5 May 2023

நெல்லின் மதிப்பைப் பிடுங்கிக் கொண்ட பெருவணிகமும் இயந்திரங்களும்

நெல்லின் மதிப்பைப் பிடுங்கிக் கொண்ட பெருவணிகமும் இயந்திரங்களும்

துரை தாத்தாவும் ராசு தாத்தாவும் உயிரோடு இருந்த போது அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள், எட்டு மூட்டை நெல்லைப் போட்டால் ஒரு பவுன் தங்கம் வாங்கலாம் என்று. விவசாயம் லாபகரமாக நடந்த காலத்தில் நிலைமை அப்படி இருந்தது. துண்டு நிலம் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இருந்த காலக்கட்டம் அது. காலம் உருண்டோட அதாவது அவர்கள் சாகின்ற காலம் வரை அந்தச் சமநிலைக்கு தங்கத்தின் விலையும் நெல் மூட்டைகளின் விலையும் வரவில்லை. அவர்கள் செத்த பின் நெல் மூட்டையின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டு போனது. தங்கத்தின் விலை எக்காளமிட்டுக் கொண்டு எகிறிக் கொண்டு போனது. போகப் போக குடை அடித்துக் கொண்டு போனது விவசாயம்.

இப்போது ஐம்பது மூட்டை நெல்லுக்குச் சமப்படுத்தினாலும் ஒரு பவுன் தங்கத்திற்குச் செய்கூலியும் சேதாரமும் இடிக்கும்.

என் அப்பா 1981 வாக்கில் வாத்தியார் வேலையில் சேர்ந்த போது சம்பளம் ரூ. 600 என்றும் ஒரு பவுன் விலை ரூ. 150 க்கும் கம்மியாக இருந்ததாக அடிக்கடிச் சொல்வார். வீட்டு வாடகை ரூ. 60 கொடுத்ததாகச் சொல்வார். அவர் சொன்னதில் ஞாபகப் பிசகு இல்லாதிருந்தால் நிலவரம் அதுதான் அப்போது. அப்பா அப்போது குடும்பச் செலவை ரூ. 300 க்குள் வைத்திருந்து மீதி ரூ. 300 க்கு இரண்டு பவுன் தங்கம் வாங்கியிருந்தால் வருடத்திற்கு 24 பவுன் வாங்கியிருக்கலாம்.

என் அப்பா அன்று வாங்கிய விகிதாச்சாரத்தில் இன்று சம்பளம் கொடுப்பதென்றால் மாதம் இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆண்டு வருமானத்தை இரண்டு லட்சத்திற்குள் முடித்து விடும் அளவுக்குத்தான் இங்கு பல வேலைகள் இருக்கின்றன.

அரிசிக்கு அப்போது நல்ல மதிப்பும் இருந்திருக்கிறது. நெல்லாக வாங்கி அவித்துப் புழுங்கல் அரிசியாக விற்பதைக் கிராமங்களில் கைத்தொழிலாகப் பலர் செய்ததாகவும் அப்பா சொல்வார். இப்போது அப்படி செய்ய முடியாது. கட்டுபடி ஆகாது.

வருடங்களின் ஓட்டத்தில் எல்லாம் விலை ஏறிக் கொண்டு போக நெல் மூட்டையின் விலை மட்டும் எப்படி இறங்கிக் கோண்டு போனதோ? விளைச்சல் மற்றும் தேவை என்ற பொருளாதார அடிப்படையில் நெல் விளைச்சல் அதிகமாகியிருக்கிறது. தேவை குறைந்திருக்கிறது என்பதை விடவும் தட்டுபாடு இல்லாமல் தாரளமாக அரிசி கிடைக்க தொடங்கியிருக்கிறது. இப்போது தட்டுபாடு ஏற்பட்டாலும் வருடத்தின் சில மாதங்களில் விருட்டென்று விலை ஏறும் தக்காளி விலை போலவோ, வெங்காயம் விலை போலவோ நெல்லின் விலையும் ஏறக் கூடும்.

விஸ்தீரனமாக திண்ணைகள் இருந்த வீடுகள் இப்போது இல்லை. திண்ணைகள் சுருங்கி விட்டன. இதற்கும் நெல் மூட்டையின் விலைக்கும் தொடர்பு இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

விரிந்து கிடந்த திண்ணைகளில் விளைச்சல் காலங்களில் நெல் மூட்டைகளும் மற்ற காலங்களில் மனிதர்களும் நிறைந்திருந்தனர். நெல் மூட்டையின் விலை வீழ்ச்சி திண்ணைகளைச் சுருக்கி விட்டதோ என்று நான் நினைத்திருக்கிறேன். நெல் மூட்டைகளின் விலை அதிகரிக்குமானால் நெல்லை வீட்டில் இருப்பு வைப்பதைக் குறித்து விவசாயிகள் யோசிக்கக் கூடும். அப்போது அவர்களுக்கு நிச்சயம் திண்ணைகள் தேவைப்படும்.

பத்தாயங்களையும் குதிர்களையும் வைத்து நெல்லைச் சேமித்து வைப்பதற்குப் பின்னால் இருந்தது நெல்லுக்கு இருந்த மதிப்பே. வயலில் கொட்டிக் கிடக்கும் நெற்கதிர்களைப் பொறுக்கி எடுத்து காசு சேர்த்த சிறுவர் சிறுமியர்கள் என் காலம் வரையில் கூட இருந்தார்கள். வரப்புகளில் நடக்கவும் வயலில் இறங்கவும் அச்சப்படும் சிறுவர் சிறுமியர்களையும் இப்போது அதிகம் பார்க்கிறேன். நெல்லைப் பொறுக்கிக் காசு சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை.

