9 May 2023

நியாயம் மறந்து விட்ட தெய்வங்கள்

நியாயம் மறந்து விட்ட தெய்வங்கள்

வீட்டுக்குத் தெற்கே வெண்ணாறு. வெண்ணாற்றைக் கடந்தால் அக்கரை. அக்கரையில் வள்ளியமூர்த்தி கோயில். வள்ளியமூர்த்திக்கு உக்கிர தெய்வம் என்று பேர். ரொம்ப நேர்மையான தெய்வம் என்றும் பேச்சு. கோயிலுக்கு இக்கரையில் தார் சாலை. அக்கரையில் இருந்த தெய்வத்துக்கு அஞ்சி இக்கரையில் பொழுது போன நேரத்தில் நடந்துப் போக பயந்த காலமும் உண்டு. வள்ளியமூர்த்தி அடித்து விடுவார் என்ற வழக்கை இப்போது சொன்னால் ஏற்பார் யார்? கோயில் உள்ளே இருக்கும் ராக்கப்பெருமாளுக்கு அவர்தான் காவல் தெய்வம். வெளியே வள்ளியமூர்த்தி நடுநாயகமாகக் கையில் ஒரு கையில் ஓங்கிய அரிவாளோடும் இன்னொரு கையில் கம்போடும் வெகு உக்கிரமாக நின்றிருப்பார். அவருக்கு இடது புறம் வீரனும் வலது புறம் பெரியாச்சியும் இருப்பார்கள்.

            ஊரில் ஒருவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று தோன்றினால் ஒரு பாட்டில் சாராயமும் ஒரு கட்டு சுருட்டும் வாங்கி வள்ளியமூர்த்தியின் முன் வைத்தால் அவர் நியாயத்தை வாங்கித் தந்து விடுவார் என்று நம்பிக்கை. அப்படிச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள். அப்படி யாரும் செய்து விட்டதாகத் தெரிந்தால் அநியாயம் செய்வதவரே முன்வந்து நியாயத்துக்குக் கட்டுப்பட்டு விடுவார். வள்ளியமூர்த்தி எப்படி அடிப்பார், எந்த இடத்தில் வைத்து அடிப்பார் என்று யாருக்குத் தெரியும்? ஒருமுறை தென்னை மரத்தின் உச்சியில் இருந்தபடி அங்கிருந்து குதித்து அநியாயம் செய்த ஒருவரை ஒரு போடு போட்டிருக்கிறார். அவர் அன்றிலிருந்து வாயாலும் வயிற்றாலும் போக ஆரம்பித்து விட்டார். வள்ளியமூர்த்தியிடம் போய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பிறகுதான் ஆள் தேறியிருக்கிறார். இல்லாவிட்டால் ஆள் போய் சேர்ந்திருப்பார்.

            இப்போது வள்ளியமூர்த்தி சாத்வீக தெய்வமாகி விட்டாரோ என்னவோ? இக்கரைக்கும் அக்கரைக்குமாக டாஸ்மாக் பானங்களை வாங்கிக் குடிக்க போகும் இளைஞர்கள் நூறைத் தாண்டும். கையில் இருக்கும் மொபைலில் பலான படங்களைப் பார்க்க ஒதுங்கும் இளசுகளும் கணிசமாக இருபது முப்பதைத் தொடும். ஜோடிகளாக மறைவிடங்களில் ஒதுங்குபவர்களும் கணிசமாக உண்டு. எல்லா அநியாயங்களைக் பார்த்துக் கொண்டு கண்டும் காணாமல் காலத்திற்கு ஏற்றாற்போல வள்ளியமூர்த்தி மாறி விட்டார்.

            நான் அக்கரையில் நடக்க ஆரம்பித்து இருபத்து இரண்டு ஆண்டுகளைத் தாண்ட போகிறது. ஆரம்பத்தில் ஓட்டமும் உடற்பயிற்சியும் என்று ஆரம்பித்தது இன்று நடையோடு நின்று விட்டது. சாயுங்கால நேரத்தில் ஒரு நடை போய் விட்டு வந்தால்தான் உடம்புக்கும் மனதுக்கும் கலகலப்பு வருகிறது. கிராமத்தில் வெளியில் கிளம்பினால் சட்டென்று நினைத்த இடத்திற்குப் போய் வந்து விட முடியாது. நாலு பேராவது விசாரிப்பார்கள். நாலு பேரும் கால் மணி நேரத்திற்குக் குறையாமல் பேச்சு வளர்ப்பார்கள். அவர்களைக் கடந்துதான் காரியங்களைப் போய் முடித்து வர வேண்டியிருக்கும். சில நேரங்களில் மாமா, கொஞ்சம் அவசரம் போய்ட்டு வந்துச் சொல்கிறேன் என்று சொல்லாமல் யாரையும் கடந்து விட முடியாது. என்னடா நேற்று பாத்துகிட்டே பார்க்காதது போலப் போனீயே என்று வீட்டிற்கே வந்து வம்பு வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

