8 May 2023

ஒரு நாளில் சுருங்கி விடும் விழாக்கள்

ஒரு நாளில் சுருங்கி விடும் விழாக்கள்

            நான்கு நாள் பொங்கல் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. போகி, பெரும்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் அமர்க்களப்படும் பொங்கலின் மகிழ்ச்சி பெரும்பொங்கலுக்காக மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

            இளம் செட்டுகள் எல்லாம் வெளியூர் வேலையில் இருக்கின்றார்கள். சென்னை, ஓசூர், திருப்பூர்வாசிகளாகி விட்டவர் அதிகம். பிறந்த இடத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காகத் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

            போகி அன்றைக்கு சாயுங்காலமோ, இரவோ ஊர் வந்து சேர்கிறார்கள். மறுநாள் பொங்கல் முடிந்ததும் நண்பர்களோடு மதுபானங்களைக் குடித்து மகிழ்கிறார்கள். மாட்டுப்பொங்கல் அன்றைக்கே ஊருக்கு மூட்டையைக் கட்டுபவர்கள் இருக்கிறார்கள். அந்த நாளையும் மதுபானக் கொண்டாட்டத்துக்குக் குத்தகை எடுத்துக் கொண்டு அதற்கு மேல் தாங்காது என்று காணும் பொங்கல் அன்று கிளம்புபவர்களும் இருக்கிறார்கள்.

            முன்பெல்லாம் கிராமத்துப் பொங்கல் இப்படியா இருந்தது? பொங்கல் வருவதற்குப் பத்து இருபது நாட்களுக்கு முன்பே பொங்கல் வேலைகள் ஆரம்பித்து விடும். வீட்டை ஒட்டடை அடித்து, வெள்ளை அடித்து, வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் சுத்தம் செய்து என்று பொங்கல் வேலை செய்து மாளாது.

            பெரும்பாலான வீடுகள் கூரை வீடுகள் அப்போது. மண்சுவர் நிறைந்த வீடுகள். ஆற்றங்கரையில் வண்டலும் மணலும் எடுத்து வந்து பொக்கைப் பொறைகளாகப் பெயர்ந்து கிடக்கும் சுவரைப் பூசி முடிக்க வேண்டும். கிளிஞ்சல் சுண்ணாம்பை வாங்கி வந்து அதை அடிப்பதற்கென்று இருக்கும் பட்டையை வைத்து சுவரெல்லாம் வெள்ளை அடித்து முடிக்க வேண்டும். வெள்ளையுடன் லேசு பச்சையோ, லேசு நீலமோ கலந்து அடிப்பவர்களும் உண்டு. வெள்ளையே போதும் என்று விட்டு விடுபவர்களும் உண்டு. வீடே புதுக்கோலம் பூண்டது போல இருக்கும். புதுமனை புகுவிழா செய்யும் அளவுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கலன்று வீடு தயாராகி விடும்.

            பொங்கல் வைப்பதற்குத் தலைமுறை தலைமுறையாகத் இருக்கும் பொங்கல் கட்டிகள் பாதுகாப்பாக இருக்கும். அதைத் தயார் செய்து வீட்டுக்கு வெளியே பொங்கல் வைப்பதற்கான இடத்தைச் சீர் செய்து அது அரை நாள் வேலையை இழுக்கும். சூரியன் கிளம்பும் நேரத்தில் பொங்கல் வைத்து காலை உணவாகப் பொங்கலை முடித்து விடுபவர்களும் உண்டு. பத்து பதினொன்றரை என்று பஞ்சாங்கத்தைப் பார்த்து நல்ல நேரத்தில் வைத்து மதிய உணவாகப் பொங்கலை அமைத்துக் கொள்பவர்களும் உண்டு. மதியப் பொங்கல் என்றால் காலையில் சாப்பிட மாட்டார்கள்.

            ஒவ்வொரு வீட்டில் வைக்கும் பொங்கலில் பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வருவது நான்கு திசையில் நான்கு ஊருக்கும் கேட்கும் அளவுக்குப் பொட்டுப் பொடிசுகள் பொங்கல் பொங்கி வரும் போது சத்தம் இடுவதற்கும் தாளம் போடுவதற்கும் தயார் நிலையில் இருக்கும். பொங்கலோ பொங்கல் என்று பிள்ளைகள் போடும் சத்தமும், வீட்டில் இருக்கும் தாம்பாளங்களை வைத்து அதுகள் அடிக்கும் அடி ஓசையும் இடியோசைப் போல இருக்கும்.

            மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தின் உச்சமாக இருக்கும். பெரும்பொங்கல் அன்றே மாட்டுக் கொட்டகையின் முன் நெற்கதிர், நெல்லிக் கொத்து வைத்து மாட்டுப் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்திருப்பார்கள். மதியத்திற்கு மேல்தான் மாட்டுப்பொங்கல். மாடுகளைக் குளிப்பாட்டி அதற்கு மாலை போட்டு அப்போதும் சத்தமும், தாம்பாளங்களில் போடும் தாளமும் ஊரையே ரெண்டு பண்ணி விடும். இரவில் கோயிலில் மாடு பிடித்தலில் கரை புரண்டோடும் உற்சாகத்தை வார்த்தையில் சொல்ல முடியாது. மாடுகளை விரட்டிப் பிடித்து வீட்டிற்குக் கொண்டு வந்து அடேங்கப்பா அந்தச் சம்பவம் எல்லாம் இப்போதும் பெரும்பாலான கிராமங்களில் இல்லாமலே போய் விட்டது. வீடுகளில் மாடுகளும் இல்லாமல் போய் விட்டன. வீட்டுக் கொல்லைகளில் மலை போல இருந்த வைக்கோல் போர்களும் கிரானைட் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டது போல மறைந்து போய் விட்டன.

            காணும் பொங்கலுக்குக் கட்டுச்சோறு தயார் செய்து கொண்டு கோயில், குளம் என்று போய்க் கொண்டாடுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குப் போய் அளவளாவிக் கொண்டே கொண்டாடுபவர்களும் உண்டு. இப்போது காலம் மாறி விட்டது. பெரும் பொங்கலோடு எல்லா பொங்கலும் முடிந்து விடுகிறது. பெரும்பொங்கலுக்காக வந்த இளம் செட்டுகள் காணும் பொங்கலுக்குள் நகரங்களில் தஞ்சமடையும் அகதிகளைப் போலக் கிராமங்களை விட்டு வெளியேறி விடுகிறார்கள். காணும் பொங்கல் அன்று ஊரில் எஞ்சிக் கிடக்கும் சிறுபிள்ளைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள், பெண்களுக்குக் கோலப்போட்டி நடத்துகிறார்கள். ஒலிப்பெருக்கிகளை வைத்து திரைப்பாடல்களைப் போட்டு காதுகளைக் கிழிய வைத்து விடுகிறார்கள்.

            பொங்கலுக்கான நான்கு நாட்கள் முடிந்த பிறகும் கிராமத்தில் ஓர் உயிர்ப்பு இருக்கிறது. அறுவடை வேலைகள் தொடங்குகின்றன. வரப்பு உளுந்து எடுக்கின்ற வேலைகளும் தொடர்கின்றன. அடுத்து வரும் கோயில் திருவிழாவுக்காகக் கிராமம் காத்துக் கிடக்கத் தொடங்குகிறது. அப்போதுதான் ஊரை விட்டு வெளியூரில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்புவார்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...