விவசாயக் கூலியாக நெல்லை உரிமையாகக் கேட்டுப் பெற்ற காலம் கூட சில பத்தாண்டுகளுக்கு முன் இருந்தது. பண்டமாற்றத்திலும் நெல் உண்டு. நெல்லைப் போட்டு விட்டு உப்பு வாங்கிக் கொள்ளும் பெண்மணிகளும் நெல்லைக் கொடுத்து ஐஸ் வாங்கிச் சுவைக்கும் சிறுவர்களும் இப்போது காணாமல் போய் விட்டார்கள். காசைக் கொடுத்தால் தேசத்தின் உப்பு என்று சொல்லப்படும் டாட்டாவின் உப்பை பெட்டிக்கடையில் வாங்கி விடலாம். நெல்லின் மதிப்பு பணத்தின் மதிப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் காணாமல் போய் விட்டது.

நெல்லைச் சேமித்து வைப்பதும் நெல்லை ஆவாட்டி அரைத்து அரிசியாக்குவதும் செலவு பிடிக்கும் வேலைகள் என்று விவசாயிகள் வியாபாரிகளைப் போலச் சிந்திக்க ஆரம்பித்து ஆண்டுகள் பலவாகி விட்டன.

பெரிய அளவில் நெல்லை வாங்கி புழுங்கல் அரிசியாக்கிக் கொடுப்பது லாபகரமாக இருக்கிறது. சிறிய அளவில் கைத்தொழிலாகவோ சிறு தொழிலாகவோ செய்தால் அந்த லாபம் அடிபட்டு போய் விடுகிறது. நெல்லை அரிசியாக்குவதை விட அரிசியாக வாங்குவது கட்டுபடியாகிறது. நெல் அரிசியாவதில் மட்டுமல்ல இட்லி – தோசை மாவை அரைப்பதிலும் மாவாக வாங்கிக் கொள்வது சல்லிசாக இருக்கிறது.

நெல் விலைக்கும் அரிசி விலைக்கும் ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது. இருபது ரூபாய்க்குள் ஒரு கிலோ கத்திரியோ ஒரு கிலோ தக்காளியோ வாங்க முடியாது. ஆனால் ஒரு கிலோ நெல்லை வாங்கி விடலாம். ஒரு கிலோ நெல்லை இருபது ரூபாய்க்குள் வாங்கி நாற்பது ரூபாய்க்கு மேல் ஒரு கிலோ அரிசியை விற்கலாம். ஒரு கிலோ நெல்லுக்கு மிக துல்லியமாகவோ சரிக்குச் சரியாகவோ ஒரு கிலோ அரிசி வராது என்றாலும் தவிடும் உமியும் நல்ல விலைக்குப் போகின்றன.

நெல்லுக்கும் அரிசிக்கும் இருக்கும் விலை வேறுபாட்டை மொத்த அளவில் கொள்முதல் செய்து லாபமாக மாற்றிக் கொள்ள முடிகிற அளவுக்கு சிறுதொழிலாகவோ குறும் தொழிலாகவோ செய்து லாபமாக்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நெல்லை விளைவிக்கும் விவசாயிகள் அதை அரிசியாக்கும் பணியைச் செய்வதில்லை. விளைவித்து வியாபாரிகளின் கையில் போட்டு விட்டுத் தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.

நெல்லை விறகு அடுப்பில் ஆவாட்டி, படுதாவில் காய வைத்து, கைகுத்தலாகத் தயார் செய்யப்படும் அரிசி அவ்வளவு சுவையாக இருக்கும். அதற்கான உழைப்பும் மெனக்கெடலும் அதிகம். அதற்கு ஈடாகக் கொடுக்கும் விலையை விட ஐம்பது சதவீத குறைவுக்கு நீங்கள் சந்தையில் அரிசியை வாங்கி விட முடியும். பெரும் கொள்முதலிலும் இயந்திரங்களின் உருவாக்கத்திலும் மனித உழைப்பின் ஐம்பது சதவீதத்தைக் குறைத்து விட முடிகிறது. இப்படியாக மிகப் பல மக்கள் ஈடுபடக்கூடிய பல்வேறு சாத்தியக்கூறுகள் உள்ள விவசாயம் தற்போது குறைந்த மக்களும் இயந்திரங்களும் இருந்தால் போதுமானது என்ற நிலைக்குச் சிறுத்து விட்டது. கைத்தொழில் மற்றும் சிறுதொழில் வாய்ப்புகள் நிறைந்த விவசாயத்தைப் பெருவணிகக் கோட்பாட்டிலும் இயந்திரமயமாதலிலும் நாம் பலி கொடுத்து விட்டோம். இப்போது இருக்கும் விவசாயத்தை நீங்கள் இயந்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டே செய்யக் கூடிய நிலைமைகள் வந்து விட்டன. நெல் மூட்டைக்குக் கிடைத்த சரியான விலையை அந்தப் பெருவணிகக் கொள்முதலும் இயந்திரங்களும்தான் பிடுங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...