            சாயுங்காலம் நடைக்குக் கிளம்பும் போது இப்படி இரண்டு மூன்று பேராவது பிடித்துக் கொண்டு விடுவார்கள். வாருங்கள் ஒரு நடை போய்க் கொண்டே பேசுவோம் என்றால் அது முடியாது மாப்ளே என்பார்கள். நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோதான் பேச்சு நீளும் என்னவோ ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பது போல. இப்போதெல்லாம் நீ நடைக்குப் போவணும்டா, போய்ட்டு இருட்டுறதுக்குள்ள திரும்பி விடு என்று அனுப்பி விடுகிறார்கள். அவர்களுக்கும் இந்தச் சாயுங்கால நேரத்தில் என்னைப் பார்த்து அலுத்து விட்டது போல இருக்கு. சாயுங்காலம் கிளம்பினால் இவன் நடைக்குத்தான் என்று முடிவு கட்டி விட்டார்கள்.

            இந்த இருபத்து இரண்டு வருடத்தில் நான் இளைஞனாக இருந்த காலத்தில் இருந்து இப்போது நாற்பதைக் கடந்த நிலையில் பலவிதமாகப் பார்த்து விட்டேன். நான் நண்பர்களோடு ஓட்டமும் உடற்பயிற்சியுமாக இருந்த காலத்தில், எதுக்குடா இப்படி ஓடிக்கிட்டு கிடக்குறீங்க, மண்வெட்டியைப் பிடித்து வயலில் இறங்கினால் வேலைக்கு வேலையும் ஆச்சு, உடம்புக்கு பயிற்சியுமா ஆச்சு என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது நடை தளர்ந்த முதியவர்களாகி விட்டார்கள். அவர்களோடு அப்போது உழைத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சென்னை, திருப்பூர், ஓசூர் என்று வேலை தேடிச் சென்று விட்டார்கள்.

            சாயுங்கால நேரத்தில் மதுவாங்கட்டையில் உட்கார்ந்து ஊர்க்கதைகளையும் சொந்தக் கதைகளையும் பேசிக் கொண்டிருப்பார்கள். சீட்டு விளையாடுபவர்கள் மறைவிடம் பார்த்து விளையாடுவார்கள். மாட்டுக்குப் புல் அறுப்பவர்களும், மடை அடைப்பவர்களும், திறப்பவர்களும் வரப்புகளில் மண்வெட்டியோடு அலைந்து கொண்டிருப்பார்கள்.

            கட்டுச்செட்டாக இருந்த எல்லாரும் இன்று மாறி விட்டார்கள். பெரும்பாலானோர் குடிகாரர்களாக மாறி விட்டார்கள். இரண்டு மூட்டைகளை அநாயசமாகத் தூக்கிய உடம்பில் அரை மூட்டையைத் தூக்கும் வலு இல்லாமல் போதையில் திரிகிறார்கள்.

            நெடுக மதுவாங்கட்டையில் மது குடிக்கும் இளைஞர்களை நிறைய பேரைப் பார்க்க முடிகிறது. பொங்கல், தீபாவளி என்றால் வழி நெடுக மதுப்புட்டிகளோடு ஆங்காங்கே இளைஞர்கள் நான்கைந்து பேராகக் குழுமிக் கொண்டு குடித்து மகிழ்கிறார்கள். பொங்கலுக்காகவும் தீபாவளிக்காகவும் அவர்கள் வருவதாகச் சொன்னாலும் அவர்கள் இது போல குடித்து மகிழ்வதற்காக வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

            அப்போது ஊரில் குடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்போது குடிக்காமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருக்கிறது.

            உக்கிர தெய்வமான வள்ளியமூர்த்தியும் சாராயம் குடிப்பவர்தான். அவருக்கு யார் யார் சாராயம் குடிக்கலாம் என்று  தெரியும். இளசுகளும், பிள்ளைகளும் குடித்தால் அவருக்குப் பிடிக்காது. அடித்து விடுவார். நியாய தர்மம் பார்ப்பவர். அன்று நியாயம் காத்தவர் இன்று அதை மறந்தபடி நின்று கொண்டிருக்கிறார். அவர் கோயிலுக்குத் தெற்கே அவர் பார்வையில் படும்படியாக நீளும் ஒற்றையடிப் பதையில் பிள்ளைகள் உட்பட இளைஞர்கள் வரை குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்த நியாயத்தையும் கேட்க மாட்டேன்கிறார். குடிப்பவர்களை அடிக்கவும் மாட்டேன்கிறார். இதுதான் காலத்திற்கேற்ற நியாயம் என்று நினைத்து விட்டார் போலும்.

            நடைக்குப் போகும் போது மாமாக்கள் ரெண்டு பேர் சொல்கிறர்கள், மாப்ளே குடிகாரப் பசங்க அதிகமாயிட்டே இருக்கானுங்க, சுருக்கா போய்ட்டு சுருக்கா திரும்புடா என்று.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...