரியாதவர்களுக்கும் அதை நோக்கி ஈர்ப்பை உருவாக்கக் கூடியது இந்த நாவலுக்கே உரிய சிறப்பு எனலாம். சங்கீதம் குறித்த புரிதலின்மை நாவல் வாசிப்பை தடை போட்டு நிறுத்தி விடாது. மாறாக அந்தப் புரியாத தன்மையே புதுவித ஈர்ப்போடு நாவலை உக்கிரமாக வாசிக்கத் தூண்டும்.

            நல்ல பனிக்காலமா பார்த்து தியாகராஜர் சமாதி ஆகி விட்டார், ராமலிங்க சாமியும்தான் என்ற விவரங்களை உரையாடலுக்குள் கொண்டு வந்து உயிர் கொடுக்கும் தன்மை தி.ஜா.வுக்கே உரியது. இந்த நாவலின் ஆகச் சிறந்த சிறப்பே பாத்திர உரையாடல்கள்தான். அதுவும் மிக அதிகமாக அவ்வளவு நேரம் பாத்திரங்கள் உரையாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த உரையாடல்களுக்குள் ஆழ்ந்து போகும் மயக்கு ரசவாதத்தைத் தி.ஜா. எப்படிதான் உருவாக்கினாரோ என்று வாசித்த பின்னும் யோசிக்கத் தோன்றும்.

            சாரைப் பாம்புக்கு அப்பளம் சுடும் வாசனை உண்டு என்பது போன்ற அபூர்வமான சங்கதிகளும் இந்த நாவலில் உண்டு. நாவலை வாசித்து முடித்த உடன் யமுனா போன்ற யாரையாவது காதலிக்க வேண்டும் என்ற உணர்வை இந்த நாவல் உண்டாக்கி விடும். அதுதான் இந்த நாவலைக் காலங்கள் கடந்தும் தொடர்ந்து வாசிக்க செய்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

            பெண்களின் மனோ உலகத்தையும் விசித்திரத்தையும் உரையாடல்கள் வழியே தி.ஜா. காட்சிப்படுத்துவது போல வேறு யாராலும் காட்சிப்படுத்த முடியாது என்பதற்கு இந்த நாவல் முதன்மையான உதாரணம் என்றே சொல்லலாம்.

            நவீனத்துவத்தோடு பார்த்தால் இந்த நாவலைப் பாபுவின் குற்ற உணர்ச்சியோடு ஆரம்பித்திருக்கலாமோ என எண்ணத் தோன்றும். தி.ஜா. நாவலை இயல்பாக ஆரம்பித்துச் சம்பவங்களின் சேர்க்கையோடு இயல்பாக முடிக்கிறார். அதுவே நாவலுக்கு ஒரு செவ்வியல் தன்மையையும் வழங்கி விடுகிறது. மனிதருக்கு மனது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதை எவ்வளவு மென்மையாக அணுக வேண்டும் என்பதையும் நாவல் வெகு அற்புதமாகப் பேசுகிறது.

            இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. திரைப்படத்தில் பாலூர் ராமு, கங்காதரம் பிள்ளை போன்றோரை வில்லன் போன்று சித்தரிப்பார்கள். நாவலில் அக்காலப் போக்கைக் காட்டும் வகையில்தான் தி.ஜா. அவர்களைக் கொண்டு சென்றிருப்பார். நாவலை வாசிப்பதற்கு அந்தத் திரைப்படம் ஈடாகாது. நாவலைப் படித்தவர்கள் திரைப்படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒரு முறை பார்க்கலாம். அப்படி ஓர் ஆர்வத்தைத் தூண்டவும் செய்யும் இந்த நாவல். அந்த ஆர்வத்தில் ‘மோகமுள்’ திரைப்படத்தைப் பார்த்தேன். நீங்களும் பார்ப்பதற்காக அதற்கான இணைப்பு கீழே.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...