மறைந்து போன நிலங்களில் நிகழும் போராட்டங்கள்
ஆக்கிரமிப்பாளர்களும் மணல்
கொள்ளையர்களும் சேர்ந்து
காடொன்றை நதியொன்றைக் கொன்றழித்தார்கள்
மரண அரங்கேற்றத்தின் கருமாதிகளுக்குப்
பின்
பொங்கிப் பிரவகித்துச் செழித்தோங்கியது
மர வியாபாரமும் குடிநீர்
வியாபாரமும்
நதியின் நட்பும் காட்டின்
உறவும் இழந்த துக்கம் புரியாத மக்கள்
விறகு விலை ஏறியதற்காகவும்
குடிநீர் விலை கூடியதற்காகவும்
மழையும் மரமும் மறைந்து போன
நிலங்களில் நின்று
நாள்தோறும் ஆர்பாட்டம் செய்தார்கள்
மர வேரும் மன ஈரமும் அற்றுப்
போன பிரதேசங்களில்
உண்ணாவிரதம் இருந்து பார்த்தார்கள்
நதியோடிய பாதையில் வளைய வந்த
சாலையில் அமர்ந்து போராடத்
துவங்கினார்கள்
மரணித்து விட்ட காட்டின்
ஆன்மாவும் நதியின் ஆன்மாவும்
கெக்கலி கொட்டிச் சிரிக்க
ஆரம்பித்தன
*****
அறியாமையின் பூரணத்துவம்
பூரணத்துவ மகிழ்ச்சி அறியாமையில்
இருந்தது
அறியாமையைத் தேடி தேடி கொன்றழித்தவர்கள்
அறிதலில் மென்மேலும் முன்னேறிச்
செல்வதே
வெற்றி என்று விரட்டி விரட்டிக்
கற்பித்தார்கள்
அறிய அறிய உண்டான வெறுமையை
எப்படிப் போக்கிக் கொள்வதெனத்
தெரியாமல்
அவதிப்பட்டதைக் கண்டு கோழியைப்
போலக் கொக்கரித்தார்கள்
ஆந்தையைப் போலக் குழறி ஆர்ப்பரித்தார்கள்
அறிதலை விட்டு நிராதவராக
நின்ற
ஒரு நிர்கதி பொழுதில் எல்லாம்
கூடியது போல இருக்க
எல்லாம் வெடித்துச் சிதறிய
கனப்பொழுதில்
அறியாமையின் மகிழ்ச்சியில்
மூழ்கிக் கொண்டது மனம்
அறிந்தவர்களின் பரிகாசங்களை
நிர்தாட்சண்மாய் நிராகரித்த படி
*****
No comments:
Post a Comment