ஏன் அரசுப் பள்ளிகள் பின்தங்குகின்றன?
இப்படியும் நடக்குமா? இந்த
2023 ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கும் ஐம்பதாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
ஐம்பதாயிரம் என்ற எண்ணிக்கை மிகவும் அதிகம். இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சுமார் எட்டரை லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர்.
இவர்களில் ஐம்பதாயிரம் பேர் எழுதவில்லை என்பது சுமாராக 6 சதவீதத்தை நெருங்கக்கூடியது.
அதாவது நூற்று ஆறு பேர் தேர்வு எழுதவில்லை என்ற முடிவை நாம் பெறலாம்.
கொரோனா கால கட்டத்தைக் கடந்த
பிறகு பள்ளிகள் முழு கல்வியாண்டில் இயங்கி நடக்கும் முதல் பொதுத்தேர்வு இது என்பது
ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால் கொரோனா காலகட்டத்தில் அதிகரித்த கற்றல் இடைவெளியும்
இடைநிற்றலும் இந்தக் காரணத்தின் பின்னணியாகச் சொல்லப்படுகின்றன.
கொரோனா காலக் கட்டத்தில்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள்
பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் அச்சத்தால் தேர்வெழுத வராமல் இருந்து விட்டனர் என்பது மற்றொரு
பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது.
பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வில்
தேர்வு பெறாமல் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதலாம் என்பதால் பதினொன்றாம் வகுப்பில்
தேர்வு பெறாத மாணவர்கள் இந்தப் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வை எழுதாமல் இருந்து விட்டனர்
என்றும் ஒரு வகைக் காரணம் சொல்லப்படுகிறது.
மிகக் குறைந்த நாட்கள் வருகை
உள்ளோரையும் தேர்வு எழுத அனுமதித்ததன் காரணமாக அவர்கள் தேர்வுக்கும் வருகை தராமல் வருகை
தராதோரின் எண்ணிக்கையை ஐம்பதாயிரமாக அதிகரித்து விட்டனர் என்பது போன்ற ஒரு வகைக் காரணமும்
சொல்லப்படுகிறது.
குடும்ப வருமானத்துக்கு வழியில்லாத
மாணவர்கள் வேலைக்குச் சென்று விட்டதால் தேர்வு எழுத வரவில்லை என்பது போன்ற ஒரு வகைக்
காரணமும் சொல்லப்படுகிறது.
பனிரெண்டாம் வகுப்பில் இடைநின்ற
மாணவர்கள் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் போன்ற படிப்புகளுக்கு மாறி விட்டார்கள் என்பதால்
அவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பது போன்ற ஒரு வகைக் காரணமும் சொல்லப்படுகிறது.
இப்படி வகை வகையான காரணங்கள்
சொல்லப்பட்டுக் கொண்டு இருந்தாலும் உண்மைக் காரணத்தைக் கள ஆய்வின் மூலமாகத்தான் கண்டறிய
முடியும். மேலே சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் உத்தேச காரணங்கள்தான். சூழ்நிலை எப்படி
இருக்கிறது என்றால் உத்தேச காரணங்களையே உண்மைக் காரணங்களாக உறுதிப்படுத்தும் வகையில்
இருக்கிறது.
பொதுத்தேர்வுக்கு வருகை தராத
மாணவர்களின் எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.
தனியார் பள்ளிகளால் மாணவர்களைச் சரியாகத் தேர்வுக்கு வர வைக்க முடிகிற நிலையில் அரசுப்
பள்ளிகளால் ஏன் முடியவில்லை என்ற கேள்வியை இந்த இடத்தில் எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசுப் பள்ளிகளின் நிர்வாக
மற்றும் மேலாண்மைக் கட்டமைப்பு முறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா
என்ற வினாவையும் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அரசுப் பள்ளிகள் என்பன மிகப்பெரிய
அரசாங்கம் தழுவிய கட்டமைப்பில் இருப்பவை. கண்காணிக்க பல்வேறு அதிகாரிகளையும் குழுக்களையும்
கொண்டு இயங்குபவை. இருந்தும் இப்படியொரு நிலை – தேர்வு எழுதாதோரின் எண்ணிக்கை அதிகரித்த
ஒரு நிலை உண்டாகியிருக்கிறது. இப்படியொரு நிலை ஏற்படும் என்பது இலைமறைக் காயாக அரசுப்
பள்ளி நிர்வாகத்தில் இருப்போருக்குத் தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கும்.
புயல் அடிப்பதைத் தடுக்க
முடியாது என்றாலும் புயலை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து கொள்ள
முடியும் அல்லவா. அப்படி இது போன்ற தவிர்க்க முடியாத நிலைகளைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளைக்
கொஞ்சமேனும் முன்னெடுத்திருக்க முடியும். ஆனாலும் கல்விப் பிரச்சனைகளையும் சவால்களையும்
மெத்தமனமாக அணுகும் கல்வி மேலாண்மை அமைப்புகளால் இது முடியாமலும் போகலாம்.
