7 Apr 2023

எந்தப் புத்தகத்தையும் ஒரு நாள் வாசித்து விடலாம்!

எந்தப் புத்தகத்தையும் ஒரு நாள் வாசித்து விடலாம்!

மனதின் கண்ணோட்டத்தில் பெரிய வேலைகள் என்று சில இருக்கின்றன. முடியாத வேலைகள் என்றும் சில இருக்கின்றன. உண்மையில் சில வேலைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது ஆகாத காரியங்களாக இருந்தாலும் சிறுக சிறுகச் செய்யும் போது பெரிய வேலைகள் சிறிது சிறிதாகக் குறைந்து முடிவில் சிறியதாகி முடிந்து விடுகின்றன, ஆகாத காரியங்களும் ஆகின்ற காரியங்களாகி விடுகின்றன.

இதில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன. வேலையைச் சிறிய பகுதியாகப் பிரித்துக் கொண்டு செய்வது. மற்றொன்று சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்ட வேலைகளைத் தொடர்ச்சியாகச் செய்து முடிப்பது.

சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்ட வேலையை ஒரு நாள் செய்து விட்டு மறுநாள் செய்யாமல் விட்டு விட்டால் சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்ட பகுதிகள் மீண்டும் ஒன்றிணைந்து பெரிய வேலைக்கான தோற்றத்தை உருவாக்கி விடும் என்பதால் தொடர்ச்சியாகச் செய்வது இதில் முக்கியம்.

ஒரு புத்தகத்தைப் படிக்க இந்த முறை நிச்சயமாகப் பெரிய அளவில் உதவும். எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும் அவற்றைப் பக்கம் பக்கமாகப் பிரித்துக் கொள்ள முடியும். அதை விட இன்னும் வசதியாகப் பத்தி பத்தியாகப் பிரித்துக் கொள்ள முடியும். வரி வரியாகவும் பிரித்துக் கொள்ளலாம். தினந்தோறும் ஒவ்வொரு வரியாகப் படித்துக் கொண்டே போனாலும் அந்தப் புத்தகத்தை வாசித்து விட முடியும். இதுதான் இந்த அணுகுமுறையின் சிறப்பு. பத்தி பத்தியாக வாசித்தும் முடித்து விடலாம். பக்கம் பக்கமாக வாசித்தும் முடித்து விடலாம். வரி வரியாகவோ அல்லது பத்தி பத்தியாகவோ அல்லது பக்கம் பக்கமாகவோ அல்லது ஒரே மூச்சில் வாசிப்பதில் முடிக்கும் கால அளவு வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் நிச்சயம் முடித்து விடலாம்.

ஒரே மூச்சில் ஒரு காரியத்தை முடிப்பது பலருக்கு விருப்பமானதாக இருக்கலாம். அது எல்லா காரியங்களிலும் முடியாது. அதுவும் மனதுக்கு விருப்பம் இல்லாத ஆனால் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய காரியங்களில் அது சாத்தியம் ஆகாமல் கூட போகலாம். அது போன்ற நிலைமைகளில் அந்த வேலையைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டுத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருப்பதனால் அந்த வேலையை நிச்சயமாகச் செய்து முடிக்க முடியும். படிக்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் புத்தகங்களைப் படிப்பதற்கு இந்த முறையைப் போன்ற அற்புதமான முறை வேறொன்று இருக்க முடியாது.

தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களைப் பார்ப்பதை எடுத்துக் கொண்டால் ஒரே மூச்சில் நாம் அதைப் பார்த்து முடித்து விடுவதில்லை. ஒவ்வொரு நாளாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். வருடக் கணக்கில் கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பார்த்து முடித்து விடுகிறோம். புத்தகங்களையும் இதே போல ஒவ்வொரு நாளாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருந்தால் எவ்வளவு பெரிய புத்தகத்தையும் அதாவது படிக்க முடியாது என்று கருதும் புத்தகங்களையும் படித்து முடித்து விடலாம்.

அவ்வபோது அலைபேசியை நோண்டி புலனத்தையும் முகநூலையும் பார்ப்பது போல புத்தகத்தை அவ்வபோது எடுத்து ஒரு சில வரிகள் படித்துக் கொண்டிருந்தாலும் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்து விடலாம். ஒரு சில வரிகள்தானே படிக்கிறோம் என்று அந்த முயற்சியில் அளவைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஒரே நாளில் பத்து முறை ஒரு சில வரிகள் என்ற கணக்கில் போனால் அது சில பக்கங்களைப் படிக்க செய்து விடும். இப்படியே ஒவ்வொரு நாளும் சில பக்கங்கள் என்ற வீதத்தில் படித்துக் கொண்டு போனால் ஒரு சில வாரங்களிலோ, மாதங்களிலோ அந்தப் புத்தகத்தை உங்களையறியாமல் வாசித்து முடித்திருப்பீர்கள்.

இப்படி எதையும் கொஞ்சம் கொஞ்சமாக அதை அளவில் குறைவு என்று நினைக்காமல் தொடர்ச்சியாகச் செய்து கொண்டே இருந்தால் இமயமலையையும் ஒரு நாள் இன்னொரு இடத்திற்கு நகர்த்தி வைத்து விடலாம். மலையையே மலைப்பின்றி இன்னொரு இடத்தில் தூக்கி வைத்து விடலாம் எனும் போது புத்தகம் படிப்பது அப்படியொன்றும் சுமையான காரியம் அல்ல. ஒவ்வொரு வரியாகத் தொடங்கித் தொடர்ந்தாலும் போதும் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஒரு நாளில் நீங்கள் வாசித்து முடித்திருப்பீர்கள். ஆம் ஒரு நாளும் முடியாது என்று நீங்கள் நினைத்த ஒன்று ஒரு நாளில் முடிந்திருக்கும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...