இன்றைய கல்வி நிர்வாகத்தைத்
துல்லியமாகக் கண்காணிக்கக் கூடிய வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கின்றன. அரசாங்கமே
EMIS என்ற பெயரில் கல்வி மேலாண்மை தகவல் முறைமையைப் பின்பற்றுகிறது. இம்மேலாண்மை தகவல்
முறைமையைக் கொண்டு பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்களையும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு
வராத மாணவர்களின் விவரங்களையும் தலைமையகமான சென்னையில் இருந்தபடியே துல்லியமாகக் கண்டறிய
முடியும். வருகை தராத மாணவர்களின் பொருளாதார, சமூகப் பின்புலத்தையும் மாவட்ட வாரியாக,
கிராம மற்றும் நகர வாரியாக என்று பல்வேறு வகைமைகளில் மதிப்பிட முடியும்.
இவற்றுடன் வேறு சில நடைமுறை
எதார்த்தங்களும் பிரச்சனைகளும் புலனம், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக தினம் தினம்
வெளியாகின்றன. அவற்றில் குறிப்பாக சிலவற்றைக் குறிப்பிடலாம் என்றால், வகுப்பறையில்
மாணவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், மது அருந்தி விட்டு வகுப்பறைக்கு வருதல்,
மாணவர்களுக்கு இடையே நடக்கும் அடிதடிகள், ஆசிரியரைத் தாக்கும் சம்பவங்கள், எதிர்பாராத
விபத்தைப் போல நடந்து விடுகின்ற மாணவர்களின் மரணங்கள் எனப் பலவும் காணொளிகளாகச் சமூக
ஊடகங்களில் வெளியாகின்றன. இவற்றை எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளின்
மேலாண்மை முறைமைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் என்னவென்று பார்த்தால்
என்னவாக இருக்கும்?
அரசுப் பள்ளிகளின் மிக முக்கியமான
பிரச்சனையாக மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது. குறைந்து போன மாணவர்
எண்ணிக்கையில் தேர்வு எழுத வராதோரின் எண்ணிக்கை மிகவும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது.
பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளிடம் என்னதான் எதிர்பார்க்கிறார்கள், அரசுப் பள்ளிகளில்
எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்? என்பதற்கான கருத்துக் கணிப்பை எடுக்க
வேண்டிய நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
இலவசமாகக் கிடைக்கும் ஒன்றை
யார்தான் தவிர்க்க நினைப்பார்கள் எனும் போது இலவசமாக அரசு கொடுக்கும் கல்வியைப் பெரும்பாலான
பெற்றோர்கள் ஏன் தவிர்க்க நினைக்கிறார்கள்? அரசே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் படிப்புகளில்
7.5 இட ஒதுக்கீடு தருகிறது. அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இருக்கும்
சமனின்மையை அரசே இதன் மூலம் ஒத்துக் கொள்கிறது என்று பொருள்படுமா இது? இப்படிச் சமன்
செய்ய வேண்டிய அளவுக்கு அரசுப் பள்ளிகளில் அப்படியென்ன தரக்குறைவு நிகழ்ந்து விட்டது?
அரசே தன்னுடைய அரசுப் பள்ளிகள் குறித்து யோசித்து முடிவு செய்ய வேண்டிய இடங்கள் இவை
எனலாம்.
அரசுப் பள்ளிகளுக்காக மிக
அதிக அளவில் செலவு செய்வதாக அரசு சொல்கிறது என்றால் அந்தச் செலவினங்கள் தரமாக இருக்கிறதா?
தரமாக இல்லாவிட்டால் அதற்கான நடவடிக்கைகள் என்ன? என்பதை முடிவு செய்து அரசு இயங்க வேண்டிய
நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு
அணுக்கமானவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளின் தர மேம்பாட்டிற்காகத்தான் அரசுப் பள்ளிகளின்
தரம் தாழ்த்தப்படுவதாக ஒரு கருத்தும் பரவலாகப் பலரால் முன் வைக்கப்படுகிறது.
அரசே செலவு செய்து நீண்ட
காலம் கல்வியைக் கொடுக்க முடியாது என்பதால் தனியார் பள்ளிகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பதற்காகத்தான்
அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்த்தப்படுகிறது என்று மற்றொரு கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
இக்காரணங்களும் உத்தேச காரணங்களாக
இருக்கலாம். உண்மையான காரணம் வேறாகவும் இருக்கலாம். மேலே சொல்லப்பட்ட உத்தேச காரணங்கள்
உண்மை காரணங்களாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எல்லாருடைய ஆசையும்.
*****
No comments:
Post a Comment